Published:Updated:

பா.ம.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு...! - சேலம் ‘திகுதிகு’

சதாசிவம்
பிரீமியம் ஸ்டோரி
சதாசிவம்

எங்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற உள்ளரங்கக் கூட்டத்தில் நான் பேசியதைச் சிலர் திட்டமிட்டே எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பா.ம.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு...! - சேலம் ‘திகுதிகு’

எங்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற உள்ளரங்கக் கூட்டத்தில் நான் பேசியதைச் சிலர் திட்டமிட்டே எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
சதாசிவம்
பிரீமியம் ஸ்டோரி
சதாசிவம்

“நாங்கள் நினைத்தால்... தமிழகத்தில் ஒரு பஸ்கூட ஓட முடியாது. இந்தப் பகுதியில் நாங்கள் 10,000 பேர் இருக்கிறோம். வெறும் 200 குடும்பங்கள்கொண்ட அவர்கள்... எங்களிடம் கைகட்டி வாங்கித் தின்றவங்கதான்” என்று பா.ம.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ சதாசிவம் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது!

சேலம் மாவட்டம், காவேரிபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தொல்.திருமாவளவன் பிறந்தநாளுக்கு சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் பா.ம.க-வினர், வி.சி.க-வினரிடையே தகராறு ஏற்பட்டு, கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக பா.ம.க-வினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ சதாசிவம், சர்ச்சைக்குரியவிதத்தில் பேசியதாக இணையத்தில் பரவிவரும் ஆடியோவின் சாராம்சம்தான் கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் படித்தது.

பா.ம.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு...! - சேலம் ‘திகுதிகு’

இது குறித்து சேலம் வடக்கு மாவட்ட வி.சி.க செயலாளர் வசந்த் நம்மிடம் பேசுகையில், “அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினரே சாதிய வன்மத்தைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதனால் அவர்மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அவரைக் கைது செய்யாவிட்டால், எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்றார்.

சர்ச்சையில் சிக்கியிருக்கும் சதாசிவம் எம்.எல்.ஏ-விடம் இது குறித்துக் கேட்டோம். “எங்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற உள்ளரங்கக் கூட்டத்தில் நான் பேசியதைச் சிலர் திட்டமிட்டே எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை எந்தக் கட்சியினரும் சுவர் விளம்பரம் செய்யாத இடத்தில், வி.சி.க-வினர் விளம்பரம் எழுதியதைக் கண்டித்த பா.ம.க நிர்வாகிமீது பொய்ப் புகார் கொடுத்து வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என்னிடம், ‘நாங்கள் ரோட்டில் நடந்து செல்லும்போது, பாலத்தில் அமர்ந்துகொண்டு இளைஞர்கள் எங்களைக் கேலிசெய்து அருவருப்பாகப் பேசுகிறார்கள்’ என்றார்கள். அதனால்தான், ‘பத்தாயிரம் பேர் இருக்கும் இடத்தில், 200 பேர் இருந்துகொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா... இது சரிதானா... வி.சி.க எம்.எல்.ஏ-கள் பலரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்தான். அவர்களிடம் இது பற்றிப் பேசி கண்டிக்கச் சொல்கிறேன்’ என்று பேசினேன். ஆனால், அதையெல்லாம் எடிட் செய்து வெளியிட்டுவிட்டு என்மீதும் பொய்யான புகார் அளித்திருக்கிறார்கள்” என்றார்.

வசந்த்
வசந்த்
ஸ்ரீஅபினவ்
ஸ்ரீஅபினவ்

இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்  ஸ்ரீஅபினவ் பேசுகையில், ‘‘வி.சி.க-வைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சதாசிவம் எம்.எல்.ஏ மீது சாதிக் கலவரத்தைத் தூண்டும்விதமாகப் பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்று முடித்துக்கொண்டார்.

‘ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு’
என்கிறார் வள்ளுவர்!