Published:Updated:

ராஜேந்திர பாலாஜி: மோசடிப் புகார் அளித்த 7 பேர்... விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சம்மன்!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.78.7 லட்சம் பண மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இதுவரை புகார் அளித்த ஏழு பேருக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சம்மன். அனுப்பியிருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், உறவினர் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ.30 லட்சம் பணத்தை முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் தம்பி விஜய நல்லதம்பி பெற்றுக்கொண்டார். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என ரவீந்திரன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கடந்த நவம்பர் 15-ம் தேதி புகார் அளித்தார். இது குறித்து விஜய நல்லதம்பியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அதில், விஜய நல்லதம்பி, முருகன், இளங்கோ, பரமசிவம் ஆகியோர் மூலம் பலரிடம் ஆவினிலும், நியாயவிலைக் கடைகளிலும் வேலை வாங்கித்தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், அவர் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட நான்கு பேர் ரூ.3.1 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி. அந்த முன்ஜாமீன் மனு, கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நாளில் தி.மு.க அரசைக் கண்டித்து விருதுநகரில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ராஜேந்திர பாலாஜி, தன் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதை அடுத்து காரில் ஏறித் தப்பி தலைமறைவானார். இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

பின்னர், கூடுதலாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, பெங்களூர் என அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பகுதிகளில் தனிப்படையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 600 பேரின் செல்போன் எண்களை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பிலிருந்து அவர் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் குற்றப்பிரிவு போலீஸார், `லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். இதற்கிடையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக கடலோரக் கண்காணிப்பையும் போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். தூத்துக்குடி முதல் வேதாரண்யம் வரையிலான அனைத்து மீனவ கிராமப் பகுதிகளிலும் கண்காணித்துவருகின்றனர். அத்துடன் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளும் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்குப் பிடி மேலும் இறுகுவதால் விரைவில் அவர் கைதுசெய்யப்படலாம் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், சிவகாசியைச் சேர்ந்த குணா தூயமணி என்பவர் அவர் மகனுக்கு ராஜேந்திர பாலாஜி மூலமாக ஏ.பி.ஆர்.ஓ வேலை வாங்கித் தரச்சொல்லி முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி விஜயநல்லதம்பி, அவர் மனைவி மாலதி, அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமுதேவன்பட்டி ஆகியோரிடம் ரூ.17 லட்சம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். அதேபோல, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த நாதன், தன் மகனுக்கு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தர சிவகாசி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கணேசனிடமும், ராஜேந்திர பாலஜியிடமும் ரூ.7 லட்சம் கொடுத்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜி மீது ஏழு பேர் அளித்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அவர் ரூ.78.7 லட்சம் வரை ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது புகார் அளித்த ஏழு பேருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பியிருக்கின்றனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டவிருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தலைமறைவாகியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் அவரைக் கைதுசெய்ய டெல்லி விரைந்திருக்கின்றனர்.