Published:Updated:

மத்திய, மாநில ஆட்சித் தலைமையில் 20 ஆண்டுகள்- மோடியின் 'இமேஜ்' கூடியிருக்கிறதா, குறைந்திருக்கிறதா?

குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள், இந்தியப் பிரதமராக 7 ஆண்டுகள் என தனது ஆட்சியைத் தொடர்ந்து வரும் மோடி, அக்டோபர் 7, 2021-ல் இடைவெளியற்ற தனது இருபதாண்டுகால அரசியல் தலைமைப்பொறுப்பை நிறைவுசெய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அக்டோபர் 7, 2001 சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார் மோடி. அன்று முதல் குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளைக்கழித்தும், இந்தியப் பிரதமராக 7 ஆண்டுகளைக்கடந்தும் தனது ஆட்சியைத் தொடர்ந்து வரும் மோடி, அக்டோபர் 7, 2021-ல் இடைவெளியற்ற தனது இருபதாண்டுகால அரசியல் தலைமைப்பொறுப்பை நிறைவுசெய்திருக்கிறார்.

2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதையடுத்து, நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மோடி முதன்முறையாக குஜராத் முதல்வராக தனது தலைமைப் பொறுப்பை ஏற்றார். பதவியேற்ற ஆண்டே, குஜராத் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவுகளிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மிகத்தீவிரமாக இறங்கினார்.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற போது...
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற போது...

ஆனால், அதற்கடுத்த ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் மோடிக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தச் சூழலில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மோடி, மீண்டும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டாவது முறையாக முதல்வரானார்.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு

பின்தங்கிய நிலையிலிருக்கும் குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வேன் என சூளுரைத்தார்.

அடுத்தடுத்த நடந்த 2007, 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று, தொடர்ந்து நான்கு முறை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், குஜராத் மாநிலத்தின் மிக நீண்டகால முதல்வர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

  மோடி
மோடி

மோடி குஜராத் மாநிலத்தில் கொண்டுவந்த திட்டங்கள், ஏற்படுத்திய புதுவிதமான மாற்றங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து ``மோடியின் குஜராத் மாடல்" என்ற பிரசாரத்தை தேசிய அளவில் முன்வைத்தது பாஜக. அதோடு, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தது. தென்னகம் தவிர நாடெங்கும் இந்த பிரசாரம் கைகொடுக்க பத்தாண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.

மோடி பதவியேற்பு
மோடி பதவியேற்பு

மோடி தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக கூட்டணி 336 மக்களவை இடங்களில் அமோக வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. முதன்முறையாக இந்தியாவின் பிரதமரானார் மோடி. அதேபோல், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலிலும், மோடியை தலைமையேற்று தேர்தலை சந்தித்த பாஜக, 303 மக்களவை இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. தற்போது மோடி இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமராக தொடர்ந்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்குமுறை முதல்வர், இரண்டுமுறை பிரதமர் என தனது இருபது ஆண்டுகால தலைமைப் பொறுப்பில், மோடியின் நிர்வாகம், ஆட்சி முறை எப்படி இருந்தது? இந்திய மக்கள் மத்தியிலும், உலக அளவிலும் மோடியின் `இமேஜ்' எப்படி என்ன நிலையில் இருக்கிறது என்பதைப்பற்றி கருத்தறிய, பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடமும், சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடமும் பேசினோம்.

மோடியின் 'இமேஜ்' கூடியிருக்கிறது - நாராயணன் திருப்பதி, பாஜக:

``இருபதாண்டுகளுக்கு முன்பு மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் பிரதமராகத் தொடரும் இன்று வரையிலும் மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, முன்னேற்றத்திற்காகவே உழைத்து வருகிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

குஜராத்தைப் பொறுத்தவரை, பின்தங்கிய நிலையில் இருந்த மாநிலத்தை வளர்ச்சிப்பதையை நோக்கி நகர்த்தினார். கல்வி, குடிநீர், மின்சாரம், விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் பிறமாநிலங்களுக்கு இணையாக குஜராத்தை முன்னேற்றிக்காட்டினார். பல லட்சக்கணக்கான தடுப்பணைகளைக்கட்டி, 24 மணிநேரமும் மின்சாரத்தைக்கொடுத்து குஜராத்தை விவசாயத்தை செழிப்படையச் செய்திருக்கிறார். அந்த வளர்ச்சியைத்தான் 2014-ம் ஆண்டில் இந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்றுக்கொண்டது முதல் நாடுமுழுமைக்கும் விரிவுபடுத்தி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் உண்டாகும் நோய்த்தொற்றினால் ஆண்டுமுழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள் என்ற ஆய்வின் அடிப்படையில், `தூய்மை இந்தியா' திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் கழிப்பறை கட்டிக்கொடுத்து, இறப்பு விகிதத்தைக் குறைத்தார்.

தூய்மை இந்தியா - மோடி
தூய்மை இந்தியா - மோடி

அதேபோல், அனைத்து இந்திய மக்களும் வங்கிக்கணக்கைத் தொடங்கும் விதமாக `ஜன் தன் யோஜனா' திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். பட்டியலின, பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் `ஸ்டாண்ட்-அப் இந்தியா' திட்டம், பெண் குழந்தைகளுக்காக `செல்வமகள் சேமிப்புத்' திட்டம், தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கும் `முத்ரா திட்டம்' எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார். மேலும், ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் விதமாக `ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இது எல்லாவற்றையும் விட, 2014-ம் ஆண்டில் 70 ஆயிரமாக இருந்த தனிமனித வருமானம் 2020-ல் 1 லட்சத்து 15 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இப்படி, கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் கட்டமைப்புகளை பெருக்கி இந்தியா ஒரு மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவாக அனைத்து விஷயங்களையும் செய்திருக்கிறார்.

 பிரதம மந்திரி `ஜன் தன் யோஜனா’
பிரதம மந்திரி `ஜன் தன் யோஜனா’

வளர்ச்சித்திட்டங்கள் மட்டுமல்லாமல் பாஜகவின் அடிப்படை ஆதாரக்கொள்கைகளான ராமஜென்ம பூமி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கம், முத்தலாக் நீக்கம் போன்றவற்றை மிகத் திறமையாகக் கையாண்டு சாதித்துக்காட்டியிருக்கிறார். உலகமே தடுப்பூசிகளைத் தயாரிக்க தடுமாறிக்கொண்டிருக்கும்போது, இந்தியா கிட்டதட்ட 100 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்து சாதித்திருக்கிறது. இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. இதனால் இந்தியா உலகையே காக்கும் மிகப்பெரிய நாடாக உருமாறியிருக்கிறது.

மோடி
மோடி

பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்தோ-பசுபிக் பிரச்னையில் சீனாவை சமாளிப்பது, நட்பு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது என உலக அரங்கில் இந்தியாவை மோடி தலைநிமிரச்செய்திருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் மோடியின் `இமேஜ்' இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் உயர்ந்திருக்கிறது.

மோடிக்கு முதலில் என்ன 'இமேஜ்' இருக்கிறது - கே.கனகராஜ், சிபிஎம்:

`மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்து குஜராத் முதல்வராக வந்தார். அவரது ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளும், மதக்கலவரங்களும்தான் நடந்தது. மோடி வளர்ச்சியை ஏற்படுத்தினார் என்றால் அமெரிக்கா ஏன் அப்போது மோடிக்கு விசா தர மறுத்தது? மோடி மக்களுக்குச் செய்த நன்மைகளைப்பற்றி சொல்லச்சொன்னால், கல்லிச்செடியில் மல்லிகைப்பூவைத் தேடுவதற்குச் சமம் என்பேன். அவர் என்ன செய்தார்? அவர் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற எல்லா திட்டமும் தோல்விதான். மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. GST வரியைக் கொண்டுவந்து சிறு குறு தொழில்களை முற்றிலுமாக ஒழித்தார். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய GST நிலுவைத்தொகையைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கி மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்தை அனைத்துவிதத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கார். இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த உச்சநீதி மன்றத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதியை சிதைத்திருக்கிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே அதற்கு சாட்சி.

கனகராஜ்
கனகராஜ்

கொரோனா தொற்று காலத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தனர். நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றது. அதேசமயம், மோடியின் உற்ற நண்பர்களாக அதானி, அம்பானியின் சொத்துமதிப்புகள் பன்மடங்கு அதிகரித்தது. அதேபோல், எல்.ஐ.சி., ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார். இதில் எங்கு சுயசார்பு இந்தியா இருக்கிறது?

லக்கிம்பூர் விவசாயிகளின் கொலைக்கு நீடிக்கும் அமைதி; இதுதான் உங்கள் பதிலா மோடி?
 மோடி-அதானி
மோடி-அதானி

மோடி கொண்டுவந்திருக்கும் திட்டத்தினால் இந்தியாவில் உற்பத்தி அதிகரித்திருக்கிறது, வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறது, எல்லா துறைகளும் முன்னேறியிருக்கிறது, இந்தியா தன்னிறைவை பெற்று வருகிறது என சும்மா அடிச்சி விடுகிறார்கள். அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? Data எங்கிருக்கிறது? மோடி கொண்டுவந்த திட்டத்தால் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள் என ஒரு 4 திட்டங்களை புள்ளிவிவரங்களோடு சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் எழுதுவது, பேசுவதுதான் Data! உலகம் முழுவது தடுப்பூசி ஏற்றுமதி செய்துவருகிறோம் என தம்பட்டம் அடிக்கிறார்கள், ஆனால் சொந்தநாட்டின் மாநிலங்களுக்கு கேட்ட தடுப்பூசியை முறையாக வழங்கினாரா மோடி?

PM Cares மூலம் கொரோனா நிதி திரட்டுவதாகக்கூறினார். மக்களின் பணத்தையும், அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்து உதவினர். ஆனால் இப்போது, அது அரசு நிறுவனமே அல்ல, அந்த நிதி எவ்வளவு என்று வெளியில் சொல்ல முடியாது எனக்கூறி மக்கள் பணத்தை மோசடி செய்திருக்கிறார்.

பி எம் கேர்ஸ்
பி எம் கேர்ஸ்

உண்மையில் மோடி ஒரு செயல்படும் சுமை! அவர் 20 ஆண்டு அரசியல் பணியில் ஒருமுறை கூட ஓய்வெடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அப்படி என்ன பணி செய்தார் அதனால் நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை பேசமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மோடி செய்வது எல்லாமே சாதனைகள்தான். எது சரி எது தவறு என்பதையெல்லாம் பார்க்க மட்டார்கள், அவர் அழித்தவற்றைக்கூட பெருமையாகப் பேசுவார்கள்.

மோடி
மோடி

மோடி ஒரு சாதனையை மட்டும் சிறப்பாக செய்து வருகிறார். அது தான்செய்யாத சாதனையை செய்ததுபோல வெளியில் காட்டிக்கொள்வது தான் அவருடைய மிகப்பெரும் சாதனை. முதலில் மோடிக்கு என்ன இமேஜ் இருக்கிறது? அவர் ஒரு பேரிடர் மட்டுமே! பேராற்றல் கிடையாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு