Election bannerElection banner
Published:Updated:

அரியலூர்: `நடிப்புக்கு மட்டுமே மதிப்பு’ - கட்சியிலிருந்து விலகிய பா.ம.க நிர்வாகி வைத்தி

பா.ம.க கட்சியிலிருந்து விலகிய வைத்தி
பா.ம.க கட்சியிலிருந்து விலகிய வைத்தி ( ம.அரவிந்த் )

ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு விசுவாசமாகச் செயல்பட்டார் வைத்தி. இந்தநிலையில் காடுவெட்டி குரு குடும்பத்தினர் ராமதாஸுக்கு எதிராகச் செயல்பட தொடங்கிய நிலையில் பா.ம.க தலைமை வைத்தியை வைத்தே அவர்களை எதிர்கொண்டது.

பா.ம.க-வில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் வன்னியர் சங்க மாநிலச் செயலாளரான வைத்தி என்பவர் `பா.ம.க-வில் உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு’ என முகநூலில் பதிவிட்டு பா.ம.க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அந்தக் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அ.தி.மு.க கூட்டணியில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வன்னியர் சங்க மாநிலச் செயலாளரான வைத்தி அந்தப் பொறுப்பிலிருந்தும், பா.ம.க-விலிருந்தும் விலகுவதாகத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் விசாரித்தோம், வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவால் வளர்க்கப்பட்டவர் வைத்தி. குரு மறைவுக்குப் பிறகு ராமதாஸும் அன்புமணியும் பா.ம.க-வில் மாநிலத் துணை பொதுச்செயலாளராக இருந்த வைத்திக்கு வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்பை வழங்கினர்.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

பா.ம.க-வுக்கும், ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கும் விசுவாசமாகச் செயல்பட்டார் வைத்தி. இந்தநிலையில் காடுவெட்டி குரு குடும்பத்தினர் ராமதாஸுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கிய நிலையில் பா.ம.க தலைமை வைத்தியைவைத்தே அவர்களை எதிர்கொண்டது. அத்துடன் காடுவெட்டி குருவுக்கு மாற்றாக அந்தப் பகுதியில் வைத்தியை வளர்த்தனர். காடுவெட்டி குரு மகன் கனலரசனுக்கும், பா.ம.க தரப்புக்கும் ஏற்பட்ட மோதலின்போது காடுவெட்டி குருவின் அக்கா மகன் மதன் தாக்கப்பட்டார்.

அப்போது ராமதாஸ் தூண்டுதலின் பேரில் வைத்தி தலைமையிலானவர்கள் கனலரசனைத் தாக்கவந்ததாக, காடுவெட்டி குரு குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். அத்துடன் குருதான் வைத்தியை வளர்த்தார். ஆனால் வைத்தி, காடுவெட்டி குருவுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அப்போது கூறிவந்தனர்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

இதை எதையுமே கவனத்தில்கொள்ளாத வைத்தி, பா.ம.க-வுக்கு விசுவாசமாகச் செயல்பட்டார். அன்புமணியும் வைத்திக்குப் பெரும் முக்கியத்துவத்தை அளித்தார். இந்தநிலையில் வைத்தி ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். தனக்குத்தான் சீட் கிடைக்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஜெயங்கொண்டம் பகுதியில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், பா.ம.க-வினர் எனப் பலரும் வைத்திக்குத்தான் சீட் கிடைக்கும் எனவும் கூறிவந்தனர். ஆனால், இறுதி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை... ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டார்.

காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு
எம்.திலீபன்

தனக்கு சீட் கிடைக்கும் என எண்ணியிருந்த வைத்திக்கு இது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, `உழைப்புக்கு மதிப்பில்லை; நடிப்புக்கு மட்டுமே மதிப்பு’ என்ற தலைப்பில் `வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் பதவியிலிருந்தும், பா.ம.க-விலிருந்தும் விலகுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த பா.ம.க-வினருக்கும், வன்னியர் சங்கத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தனது முகநூலில் பதிவிட்டுவிட்டு கட்சியைவிட்டு விலகியிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அவரின் இந்த முடிவு பா.ம.க-வைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தயிருக்கிறது. முகநூல் பதிவைப் பார்த்த பலரும், `இப்படி ஒரு முடிவை எடுக்காதீர்கள். பொறுமையாக இருங்கள்’ எனச் சமாதானம் செய்யும் நோக்கத்தில் வைத்தியிடம் பேசினர். ஆனாலும் தன் முடிவில் மாற்றமில்லை என வைத்தி கூறியதாகத் தெரிகிறது.

பா.ம.க கட்சியிலிருந்து விலகிய வைத்தி
பா.ம.க கட்சியிலிருந்து விலகிய வைத்தி

ஏற்கெனவே காடுவெட்டி குரு குடும்பத்தினர் அவர் மறைவுக்குப் பிறகு பா.ம.க-வுக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றனர். குரு மகன் கனலரசன் `மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருவதுடன், பா.ம.க-வுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். இப்போது வைத்தி கட்சியைவிட்டு விலகியிருக்கிறார். இது நிச்சயம் ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க-வுக்கு பாதிப்பை உண்டாக்கும் எனப் பேசப்படுகிறது. வேட்பாளராகப் போட்டியிடும் வழக்கறிஞர் பாலு பா.ம.க-விலும், வன்னியர் சங்கத்திலும் பிரபலமானவர். கட்சியிலும் தீவிரமாகச் செயல்படக்கூடியவர். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது.

இருந்தாலும், காடுவெட்டி குரு குடும்பத்தினர் பா.ம.க-வுக்கு எதிராக இருப்பது, வைத்தி கட்சியிலிருந்து விலகியிருப்பது உள்ளிட்டவை அவருக்குப் பெரும் சவாலாக முன் நிற்கின்றன. அ.தி.மு.க-வுடன் கூட்டணி, வன்னியர் சங்கத்துக்கு ஒதுக்கியுள்ள 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, இவை தனக்குப் பெரும் பலமாக இருக்கும்; தன்னுடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டது என்ற நம்பிக்கையோடு வழக்கறிஞர் பாலு பிரசாரப் பணிகளை தொடங்கியிருக்கிறார்’’ என்றனர்.

வைத்தி பதிவு
வைத்தி பதிவு

பா.ம.க தரப்பில் பேசினோம். ``வைத்திக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. கட்சிதான் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தது. அதை அவர் நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டார். அவருடைய விலகல் எங்களுக்குச் சிறு பாதிப்பைக்கூட ஏற்படுத்தாது” என்றனர்.

வைத்தியிடம் பேசுவதற்குத் தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. `வைத்தி, கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர். ராமதாஸ், அன்புமணியின் கண் அசைவுக்கு ஏற்ப செயல்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சி அவருக்கு சீட் வழங்கியிருக்க வேண்டும். சீட் கிடைக்காத அதிருப்தியில் வைத்தி, பா.ம.க தலைமைக்கு எதிராகப் பேசுகிறார் என்பதை அந்தப் பதிவு உணர்த்துவதாக’ அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு