Published:Updated:

`அமைச்சருடன் நெருக்கம்; மறைமுக வேலை; தனி ரூட்!' - வைத்தியை ஏன் நீக்கினார் ராமதாஸ்?

பா.ம.க-வில் யார் வளர்ந்தாலும் கட்சித் தலைமைக்குப் பிடிக்காது. அந்த வரிசையில்தான் வைத்தியை கட்சியிலிருந்து ஒதுக்கி இருக்கிறார்கள்.

காடுவெட்டி குருவுடன் வைத்தி
காடுவெட்டி குருவுடன் வைத்தி

காடுவெட்டி குருவின் வலதுகரமாக இருந்தவர் வைத்தி. பா.ம.க-வில் அவர் வகித்துவந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது கட்சித் தலைமை. இதனால் வைத்தியின் ஆதரவாளர்கள் பலர் கட்சியிலிருந்து விலகுவதோடு பா.ம.க கொடிக்கம்பங்களையும் அகற்றிவிட்டு வீட்டுக்கு எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அன்புமணிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், பா.ம.க-வில் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருந்த வைத்தியைப் பதவிலிருந்து நீக்க என்ன காரணம் என்று விசாரித்தோம்.

வைத்தி
வைத்தி

பா.ம.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு பா.ம.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வைத்தி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பா.ம.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளராக இருந்த திருமாவளவன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், மாநில வன்னியர் சங்கச் செயலாளராகப் பொறுப்பு வகித்த வைத்தியலிங்கம் என்கிற வைத்தி.

வைத்தியின் பேஸ்புக் பதிவு
வைத்தியின் பேஸ்புக் பதிவு

வன்னியர் சங்கத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு, இனி மாநில வன்னியர் சங்கச் செயலாளராக மட்டும் தொடர்வார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனைப்படியும், அரியலூர் மாவட்டத்துக்குச் சென்றுவந்த மூவர் குழுவின் அறிவுரைப்படியும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

இனி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளராக திருமாவளவன் செயல்படுவார். வைத்தியலிங்கம் இனி நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களின் வன்னியர் சங்க வளர்ச்சிக்காகப் பாடுபடுவார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தெரிந்தவுடன் வைத்தி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, அவர்களது பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருப்பதோடு ஊரில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அத்தோடு கட்சித் தலைமையை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

பதவியிலிருந்து எடுக்க என்ன காரணம் என்று பா.ம.க தரப்பில் சிலரிடம் பேசினோம். ``பா.ம.க-வில் யார் வளர்ந்தாலும் கட்சித் தலைமைக்குப் பிடிக்காது. அந்த வரிசையில்தான் வைத்தியை கட்சியிலிருந்து ஒதுக்கி இருக்கிறார்கள். வைத்தி நல்லவர் என்று சொல்லவில்லை. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும் கட்சி, இப்பகுதியில் வளர்வதற்காகக் கடுமையாக உழைத்தவர் என்பதில் மாற்றமில்லை. காடுவெட்டி குரு இறந்த பிறகு கட்சியிலும் அவரது ஆதரவாளர்களிடமும் நல்ல பெயரை எடுக்கத் தொடங்கினார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு நிகராக பா.ம.க-வை வளர்க்கக் கடுமையாகப் பாடுபட்டவர். இந்த நிலையில், அவரின் மனைவி தேன்மொழி தற்போது ஆண்டிமடம் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை சேர்மன் ஆக்குவதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் மறைமுகமாகப் பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இதை அப்படியே தலைமைக்குத் தெரிவித்திருக்கிறார்கள் பா.ம.க-வினர். அதேபோல் ஒரு சில ஆப்ளிகேஷனுக்காக தலைமைக்குத் தெரியாமல் அ.தி.மு.க அமைச்சரான சி.வி.சண்முகத்தைச் சந்தித்து வந்திருக்கிறார். இதை பா.ம.க தலைமை ரசிக்கவில்லை. அத்தோடு, `மாவட்டத்தில் எந்தவொரு கூட்டம் நடந்தாலும் மாவட்டச் செயலாளரான ரவியின் பெயரை அழைப்பிதழில் போடக் கூடாது' என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

வைத்தி
வைத்தி

இதனால் ரவியின் ஆதரவாளர்கள் ஏக கடுப்பில் இருந்தார்கள். இந்த நிலையில், அரியலூரில் பா.ம.க பொதுக்குழுக்கூட்டம் செந்துறை அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளரின் பெயரைச் செல்லாமல் ஏடாகூடமாகப் பேசியிருக்கிறார் வைத்தி. கடுப்பான ரவி கட்சியின் தலைவரான ஜி.கே.மணியின் மூலமாக ராமதாஸிடம் எடுத்துச் செல்லியிருக்கிறார். அப்போது ராமதாஸ் வைத்தியிடம் போனை கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அவரும் வாங்கிய பின்பு, ``நீ எதுவும் பேசக் கூடாது. இனிமேல் ரவி சொல்வதைக்கேட்டு நடந்துகொள்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இவரின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை அவர் வகித்துவந்த பதவியிலிருந்து தூக்கப்பட்டிருக்கிறார்" என்கின்றனர்.

அன்புமணியுடன் வைத்தி
அன்புமணியுடன் வைத்தி

வைத்தியின் கருத்தை அறிய பலமுறை அவரை தொடர்கொண்டோம். அவரது மொபைல் நாட் ரீச்சபிள், ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ``தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் காட்டிய பாதையில் நாளைய தமிழகம் மருத்துவர் சின்ன அய்யா அவர்களின் தலைமையில் தொடர்ந்து பயணிப்போம்'' என்ற ஒரு பதிவை அவர் போட்டிருக்கிறார். அவர் தரப்பு விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.