Published:Updated:

`மதுவால் ஏற்பட்ட வேலூர் இரட்டை மரணத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்!’ - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி

``இலக்கு நிர்ணயித்து, மது விற்பனை செய்துவரும் தமிழக அரசுதான், வேலூரில் நேர்ந்த இரட்டை மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்’’ என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

`மதுவால் ஏற்பட்ட வேலூர் இரட்டை மரணத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்!’ - அன்புமணி ராமதாஸ்

``இலக்கு நிர்ணயித்து, மது விற்பனை செய்துவரும் தமிழக அரசுதான், வேலூரில் நேர்ந்த இரட்டை மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்’’ என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

Published:Updated:
அன்புமணி

வேலூர் மாவட்டம், திருவலம் அருகிலிருக்கும் திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. வயது 62. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சின்னசாமி தனது வீட்டுக்குள் அமர்ந்து மது குடித்திருக்கிறார். அப்போது, சின்னசாமி பாதி குடித்துவிட்டு வைத்திருந்த மதுவைக் குளிர்பானம் என நினைத்திருக்கிறான் பேரன் ருத்தேஷ். தாத்தாவுக்குத் தெரியாமல் ஓடிச்சென்று பாட்டிலில் மீதமிருந்த மதுவை எடுத்துக் குடித்த ருத்தேஷ் சில நிமிடங்களுக்குள் புரை ஏறி சுருண்டு விழுந்திருக்கிறான். தன் கண்முன்னால் பேரன் துடிப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ருத்தேஷும் மரணமடைந்துவிட்டான். மதுவால் நேர்ந்த இந்த துயரச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்
வேலூர்

இந்த நிலையில், ``இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை மூட வேண்டும்’’ என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``வேலூரில், தாத்தா குடித்துவிட்டுவைத்த மதுவை பழச்சாறு என நினைத்துக் குடித்த சிறுவன் உயிரிழந்ததும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழந்துவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இதைவிடப் பெரிய கொடுமையும், சோகமும், இழப்பும் இருக்க முடியாது. தாத்தா, பேரனை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். `குடி குடியைக் கெடுக்கும்’, `மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு’ போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு இதுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதுதான் தாத்தாவும் பேரனும் உயிரிழப்பதற்குக் காரணம். இலக்கு நிர்ணயித்து, மது விற்பனை செய்துவரும் தமிழக அரசுதான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மதுவின் தீமைகள் குறித்து அறியாமல், மாணவர்கள் பள்ளி வகுப்புகளில் அமர்ந்து மது அருந்தும் கொடுமைகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. போதை தலைக்கேறிய நிலையில் குழந்தைகளுக்கும் மதுவைக் கொடுத்துக் கெடுக்கும் இழிசெயலில் சில குடிகாரர்கள் ஈடுபடும் காட்சிகள் காணொலிகளாக, சமூக வலைதளங்களில் வெளியாகின. இப்போது, வீட்டில் பெரியவர்கள் குடித்துவிட்டுவைத்த மதுவை சிறுவன் குடித்து உயிரிழந்த கொடுமை அரங்கேறியிருக்கிறது. இந்த ஆபத்தான போக்கு தடுக்கப்பட வேண்டும்.

அன்புமணி
அன்புமணி

தமிழகத்தில் மட்டும் மது குடிப்பதால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஏராளமான பெண்கள் இளம் வயதில் கைம்பெண்களாகின்றனர். 200 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. குடும்ப வன்முறையும், வறுமையும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10 முதல் 20 விழுக்காடு வரை குறைகிறது. இதற்குப் பிறகும் மதுவால் கிடைக்கும் வருமானத்துக்காக மது வணிகத்தை அரசு தொடர்வது பெருங்கேடானது. மக்கள் நலம் பேணும் அரசுக்கு இது அழகல்ல. தமிழ்நாட்டில் இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யவும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்காக தமிழ்நாட்டிலுள்ள ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.