Published:Updated:

`பத்லா’ முதல் `ரௌத்திர ரூபம்’ வரை... போராட்டங்களை ஒடுக்கிய யோகி ஆதித்யநாத் அரசு!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கிறது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதைத் தனது 'ரௌத்திர ரூபம்' என்கிறார் யோகி.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகக் கடந்த மாதத்திலிருந்தே மக்கள், நாடு முழுவதும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவரும்நிலையில், அவற்றின்மீது மத்திய அரசும் சில மாநில அரசுகளும் அடக்குமுறைகளைப் பல வகையில் கையாண்டுவருகின்றன. உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக அளவிலான கைதுகளும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் நடந்துள்ளன. அங்கு, ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகள் பலரையும் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

உத்தரப் பிரதேச மாவட்டங்களான மீரட், முசாபர் நகர், அலிகார், ஷாம்லி ஆகியவற்றில் போராட்டங்கள் பெரிய அளவில் நடந்து வந்தன. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் 'பத்லா' (பழிவாங்கும்) எச்சரிக்கை, அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் சட்டத்தில் சில தெளிவற்ற விதிகளைக் குறிப்பிட்டு குடியுரிமை திருத்தச் சட்டம் அவ்வளவு ஆபத்தில்லை என்று பதியவைக்க முயன்றது முதலான விவகாரங்கள், மக்களைக் குழப்பத்தில் தள்ளின.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
`மாணவர்களுக்கு எதிராக அரசு போர் நடத்துகிறது!’ - ஜெ.என்.யு தாக்குதலால் கொதித்த கன்ஹையா குமார்

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், தொடர்ச்சியாகப் பல சமூகங்களிடமிருந்து வலுவான பங்களிப்பையும் ஆதரவையும் பெற்றன. வாரணாசியில், இந்தச் சட்டத்திற்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்களில், சமூக ஆர்வலர்கள் பலர் முன்னணியில் இருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான கோரக்பூர் மற்றும் லக்னோவுக்குப் பரவியதால், யோகி அரசு அவற்றை அடக்குவதற்கான நடவடிக்கைகளை அதிகரித்தது. லக்னோவில், டிசம்பர் 25 அன்று இரவு வரை, ஆறு நாள்களுக்கு இணையச் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 5,558 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், ஜாமியா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் எழத் தொடங்கின. உத்தரப்பிரதேசத்தில், முதலாவதாக அலிகாரில் டிசம்பர் 15-ம் தேதி இரவு எட்டு மணியளவில் ஜாமியாவில் போராடும் மாணவர்களுக்குத் தோள்கொடுக்கவும், குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவும் போராடிய அலிகார் பல்கலைக்கழக மாணவர்களை அடித்து விரட்டியது காவல்துறை. அதில் 60 பேர் காயம் அடைந்தனர், 21 பேர்மீது வழக்கு பதியப்பட்டது.

உத்தரப் பிரதேச காவல்துறை
உத்தரப் பிரதேச காவல்துறை

டிசம்பர் 20-ம் தேதி, நேத்தார் நகரத்தில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை என்றபோதும், மசூதியிலிருந்து வெளியில் வந்தவர்களைப் பாரபட்சமின்றி காவல்துறை தாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த மசூதிக்கு அருகில் இருந்த ஒரே காரணத்தால், அந்த வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த காவல்துறையினர், அந்த வீட்டில் வசிக்கும் பக்கவாதம் வந்த ஒரு முதியவரை தூக்கிச்சென்றதாக அவர் சகோதரர் குறிப்பிடுகிறார். அன்றுமட்டும், அங்கு இரண்டுபேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்; 10 பேரை கைது செய்தனர். அதன்பின்பு, காவல்துறையினர் இஸ்லாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருள்களை உடைத்து வீட்டில் இருப்பவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட மசூதி
தாக்குதல் நடத்தப்பட்ட மசூதி
Scroll

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டத்தில், பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக மக்களைக் குற்றம் சாட்டி, பணம் பெற்ற முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம். கைதுசெய்த மக்களை அடித்துத் துன்புறுத்தியிருப்பதாகவும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அதன்பிறகும் போராட்டம் கட்டுக்குள் வராததால், டிசம்பர் 20 அன்று, 'பத்லா' எனப்படும் பழிவாங்குதல் நடவடிக்கையை அறிவித்தார் முதல்வர் யோகி. அதைத் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையில், கான்பூரில் 3 பேரையும் மீரட்டில் 2 பேரையும் சுட்டுக் கொன்றிருக்கிறது காவல் துறை. பிஜ்னோரில் 5 பேர், வாரணாசியில் 6 பேர் என உத்தரப் பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 19 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அரசின் அறிக்கை கூறுகிறது. ஆனால், 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

யோகியின் 'பத்லா' பழிவாங்கல் நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுள் 8 வயது சிறுவன் முகமது சகீரும் அடக்கம். ஒட்டுமொத்த இந்தியாவில் இறந்த 25 பேரில், 19 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அது மட்டுமல்ல, முசாபர் நகரில் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி, அவற்றிலிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் காவல்துறையினர். கான்பூரில் 729 பேரையும், பிஜ்னோரில் 21 சிறுவர்கள் உட்பட 104 பேரையும் 2 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து அடித்துத் துன்புறுத்தியிருக்கிறது காவல்துறை.

முசாபர் நகரில் சாதத் மதரஸாவில் படிக்கும் 40 மாணவர்கள் உட்பட மொத்தம் 72 பேரையும், பிஜ்னோரில் 154 பேரையும், வாரணாசியில் 218 பேரையும் சேர்த்து மொத்தம் 1,100 பேரை இதுவரை கைது செய்துள்ளது யோகி அரசு. அதுமட்டுமின்றி, பெயருடன் 491 பேர் மீதும் பெயரில்லாமல் 27,500 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. இப்படி உத்தரப்பிரதேசம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களை, இந்துத்துவ ஆதரவாளர்கள் ஒரு பழிவாங்கலுடன் வேண்டுமென்றே வன்முறையை மேற்கொண்டு வருவதாக, அந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவல்துறையால் தாக்கப்பட்ட சிறுவன்
காவல்துறையால் தாக்கப்பட்ட சிறுவன்
Scroll
முசாபர் நகர் சாதத் மதரஸாவின் ஆசிரியராக இருந்த மௌலானா ஆசாத் ரசா ஹுசைனி, காவல்துறையினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். அவர், தனது 100 மாணவர்கள், (அனைவரும் ஏறத்தாழ 14 முதல் 21 வயது வரை உள்ளவர்கள்), தாம் துன்புறுத்தப்பட்ட அறைக்கு அருகில் உள்ள மற்றொரு அறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். காவலர்களால் மதரஸாவின் மாணவர்கள் பலர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

மீரட்டில் உள்ள நசீர் கான் மற்றும் ஆசிப் ஆகியோரின் செல்போன் கடையை, இந்துத்துவ ஆதரவாளர்கள் பட்டப் பகலில் கொள்ளையடித்தபோது, காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். அவர்களைத் தடுக்குமாறு போலீஸ்காரர்களிடம் ஆசிப் கெஞ்சியபோது, ஆசிப்பை அடித்திருக்கிறார்கள் காவலர்கள்.

குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யச்சொல்லி, அதை நேரில் கண்ட சிலர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். எந்தவொரு புகாரையும் எடுத்துக்கொள்ள போலீஸார் மறுத்துள்ளனர். இந்து வலதுசாரி குழுக்கள் பற்றிய குறிப்பை அவர்கள் தவிர்த்துவிட்டு, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியாது என்று அவர்கள் புகாரில் குறிப்பிட்டால் மட்டுமே, எஃப்ஐஆர் பதிவு செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். நசீர் தனது மொத்த இழப்பை சுமார் 7 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடுகிறார்.

காவல்துறையால் தாக்கப்பட்ட சிறுவன்
காவல்துறையால் தாக்கப்பட்ட சிறுவன்

வன்முறையால் பாதிக்கப்பட்ட முசாபர் நகரில், பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் பாலியனின் வருகைக்குப் பின்னர், வன்முறை தீவிரமடைந்து கட்டுப்பாட்டை மீறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ வைக்கப்பட்ட தேனா வங்கியின் அருகில் இந்துத்துவ குண்டர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் படங்கள், வட இந்திய ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளன. இந்தப் படங்கள் மட்டுமே அந்தப் பகுதி இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வெளியுலகிற்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன.

லக்னோவிலிருந்து ஏறத்தாழ 30 கிலோமீட்டருக்குள் அமைந்திருக்கும் மூன்று கிராமங்களிலிருந்து, 100 பேரை 50 ஆயிரம் ரூபாய் பாண்டில், எந்தவித போராட்டங்களிலும் ஈடுபட மாட்டோம் எனக் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று கூறியிருந்தது காவல்துறை. அவர்களில் ஒருவர்கூட அதுவரை எந்தப் போராட்டத்திலும் எந்தக் கலவரத்திலும் கலந்துகொண்டவர்கள் இல்லை என்பதுதான் அதில் வருந்தத்தக்க செய்தி. அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் தினமும் மாலையில் லக்னோ சென்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரவேண்டும் என்றும் கூறியிருந்தது. குறைந்தது 6 மாதத்திற்காவது இதை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறது லக்னோ காவல்துறை.

`புள்ளிவிவரங்களில் அரசியல் தலையீடு?'- விமர்சனங்களுக்குப் பிறகு சீர்திருத்தக்குழு அமைத்த மத்திய அரசு!
பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி
பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி
IANS

25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்ததாக காவல்துறை கூறியதுடன், இழப்பை ஈடுசெய்ய 28 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காக புலந்த் ஷாஹிர் மாவட்டத்தில் மட்டும் 6.27 லட்சம் ரூபாயை மக்கள் திரட்டி, அரசிடம் ஒப்படைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதாகவும், காவல்துறையினர்மீது கற்களை வீசியதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதெல்லாம் செய்த பின்னரும், அமைதியாகப் போராட மக்கள் கேட்ட அனுமதிக்கு மறுப்பு தெரிவித்தனர்.

அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து, மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தரின் அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளியிட்டது. "மாணவர்கள் மீது காவல்துறையினர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். மாணவர்கள், நிர்வாணமாக்கி சாட்டையால் அடிக்கப்பட்டனர்; இரவில் சோர்வடைந்த நிலையில் மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். திடீரென ஒரு கும்பலைப் போல காவல்துறையினர் முழக்கங்களோடு மாணவர்களை நோக்கி வந்துள்ளனர். காவல்துறையினர் விடுதிகளுக்குள் நுழைந்தபோது, 'ஜெய் ஸ்ரீ ராம்' போன்ற கோஷங்களைப் பயன்படுத்தியது" என்கிறது அவரது அறிக்கை.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

"இறந்த உடல்களை உடனடியாக எங்கேயாவது குழிதோண்டிப் புதையுங்கள்" என்று காவல்துறை வற்புறுத்தியிருக்கிறது. இறந்த 19 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இப்படி காவல் துறையைப் பயன்படுத்தி, எளிய மக்கள்மீது தாக்குதல் நடத்தியதைத் தனது 'ரௌத்திர ரூபம்' வெளிப்பட்டுள்ளதாகப் பெருமையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், யோகி ஆதித்யநாத். யோகி அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஒவ்வொரு நகரமாகப் பயணித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துவருகிறார்.

மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் வீழ்ச்சி, காவல்துறை மற்றும் நிர்வாகத்துடன் இஸ்லாமியர்களால் வெளிப்படையாகத் தொடர்புகொள்ள இயலாமை, நீதி அமைப்பு மீதான நம்பிக்கை சரிவு மற்றும் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே வெறுப்புவாதம் வளர்த்தல் போன்றவை ஆபத்தான எதிர்வினைகளை ஆற்றக்கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. அது நடந்தால், பா.ஜ.க-வின் ஒரு பொதுவான எதிரியை உருவாக்குவது என்ற டாஸ்க் முழுமையடையும். அது, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் மாடலையே உருவாக்கும்.

- ஜான் ஜே ஆகாஷ்.

அடுத்த கட்டுரைக்கு