Published:Updated:

“அரசை மீறி ஆளுநர் நடந்துகொண்டால் கோபம் வரத்தானே செய்யும்...!”

இரா.அருள்
பிரீமியம் ஸ்டோரி
இரா.அருள்

- சொல்கிறார் பா.ம.க எம்.எல்.ஏ அருள்

“அரசை மீறி ஆளுநர் நடந்துகொண்டால் கோபம் வரத்தானே செய்யும்...!”

- சொல்கிறார் பா.ம.க எம்.எல்.ஏ அருள்

Published:Updated:
இரா.அருள்
பிரீமியம் ஸ்டோரி
இரா.அருள்

சமீபகாலமாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் அறிக்கைகள், தி.மு.க-வுக்குச் சாதகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம், தி.மு.க அரசு புறக்கணித்த ஆளுநர் தேநீர் விருந்தில் பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர். இப்படியான சூழலில் பா.ம.க-வின் நிலைப்பாடு குறித்து, அக்கட்சியின் சட்டமன்றக் கொறடாவும், சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான இரா.அருளிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“உங்கள் தலைவர்கள் இருவரது அறிக்கையிலும் சமீப நாள்களாக தி.மு.க பாசம் கூடுதலாகத் தெரிகிறதே?”

“அப்படியில்லை... கருணாநிதி இருந்தபோதே ‘சரி’ என்பதைத் தெளிவாகவும், ‘தவறு’ என்பதைத் துணிச்சலாகவும் சொல்லக்கூடியவர் அய்யா ராமதாஸ். அதைவைத்து கருணாநிதியும் அடிக்கடி ‘தைலாபுரத்திலிருந்து தைலம்’ வந்திருக்கிறது என்று சொல்வார். அதேபோல்தான் சின்ன அய்யாவும். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, வெளியில் ஒன்றைச் சொல்லமாட்டார். ஆட்சி நிர்வாகத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதனால்தான், மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறார்.”

“சரி... தி.மு.க அரசின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஆஹா ஓஹோ... எனப் பாராட்டும் வகையில் இல்லாவிடினும், திருப்திகரமாக உள்ளது. சட்டம், ஒழுங்குப் பிரச்னை எதுவும் இருப்பதுபோலத் தெரியவில்லை. குறைசொல்லும் அளவுக்கு எதுவுமில்லை.”

“உங்கள் தலைவர்கள் இருவர், எம்.எல்.ஏ-க்கள் எல்லோருமே தி.மு.க அரசைப் பாராட்டுகிறீர்கள். அப்படியானால் இது கூட்டணிக்கான அச்சாரமா?”

“நல்லவற்றைப் பாராட்டவும், தவறானவற்றை எதிர்க்கவும் என்றைக்குமே பா.ம.க தயங்காது. தேர்தல் நேரம் என்றால் நீங்கள் கேட்பது சரி எனலாம். இப்போது கூட்டணிக்கான தேவையே எழவில்லையே... கூட்டணி முடிவு பற்றியெல்லாம் தலைமைதான் முடிவு செய்யும், எங்கள் கைகளில் எதுவுமில்லை. தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்தக் கூட்டணியில் இணைந்தாலும், மக்கள் மற்றும் தமிழகத்தின் நன்மையை முன்வைத்தே இணைவோம்.”

“ஆளுநரின் தேநீர் விருந்தை தி.மு.க புறக்கணித்தது சரியா?”

“நிச்சயமாக... தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக விருந்தைப் புறக்கணிக்கவில்லையே... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி, ஆளுநர் நடந்துகொண்டால் வருத்தம் வரத்தானே செய்யும்... அதேபோல, மாநிலத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பான சட்டப்பேரவையில், ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளின் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முறைப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் பணி. அதற்கு முட்டுக்கட்டை போடும்போது ஆளும் அரசுக்குக் கோபம் வருவது இயற்கைதான். அந்தக் கோபத்தை தி.மு.க அரசு வெளிக்காட்டிய பாணியும் சரியானதுதான்.”

“ஆனால், உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவர் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றிருக்கிறார்களே?”

“தலைமையிலிருந்து கலந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பங்கேற்றனர்.”

“அரசை மீறி ஆளுநர் நடந்துகொண்டால் கோபம் வரத்தானே செய்யும்...!”

“ஆளுநருக்குக் கறுப்புக்கொடி காட்டியதும் சரியான செயல்தான் என்கிறீர்களா?”

“ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. மக்களுக்கான உரிமைகளைப் போராட்டங்கள் மூலமாகத்தான் பா.ம.க பலமுறை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அதன்படிதான் கறுப்புக்கொடி காட்டிப் போராடினார்கள். ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டதாக பா.ஜ.க தரப்பில் கூறினாலும், ஆளுநரின் பாதுகாப்பு ஏ.டி.சி-யே அப்படியெல்லாம் தாக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டாரே... அவருடைய அறிக்கையைச் சட்டப்பேரவையில் முதல்வர் படித்துக்காட்டி, தெளிவாகச் சொல்லிவிட்டாரே.”

“அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டதே?”

“சில திட்டங்கள் நிறுத்தப்பட்டது சங்கடமானதுதான். தாலிக்குத் தங்கம் திட்டத்தை நம்பியே பல ஏழைப் பெண்களின் திருமணம் நடந்திருக்கிறது. எனினும், கடந்த ஆட்சியில் காலதாமதமாகக் கொடுக்கப்பட்டதால், அத்திட்டத்தின் முழுப் பயன் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை என்பதும் மறுக்க முடியாதது. எனினும், அதை நிறுத்தியது சரியல்ல. எங்கள் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் ஜி.கே.மணியும் அது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, `திட்டத்தை நிறுத்த வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். ராமதாஸ் அய்யாவும் சொல்லியிருக்கிறார். பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டதால், மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் நிறுத்தப்பட்டதாக அரசு தெளிவுபடுத்திவிட்டது. அதனால், அதற்குள் செல்ல விரும்பவில்லை. அதேசமயம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் போன்றவற்றைக் கொடுக்க முடியாததற்கு நிதிச்சுமையைக் காரணம் காட்டுகிறார்கள். அதையும் நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், மக்கள் நேரடியாகப் பயன்பெறும் திட்டங்களை நிறுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.”

“10.5% இட ஒதுக்கீடு, நீதிமன்றத்தில் ரத்துசெய்யப்பட்டதற்கு யார் காரணம்... தி.மு.க-வா, அ.தி.மு.க-வா?”

“இரண்டு பேரையுமே குறைசொல்ல முடியாது. ஏனெனில், 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டுவந்தவர் எடப்பாடியார். அதேபோல, சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில் மிக அற்புதமான வழக்கறிஞர்களை வைத்து வாதாடினார் ஸ்டாலின். எந்தெந்த வழக்கறிஞர்களை பா.ம.க சுட்டிக்காட்டியதோ அவர்களைக்கொண்டே வாதாடப்பட்டது. இரண்டு பேருமே எங்களுக்கு உதவியிருக்கிறார்கள். நாங்கள் கேட்பது என்னவெனில், தங்கு தடையில்லாமல் வன்னியர் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், மீண்டும் ஒரு வலுவான சட்டத்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism