Published:Updated:

`வெங்கைய நாயுடுவே அன்புமணியைப் பாராட்டினார்!' -ஊடக நிறுவனம் மீதான தாக்குதலுக்கு பா.ம.க சொல்வது என்ன?

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மக்கள் பிரதிநிதியான ஒரு எம்.பி, நாடாளுமன்ற கூட்டங்களையே புறக்கணிப்பதும், ஓரிரு நாள்கள் மட்டும் கலந்துகொள்வதும், அவர் மக்கள் பணியில் அக்கறை காட்டவில்லை என்பதையே நிரூபிக்கிறது.

மாநிலங்களங்களவையில் அன்புமணி ராமதாஸ் 15 விழுக்காடு மட்டுமே வருகைப் பதிவேட்டில் கலந்துகொண்டதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியால் கோபமடைந்த பா.ம.க-வினர் அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அன்புமணி
அன்புமணி

`பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை' என்றும், `சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வாக்கெடுப்பின்போது மட்டும் கலந்துகொண்டு இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தார்' என்றும் `மற்ற நாள்களில் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை' என்றும் விமர்சித்து`டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தியால் கோபமடைந்த பா.ம.க தரப்பினர் வினோபா பூபதி என்றவரின் தலைமையில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களையும் செய்தியாளர்களையும் மிரட்டி அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

இதுகுறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ` நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வருகைப் பதிவேட்டில் உள்ள விவரங்கள், அவர்கள் ஆற்றிய உரைகள், அவர்கள் கேட்ட கேள்விகள், அவர்கள் முன்மொழிந்த தீர்மானங்கள் - சட்டமுன் வடிவுகள் ஆகியவற்றைத் தொகுத்து ஒவ்வொரு உறுப்பினர் பற்றியும் செய்தி வெளியிடுவது வழக்கமான நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

நான் எம்.பி-யாக இருந்தபோதுகூட என்னைப் பற்றியும் நான் எத்தனை நாள் கூட்டத் தொடரில் கலந்துகொண்டேன் - எத்தனை கேள்விகள் கேட்டேன் - எத்தனை முறை உரையாற்றினேன் என்ற விவரங்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வார இதழில், அ.தி.மு.க எம்.பி-க்கள் 37 பேர்களின் நாடாளுமன்றப் பணிகள் குறித்து விரிவாகத் தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார்கள். இது அவர்களின் உரிமை. அதில் தவறு இருந்தால், அது தவறு என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, மறுப்புச் செய்தி வெளியிடச் சொல்லலாம்.

அதைவிட்டுவிட்டு, மக்கள் பிரதிநிதியான ஒரு எம்.பி, நாடாளுமன்ற கூட்டங்களையே புறக்கணிப்பதும், ஓரிரு நாள்கள் மட்டும் கலந்துகொள்வதும், அவர் மக்கள் பணியில் அக்கறை காட்டவில்லை என்பதையே நிரூபிக்கிறது. அந்த உண்மைச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பதை ஏற்க முடியாது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 வழக்கறிஞர் பாலு
வழக்கறிஞர் பாலு

ஆங்கில நாளேடு அலுவலகத்தின் மீதான தாக்குதல் குறித்துப் பேசியுள்ள பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, ``இது அப்பட்டமான பொய். ஒரு சில பத்திரிகையாளர்களும் உண்மைத்தன்மை தெரியாமல் தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் மாநிலங்களவையில் கடந்த இரு கூட்டத்தொடரில் இருவிவாதங்களில் மட்டுமே கலந்துகொண்டார் என்றும் ஒருவினா கூட எழுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த விவரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற மாநிலங்களவையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த விவரங்கள் அனைத்தும் பொய்யானவை தவறானவை. மாநிலங்கள் அவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவி வெப்பமயமாதல், காவிரி - கோதாவரி இணைப்பு விவகாரம், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்குக் கூடுதல் நிதிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற நான்கு முக்கியமான கோரிக்கைகள் குறித்து அன்புமணி பேசியிருக்கிறார்.

இதற்கு மாநிலங்கள் அவைத்தலைவர் வெங்கைய நாயுடு வெகுவாக பாராட்டியுள்ளதோடு, வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை என்ற கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 10 வினாக்கள் எழுப்பியுள்ளார். இதில் நான்கு வினாக்களுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

கூட்டத்தொடர் முடிந்துவிட்டதால் மீதம் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் மாநிலங்களவையின் இணையதளத்தில் உள்ளது. இதுபோன்று உண்மையான செய்திகளை மறைத்து தவறான செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

அன்புமணி, ஸ்டாலின்
அன்புமணி, ஸ்டாலின்

ஒரு செய்தியை வெளியிடும்போது அந்தக் கட்சி தரப்பில் கருத்து கேட்க வேண்டாமா. இது எதையும் கேட்காமல் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஊடகத்தின் பிரதிநிதிகளிடமும் இதுகுறித்து நாங்கள் விளக்கியிருக்கிறோம். இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி அடிக்கமுடியும், மிரட்ட முடியும். தேர்தல் நேரம் என்பதால் எங்களை டேமேஜ் செய்யப் பார்க்கிறது தி.மு.க" எனக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு