Published:Updated:

`பெரியார் சர்ச்சை; கல்விக்கொள்கை; ஹைட்ரோ கார்பன்!’ - தமிழக நிலவரம் குறித்து அன்புமணி

அன்புமணி
அன்புமணி

``ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கி நீர் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தினால், அடுத்த 200 ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் எந்த பிரச்னையும் இருக்காது’’ என்று அன்புமணி கூறியிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் பா.ம.க சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்துகொண்டு பேசினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, ``இன்று காலை காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமத்தில், தந்தை பெரியாரின் சிலையைச் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை பா.ம.க கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. சில விஷக்கிருமிகள் அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
பா.ம.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு தேவையற்றது. கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு வரை `கட்டாயத் தேர்ச்சி’ என்று விதிகள் இருந்தது. ஒரு சில நபர்களால் கொள்கை முடிவை மாற்றியமைத்துள்ளனர். கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல்போகும் குழந்தைகள் அவர்களின் தந்தை செய்யும் தொழிலுக்குத் தள்ளப்படுவார்கள்.

குழந்தைத் தொழிலாளர் முறை அதிகரிக்கும். அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து ஆசிரியர்களை அதிகளவில் நியமனம் செய்ய வேண்டும். 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28-ம் தேதி, பா.ம.க சார்பில் சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

காவிரி பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக இதற்கு முன் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களுக்கு 4 உரிமங்களை மத்திய அரசு வழங்கியது. இதை, பா.ம.க கடுமையாக எதிர்த்துவருகிறது. பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். பிரதமரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். கடல் பகுதியிலும் நிலப் பகுதியிலும் 3,200 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 4,200 சதுர கிலோ மீட்டருக்கு 5-வது உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், காவிரி டெல்டாவில் 20 சதவிகிதம் பகுதிகளைச் சேர்க்க இருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடுமையாக இதற்கு எதிர்த்து தெரிவித்து, முதலமைச்சரிடம் பலமுறை சொல்லியிருக்கிறோம். காவிரி டெல்டா பகுதியை `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்று அறிவிக்கக்கோரி சொல்லியிருக்கிறோம். அ.தி.மு.க கூட்டணியில் செய்துகொண்ட முதன்மை கோரிக்கையும் அதுதான். `தன்னை ஓர் விவசாயி’ என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்காகத் தாமதிக்கிறார் என்று தெரியவில்லை. உடனடியாகக் காவிரி டெல்டா பகுதிக்காக சட்ட வடிவம் கொண்டுவந்து வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

ஸ்டாலினுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது. துணை முதலமைச்சராக இருந்தபோது, மீத்தேன் திட்டத்துக்குக் கையெழுத்திட்டு ஆய்வு நடத்தலாம் என்று பிள்ளையார் சுழி போட்டதே ஸ்டாலின்தான். `நீட்’ தேர்வை இந்திய அளவில் கொண்டுவந்ததே காங்கிரஸும் தி.மு.க-வும்தான். கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்ததும் அவர்கள்தாம். காவிரி உரிமையை இழக்கச் செய்ததும் தி.மு.க-தான். இவற்றையெல்லாம், எதிர்த்து ஸ்டாலினே போராடுகிறார். ஸ்டாலினுக்கும் அவரின் மகனுக்கும் திராவிட கொள்கையும் தெரியாது. அரசியலும் தெரியாது.

ரஜினி
ரஜினி

பா.ம.க நீர் மேலாண்மைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். காட்டுத் தீ, வெள்ளம், வறட்சிகளைத் தடுக்க நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே அடுத்த 200 ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் பிரச்னை இருக்காது.

தந்தை பெரியார் குறித்துப் பேசுவதை ரஜினி தவிர்த்திருக்கலாம். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்றைய சூழலில் வேலைவாய்ப்புப் பிரச்னை, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு எனப் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம், ஊடகங்களும் சமூக ஊடகங்களும் விவாதம் செய்யலாம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு