Published:Updated:

நெல்லை: மீன்வளத்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல்; வைரலான வீடியோ - திமுக பிரமுகர்மீது வழக்கு பதிவு

அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல்

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித் தொழில் செய்பவர்களைத் தடுக்கச் சென்ற மீன்வளத்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

நெல்லை: மீன்வளத்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல்; வைரலான வீடியோ - திமுக பிரமுகர்மீது வழக்கு பதிவு

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித் தொழில் செய்பவர்களைத் தடுக்கச் சென்ற மீன்வளத்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

Published:Updated:
அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல்

சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல்வளம் அழிந்துவிடும் என்பது மீனவர்களின் அச்சம். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இந்த வலைகளைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்காணிக்கும் கடமை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இருக்கிறது. அப்படிக் கண்காணித்த அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையாகியிருக்கிறது.

வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்தோணிராய்
வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்தோணிராய்

கடந்த 2000-ம் ஆண்டு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடைவிதித்தது. அதை எதிர்த்து மீனவர்களில் ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றம் சென்றபோதிலும் அந்த வகை வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழ்நாட்டில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதை அரசு தீவிரமாகக் கண்காணிக்கிறது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம், உவரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் உதவி இயக்குநர் மோகன் குமார் தலைமையிலான அதிகாரிகள் இது குறித்து விசாரிக்கச் சென்றனர். அவர்களை உவரி கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் தடுத்திருக்கிறார்.

போலீஸ் முன்பாகவே வாக்குவாதம்
போலீஸ் முன்பாகவே வாக்குவாதம்

அதிகாரிகளை வாய்க்கு வந்தபடி அவதூறாகவும் அருவருப்பான வார்த்தைகளாலும் பேசியிருக்கிறார். காவல்துறையினர் முன்பாகவே அடிக்கவும் பாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால் அங்கிருந்த போலீஸார் தடுக்க முன்வராமல் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. உள்ளூர் பிரமுகர்கள் சிலர் மட்டுமே அவரை தடுத்ததால், அதிகாரிகள்மீது அடிவிழாமல் தப்பியது.

அதிகாரிகளிடம் தி.மு.க பிரமுகர் அந்தோணிராய் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததை அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவுசெய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்க முடிவுசெய்தனர். அதன்படி மீன்வளத்துறை ஆய்வாளர் உத்தண்டு ராமன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்
அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

அவர் புகாரைப் பதிவுசெய்த உவரி காவல்துறை ஆய்வாளர் பிரேமா, தி.மு.க பிரமுகர் அந்தோணிராய்மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தார். நடுரோட்டில், பொதுமக்கள் முன்னிலையில் மீன்வளத்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்து ஆவேசத்துடன் தி.மு.க பிரமுகர் பேசிய வீடியோ வைரலாகப் பரவுவதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.