Published:Updated:

`32 வருஷம்; 80 சீட்டுகள்; 2021-ல் ஆட்சி!' -பா.ம.க கூட்டத்தில் கணக்குப் போட்ட ராமதாஸ்

பா.ம.க செயற்குழு கூட்டம்
பா.ம.க செயற்குழு கூட்டம்

பா.ம.க என்ற கட்சியைத் தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை, ஒருமுறைகூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

``பெரியார் வாழ்ந்த பூமியில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஆகியவை தமிழகத்துக்குள் நுழைய இருக்கின்றன. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தடைசெய்திருக்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழைந்தால் பெரியார் வாழ்ந்த பூமி, கலவர பூமியாக மாறிவிடும்" எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியதோடு, ``தமிழகத்தில் 80 சீட்டுகளைப் பிடித்தால் நாம்தான் ஆட்சி அமைப்போம்" என்றும் பேசியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் ஜி.கே.மணி, சத்யபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சிலர், ``இப்போதுதான் அய்யாவைப் பற்றியும் பா.ம.க-வைப் பற்றியும் தமிழக அரசு புரிந்துகொண்டிருக்கிறது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்டங்கள்தோறும் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம். நம்மைப் பார்த்துப் பயந்து தேர்வை ரத்து செய்துவிட்டார்கள்.

இது நமக்குக் கிடைத்த வெற்றி. இதுபோல் பல வெற்றிகளைக் கண்டிருக்கிறார் அய்யா. அந்தவகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அய்யாவையும் சின்னய்யாவையும் வெற்றிபெற வைத்து அரியணையில் அமர வைக்க வேண்டும். அதற்கான இடத்தில் நாம் இருக்கிறோம். இந்தமுறை கடுமையாக உழைக்கவேண்டும்" என்றனர்.

அடுத்ததாகப் பேசத் தொடங்கிய மருத்துவர் ராமதாஸ். ``பா.ம.க என்ற கட்சியைத் தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை, ஒருமுறைகூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

ராமதாஸ்
ராமதாஸ்

2021-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 70 முதல் 80 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். அதில், எந்த மாற்றமும் இல்லை. அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பா.ம.க ஆட்சி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் யாராவது இருந்தால், கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். திறமையான நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். திட்டமிட்டு வேலை செய்தால் தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பா.ம.க முதலாவது இடத்துக்கு வர வேண்டும். அதற்காக நீங்கள் உழைக்கவேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ``ஒரு கட்சியில் திறமையான நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் 400 கோடி செலவு செய்து பீகாரிலிருந்து (ஐபேக் நிறுவனமான பிரசாந்த் கிஷோர் என்ற) ஒருவரை இங்கு இறக்கியிருக்கிறார்கள். தி.மு.கவின் அரசியல் கார்ப்பரேட் வசம் சென்றுள்ளது.

பா.ம.க தொடங்கி 32 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

கார்ப்பரேட்டால்தான் நமக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் நாம் தனியாகப் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பைக் கொடுக்கவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் கையில் வைத்திருக்கவேண்டும். அத்தோடு நமது கொள்ளை கோட்பாடுகளை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பா.ம.க நிர்வாகிகளுக்கான தணிக்கைக் கூட்டம் நடைபெறும். இந்தமுறை எப்படியாவது நாம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்று பேசி முடித்தார்.

பா.ம.க செயற்குழு கூட்டம்
பா.ம.க செயற்குழு கூட்டம்

அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு மீண்டும் குழப்பத்தைத் தொடங்கியுள்ளது பா.ம.க. அதிக சீட்டுக்காக இந்த மோதல் போக்கை ஆரம்பித்துள்ளதா அல்லது உண்மையிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு