Published:Updated:

பிஎம் கேர்ஸ்: `5 நாளில் 3,076 கோடி ரூபாய்!’ - நன்கொடையாளர்கள் பெயரைக் கேட்கும் காங்கிரஸ்

மோடி
மோடி

`மார்ச் 26 முதல் 31-ம் தேதி வரை, ஐந்து நாள்களில் PM CARES FUND நிதிக்கு ரூ. 3,076 கோடி நன்கொடை கிடைத்ததாக அதன் தணிக்கையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த தாராள நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட மாட்டார்களாம். அது ஏன்..?'

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனுடன், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள, பொதுமக்களிடம் `பிஎம் கேர்ஸ்’ என்ற பெயரில் நன்கொடையும் பெறப்பட்டு வருகிறது. மே மாதத்தில் `மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர் தயாரிக்கும் பணிக்கு 3,000 கோடி ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎம் கேர்ஸ்
பிஎம் கேர்ஸ்

பிஎம் கேர்ஸ் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. இதில் பெறப்பட்ட தொகைகள் குறித்தோ மற்ற தகவல்கள் குறித்தோ வெளிப்படையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் கேட்டும், தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனால் மத்திய அரசின் மீது பிஎம் கேர்ஸ் தொடர்பாக தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?

இது தொடர்பாக சில வழக்குகள் தொடரப்பட்டு, அவையும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பிஎம் கேர்ஸ் தொடர்பான அறிவிப்பு வந்ததும், பல்வேறு செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கினர். என்றாலும், பிஎம் கேர்ஸ் கணக்கில் வந்த பணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தன. இந்த நிலையில் தற்போது மார்ச் 31 வரையிலான பிஎம் கேர்ஸ் கணக்கின் தணிக்கை அறிக்கை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தணிக்கை
தணிக்கை

அந்த அறிக்கையின்படி, மார்ச் மாதம் 31 -ம் தேதி வரை ரூ.3,076 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. ரூ. 30,75,85,32,045 இந்தியாவிலிருந்தும், ரூ. 39,67,748 வெளிநாட்டில் இருந்தும் பெறப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மார்ச் 31 -ம் தேதிக்குப் பிறகு, பெறப்பட்ட நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே காங்கிரஸ், `நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை ஏன் வெளியிடவில்லை?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ``மார்ச் 26 முதல் 31 வரை, ஐந்து நாள்களில் PM CARES FUND நிதிக்கு ரூ. 3,076 கோடி கிடைத்ததாக அதன் தணிக்கையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த தாராள நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட மாட்டார்களாம். அது ஏன்..?

ஒவ்வொரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும், அறக்கட்டளையும் ஒரு குறிப்பிட்ட தொகையைவிட அதிகமாக பங்களிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. PM CARES FUND இந்த கடமையிலிருந்து விலகியது ஏன்? நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட ஏன் பயப்படுகிறீர்கள்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?
அடுத்த கட்டுரைக்கு