Published:Updated:

'சூடு பிடிக்கும் 'மராத்தா' இன இட ஒதுக்கீடு விவகாரம்'- மோடியை விமர்சித்த மகாராஷ்டிர பாஜக தலைவர்!

சச்சின் டிவிட்டரில் வெளியிட்ட படம்
சச்சின் டிவிட்டரில் வெளியிட்ட படம்

பிரதமர் நரேந்திரமோடி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் பிரியங்கா சோப்ராவை சந்திக்க நேரம் இருக்கும். ஆனால் சத்ரபதி சிவாஜியின் வாரிசான சத்ரபதி சாம்பாஜி ராஜேயை சந்திக்க நேரம் இருக்காது என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மகாராஷ்டிராவில் மராத்தா இன மக்களுக்கு மாநில அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. ஆனால் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதனை ரத்து செய்துவிட்டது. இதனால் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர் சத்ரபதி சாம்பாஜி ராஜே இது குறித்து பேச பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரம் கேட்டிருந்தார்.

சாம்பாஜி ராஜே
சாம்பாஜி ராஜே

ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையை பிரதமர் மாநில பிரச்னையாக பார்க்கிறார். அதனால் இது குறித்து பிரதமரை சந்தித்து பேசி என்ன பயன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் நேரடி வாரிசான சத்ரபதி சாம்பாஜி ராஜே தனக்கு பிரதமர் நேரம் ஒதுக்காதது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன்பு பாஜக ஆட்சியில் இருந்த போதுதான் இந்த மராத்தா இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் சென்று போராடி பாஜக இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. ஆனால் இப்போது சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருப்பதால் அதில் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மும்பை காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், 'பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகைகள் கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ராவை சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால் சத்ரபதி சாம்பாஜி ராஜேயை சந்திக்க மட்டும் நேரம் இருக்காது. சாம்பாஜி ராஜே மராத்தா இட ஒதுக்கீடு குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டிருந்தார். ஆனால் இந்த நடிகைகள் எதற்காக மோடியை சந்தித்தனர். அவர்களை சந்திக்க மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சாம்பாஜி ராஜேயை சந்திக்க அனுமதி மறுத்ததன் மூலம் நரேந்திரமோடி மகாராஷ்டிராவை இழிவுபடுத்திவிட்டார். பிரதமர் மோடிக்கு மராத்தா இட ஒதுக்கீடு பற்றி தெரியாது என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்திருப்பது இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தியவர்களின் காயத்தில் உப்பை அள்ளிப்போட்டதாக அமையும்" என்று சச்சின் சாவந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு பிரதமர் மோடி பாலிவுட் பிரபலங்களை சந்தித்த புகைப்படங்களையும் சச்சின் சாவந்த் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் இதற்காக டெல்லியில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கும் போலீசார் சென்று நோட்டீஸ் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த கட்டுரைக்கு