`ஸ்டாலின் சந்திப்பைத் தடுக்கவே கனலரசன் கைது; கொதிக்கும் காடுவெட்டி குரு குடும்பம்!’ - என்ன நடந்தது?

`கடந்த மாதம் அரியலூர் வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காடுவெட்டி குரு மகன் கனலரசன் சந்தித்தார். இதை விரும்பாத ராமதாஸ் எங்களைப் பழிவாங்கத் திட்டமிட்டிருந்தார்’ - மீனாட்சி.
அரியலூர் வந்திருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனரலசன் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். பா.ம.க நிறுவனர் ராமாதாஸ் கொடுக்கும் அழுத்தத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணைபோவதாக குருவின் தங்கை மீனாட்சி குற்றம்சாட்டிவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் எல்.ஏ-வும், வன்னியர் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன். வன்னியர் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் குருவை மாவீரன் என்றே அழைத்து வந்தனர். இதைக் குறிக்கும்விதமாக கனலரசன், `மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பை நடத்திவருவதுடன், அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.
அந்த அமைப்பின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டத்தில் கொடிக்கம்பம் அமைத்து மஞ்சள் படையின் கொடியை ஏற்றினார். இதையடுத்து பா.ம.க-வைச் சேர்ந்த சிலர் அந்தக் கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கனலரசன் மீண்டும் கொடியை ஏற்றுவதற்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று ஜெயங்கொண்டத்தில் கொடியேற்ற வந்த கனலரசனைக் கைதுசெய்த போலீஸார், 15 நாள் ரிமாண்ட் செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, `ராமதாஸ் தூண்டுதலின் பேரில் மேலிடத்து உத்தரவால் கனலரசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு ராமதாஸ் எங்க குடும்பத்துக்கு பல்வேறு சித்ரவதைகளைச் செய்துவருகிறார். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைபோகிறார்’ என காடுவெட்டி குருவின் தங்கையும், கனலரசனின் அத்தையுமான மீனாட்சி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து மீனாட்சியிடம் பேசினோம். ``பிப்ரவரி 1-ம் தேதி காடுவெட்டி குருவின் பிறந்தநாள். ஆளும்கட்சியின் கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், ஆட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து குருவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட விடாமல் செய்தார். காவல்துறையினரும் ஆட்சி மேலிட உத்தரவால் காடுவெட்டி முழுவதும் 3,000 போலீஸாரைக் குவித்து அச்சமூட்டும் வகையில் அணிவகுப்பும் நடத்தினர்.
ஏதோ திட்டத்துடன்தான் செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்த நாங்கள் சுதாரித்துக்கொண்டு பிறந்தநாள் அன்று குருவின் சமாதிக்குச் செல்லவில்லை. மறுநாள் சென்று மரியாதை செய்துவிட்டு வந்தோம். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு கனலரசன், மஞ்சள் படை அமைப்பின் சார்பில் கொடி ஏற்றினார். அதை பா.ம.க நிர்வாகி ஒருவர் சேதப்படுத்தினார்.

இதையடுத்து நேற்று மீன்சுருட்டி காவல் நிலைய எஸ்.ஐ மலைச்சாமி வீட்டுக்கு வந்து கனலரசனிடம், `நாங்க பாதுகாப்பு தருகிறோம். நீங்க வந்து கொடி ஏற்றுங்க’ என அழைத்துச் சென்றார். `சரி’ என கனலரசனும் தனது ஆதரவாளர்களுடன் சென்ற நிலையில், கொடி ஏற்றவிடாமல் தடுத்து கமலரசனைக் கைதுசெய்து அழைத்துச் சென்று, ஜெயங்கொண்டத்திலுள்ள மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர்.
மாலை 6 மணிக்குப் பிறகு கடந்த வருடத்தில் நடைபெற்ற மோதல் வழக்கு ஒன்றில் கைதுசெய்வதாகக் கூறி அழைத்துச் சென்று மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு, அரியலூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர். நிஜமாகவே அந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான். ஆனால், இதில் தொடர்புடைய பா.ம.க-வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த மாதம் அரியலூர் வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கனலரசன் சந்தித்தார். பின்னர் உதயநிதி எங்கள் வீட்டுக்கு வந்து சென்றார். இதை விரும்பாத ராமதாஸ், ஆட்சி மேலிடத்தைப் பயன்படுத்தி காவல்துறையை ஏவி எங்களைப் பழிவாங்கத் திட்டமிட்டிருந்தார்.
இந்தநிலையில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று அரியலூர் வந்தார். அவரை கனலரசன் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஸ்டாலினை கனலரசன் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக நேற்றே கனலரசனைக் கைது செய்துவிட்டனர்.
குருவின் மறைவுக்குப் பிறகு ராமதாஸ் எங்கள் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார். கனலரசன் வளர்ந்தால், தன் மகன் அன்புமணிக்கு சிக்கல் என்பதால், எங்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார். அதனால், குரு இறப்புக்குப் பிறகு அவர் பிறந்தநாள், நினைவுநாள் என எதையும் கொண்டாட விடுவதில்லை.
மோதல் உண்டாகும் என்ற காரணத்தைக் கூறி தடை உத்தரவு போட்டு தடுத்து விடுகின்றனர். ராமதாஸால் எங்களுக்குப் பிரச்னை ஏற்பட்ட உடனேயே முதல்வர் பழனிசாமி அய்யாவிடம், `எங்க குடும்பத்தைக் காப்பாதுங்க’ எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர் எங்களைக் கைவிட்டுட்டார். ஆளும் கட்சியான அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், ஆட்சி மேலிடத்துக்கு பிரஷர் கொடுத்து போலீஸாரை ஏவி எங்க குடும்பத்தினரை சித்ரவதை செய்துவருகிறார். மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை போலீஸார் செயல்படுத்துகின்றனர். சொல்லப்போனால் ராமாதாஸுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார்’’ என்று தெரிவித்தார்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ``கனலரசன், தனது அமைப்புக்கான கொடியை ஏற்ற வந்தார். அதற்கு பா.ம.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மோதல் உருவாகும் சூழல் இருந்ததால், கனலரசனை வர வேண்டாம் எனத் தகவல் கொடுத்தோம், ஆனால், அவர் போலீஸ் பேச்சைக் கேட்காமல் வந்து கொண்டேயிருந்தார்.
இதையடுத்து மோதல் உருவாவதைத் தடுப்பதற்காக இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் கைதுசெய்தோம். கடந்த 2020-ல் நடைபெற்ற மோதல் வழக்கு ஒன்றில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் கனலரசனுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், அவர் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்தார்.

இந்தநிலையில், தலைமறைவாக இருக்கும் ஒருவரைக் கைதுசெய்த பிறகு வெளியே விடக் கூடாது என்பதற்காகக் குறிப்பிட்ட அந்த வழக்கில் சிறையில் அடைத்திருக்கிறோம். அரசியல் காரணங்களுக்காகவும், மேலிடத்து பிரஷர் காரணமாகவும் கைதுசெய்யப்பட்டார் எனக் கூறுவது தவறான தகவல்’’ என்றனர்.