Published:Updated:

`சீமான்மீது வழக்கு... காரணம் இதுதான்!' - கொதிக்கும் நிர்வாகிகள்

சீமான்
சீமான்

சீமான் உட்பட 20 பேர்மீது, `அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரவாயல் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது

பொது முடக்கத்தை மீறிப் போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மதுரவாயல் ஆலப்பாக்கம் அருகேயுள்ளே அஷ்டலட்சுமி நகரில், சீமானின் வீட்டுக்கு எதிராகக் கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆட்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உட்பட 20 பேர் மீது `அரசின் தடை உத்தரவை மீறுதல்’, `சட்டவிரோதமாகக் கூடுதல்’ ஆகிய பிரிவுகளின்கீழ் மதுரவாயல் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

இந்தநிலையில், ``ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கட்சியினரும்தான் பல்வேறுவிதமான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆளும்கட்சியாக அ.தி.மு.க-வே பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தியது. தற்போது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது புதிய கல்விகொள்கைக்காக அல்ல; இந்த விஷயத்தில் தமிழக அரசை பின்னாலிருந்து இயக்குவது தமிழக பா.ஜ.க-தான்’’ என்று கொந்தளிக்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.

ரஜினி, விசிக, கம்யூ... மக்கள் நலக் கூட்டணி 2.0-க்கு தயாராகிறதா மக்கள் நீதி மய்யம்? #2021TNElection

இது குறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், ``போராட்டம் நடத்தியதற்காக மட்டும் வழக்கு பதிவு செய்யவில்லை. போராட்டம் முடிந்த பிறகு அண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தி, சம்ஸ்கிருத மொழித் திணிப்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுமட்டுமல்லாமல், `இந்தியா என்பது ஒரு நாடல்ல’ எனவும், `இந்து என்கிற மதம் வெள்ளையர்களின் கையெழுத்தில் உருவானது’ எனவும் மிகக் கடுமையாகவும் பேசினார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
சீமான் செய்தியாளர் சந்திப்பு

அதோடு, `நாடற்றவர்கள் இந்த நாட்டைத் தங்களுடையதாக்கிக்கொள்ளத் துடிக்கிறார்கள்’ என்று பேசினார். அதுதான் தமிழக பா.ஜ.க-வினரை அதிகமாகக் கோபப்படுத்தியிருக்கிறது. அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கைச் சந்திக்க எங்கள் அண்ணன் தயாராகவே இருக்கிறார்'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு