Published:Updated:

`தி.மு.க-வை வெறுத்தவர் காடுவெட்டி குரு; உதயநிதிக்கு திடீர் அக்கறை ஏன்?’ - கொதிக்கும் பா.ம.க

குரு படத்துக்கு மாலை அணிவித்த உதயநிதி
குரு படத்துக்கு மாலை அணிவித்த உதயநிதி

``காடுவெட்டி குரு இறந்தபோது, தி.மு.க பிரதிநிதியாக ஒருவர்கூட வந்து பார்க்கவில்லை. மலர் வளையமும் வைக்கவில்லை. இன்றைக்கு மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து அக்கறை வந்தது?’’ என்று கொதிக்கிறது, பா.ம.க.

அரியலூர் மாவட்டம், காடுவெட்டியிலுள்ள மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வீட்டுக்குச் சென்ற தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, குருவின் தாயாரிடம் ஆசிபெற்ற உதயநிதி, குருவின் மகன் கனலரசனிடம் பேசிவிட்டு தேர்தல் பிரசாரத்துக்காகப் புறப்பட்டுச் சென்றார். காடுவெட்டி குருவின் படத்துக்கு உதயநிதி மரியாதை செலுத்தியதை, பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

குருவின் தாயாரிடம் ஆசி பெற்றபோது...
குருவின் தாயாரிடம் ஆசி பெற்றபோது...

``வன்னியர் சமூகத்துக்கும், காடுவெட்டி குருவுக்கும் தி.மு.க செய்த இன்னல்களையும் கொடுமைகளையும் பா.ம.க-வும் வன்னியர் சமூகமும் ஒருபோதும் மறக்காது’’ என்று பா.ம.க தரப்பில் கொந்தளித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, பா.ம.க தலைமையின் ஒப்புதலுடன் நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் வழக்கறிஞர் பாலு, ``மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குரு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதும், அவர்மீது அதிகமான வழக்குகள் பதியப்பட்டதும் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான்.

தேர்தல் வரும்போதெல்லாம் தி.மு.க-வுக்கு வன்னியர் சமூகம் மேல் அக்கறை வந்துவிடுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில், ஐந்து மாதங்களுக்கு மேலாக திருச்சி மத்தியச் சிறையில் குருவை அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியதும் இவர்கள்தான். உயிருடன் இருந்தபோது, கொடுமைப்படுத்திவிட்டு, இன்று போய் மலர் வளையம் வைக்கிறார்கள். குரு இறந்தபோது, தி.மு.க பிரநிதியாக ஒருவர்கூட வந்து பார்க்கவில்லை. மலர் வளையமும் வைக்கவில்லை. இன்றைக்கு மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து அக்கறை வந்தது?

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

விக்கிரவாண்டித் தேர்தலின்போது, `வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம்’’ என்று தி.மு.க-வினர் சொன்னார்கள். அதே வன்னியர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் போராடிவருகின்றன. எங்களின் போராட்டத்தை ஆதரித்து ஓர் அறிக்கைக்கூட தி.மு.க விடவில்லை. அவர்களின் அறிக்கையை நாங்களும் எதிர்ப்பார்க்கவில்லை.

கடலூர்: `ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?’ தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி

அதேசமயம், எங்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்திருக்கலாம். `அரசியலுக்காகப் போராட்டம் நடத்துகிறோம்’ என்று சொல்லி அவதூறு பரப்புகிறார்கள். தி.மு.க-வால் தன்னுடைய தந்தை அனுபவித்த சிறைக் கொடுமைகள் பற்றித் தெரியாமல், அவர்கள் விரித்த வலையில் கனலரசன் விழுந்துவிட்டார். தன்னைப் பழிவாங்கியவர்கள் போட்ட மாலையால் குருவின் ஆன்மா இனி தூங்காது. இந்த நிகழ்வை குருவுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகப் பார்க்கிறோம்.

குரு படத்துக்கு மாலை அணிவித்த உதயநிதி
குரு படத்துக்கு மாலை அணிவித்த உதயநிதி

தி.மு.க-வை அடியோடு வெறுத்தவர் குரு. தி.மு.க-வினர் அரசியலுக்காகவும் தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள். கனலரசன் பாவம், அரசியல் தெரியாதவர். `அவருடைய அப்பா எப்படி வாழ்ந்தார், எந்த சித்தாந்தத்தை நோக்கிப் பயணித்தார், எதை எதிர்த்துப் போராடினார்’ என்பதை அந்தத் தம்பி மறந்துவிட்டார். பல அரசியல் தலைவர்களைக் காணாமல் செய்த தி.மு.க-வினர் தேர்தலுக்குப் பின்னர் கனலரசனையும் ஊதிவிட்டுவிடுவார்கள்’’ என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு