Published:Updated:

‘அ.தி.மு.க-வுக்கும் போயஸ் இல்லத்துக்கும் தொடர்பில்லை; அது எங்கள் சொத்து!’ - ஜெ.தீபா பேட்டி

ராம் பிரசாத்
ASHOK KUMAR D

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அ.தி.மு.க-வுடன் இணைக்க முடிவு எடுத்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

Deepa
Deepa

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெ.தீபா. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் அரசியலில் களமிறங்கினார். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு பதிவிட்டார். அ.தி.மு.க-வுடன் எனது பேரவையை இணைத்துவிட்டேன். “அரசியல் தொடர்பாக யாரும் என்னை அழைக்க வேண்டாம். எனக்கு அரசியல் வேண்டாம்; குடும்பம்தான் முக்கியம்” என அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. சிறுது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

Deepa
Deepa

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெ.தீபா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். “ ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கடந்த 2017-ம் ஆண்டு, அலைகடலென எனது இல்லத்தின் முன்பு திரண்ட மக்கள், என்னை அரசியலில் ஈடுபட அழைத்த காரணத்தால், அந்த மக்களுக்காக இயக்கத்தைத் தொடங்கினேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள், வேதனைகளைக் கடந்து இயக்கத்தை நடத்திவந்தேன். அதேசமயத்தில், எனது கணவர் மாதவனும் ஒரு இயக்கம் நடத்தி வந்தார். சேலம் பொதுக்கூட்டத்தில் இரண்டு இயக்கமும் இணைக்கப்பட்டது. இரண்டு தரப்பினரின் சம்மதத்துடன் இணைக்கப்பட்டு, ஒரே இயக்கமாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாங்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தோம். அதை அ.தி.மு.க தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

இதையடுத்து, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்கள் என்னை அணுகி, இணைப்புப் பணிகளை விரைவாக நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தால், என்னால் தீவிர அரசியல் பணிகள், அலுவல் பணிகளைக் கவனிக்க முடியாமல் ஓய்வெடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டேன். நான், மாற்றிப் பேசவும் இல்லை. மாற்று நிலைப்பாட்டை எடுக்கவும் இல்லை. எனது உடல்நிலை பாதிப்பட்டதால், கடினமான பணிகளை ஆறு மாத காலத்திற்கு செய்யமுடியாத நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனை தெரிவிக்கும் விதமாகத்தான் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டேன்.

Deepa Pressmeet
Deepa Pressmeet

நானும் எனது கணவர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து பேசி, நான் தொடங்கிய இயக்கத்தை அ.தி.மு.க-வுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம். இதற்கான நிர்வாகிகளின் பட்டியலையும் அ.தி.மு.க-வினரிடம் அளித்துள்ளோம். இணைப்பு விரைவில் நடத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. எனது பாட்டி வாங்கியது. என் அத்தையின் சொத்து அது. அதற்கும் இணைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க-வுக்கும் போயஸ் இல்லத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளும் சட்டரீதியாக மீட்க அனைத்து முயற்சிகளும் என்னால் மேற்கொள்ளப்படும். அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவுசெய்துள்ளேன். அ.தி.மு.க-வில் எந்தப் பொறுப்பையும் கேட்கவில்லை” என்று கூறினார்.