Published:Updated:

நாங்குநேரியில் வசந்தகுமார் எம்.பி கைது!- தேர்தல் விதிமுறையை மீறியதாகப் புகார்

நெல்லை மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குள் அத்துமீறி தங்கியிருந்ததாக வசந்தகுமார் எம்.பி-யை போலீஸார் விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Vasanthakumar MP
Vasanthakumar MP

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார் ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அந்தத் தொகுதியில் தற்போது போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரசாரம் செய்தும்வந்தார்.

நாங்குநேரி காவல்நிலையம்
நாங்குநேரி காவல்நிலையம்

தேர்தல் பிரசாரம் 19-ம் தேதி மாலையுடன் ஓய்ந்த நிலையில், தொகுதியில் தங்கியிருந்த வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவவலர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனால் தொகுதியில் தங்கியிருந்த அமைச்சர்கள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த கட்சிக்காரர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.

நாங்குநேரி... உற்சாகத்தில் கதராடைகள்! - விக்கிரவாண்டி... துள்ளிக்குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யுமான வசந்தகுமார் எம்.பி நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கலுங்கடி என்ற கிராமத்தில் இருப்பதாகத் தேர்தல் அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெளியூர் நபர்கள் இருக்கக் கூடாது என்ற தேர்தல் விதியை மீறி அவர் தொகுதிக்குள் இருந்ததால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக நாங்குநேரி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

காவல்நிலையத்தில் வசந்தகுமார் எம்.பி
காவல்நிலையத்தில் வசந்தகுமார் எம்.பி

இது குறித்து ஹெச்.வசந்தகுமார் எம்.பி கூறுகையில், ``பாளையங்கோட்டையில் உள்ள என் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நாங்குநேரி தொகுதிக்குள் நுழையக் கூடாது என போலீஸார் தடுத்தனர். நான் ரோட்டில் தான் செல்கிறேன். தொகுதியில் பரப்புரை எதையும் மேற்கொள்ளவில்லை என்பதைச் சொல்லியும் போலீஸார் தடுத்து விட்டார்கள். ஜனநாயக நாட்டில், நாடாளுமன்ற உறுப்பினரான எனக்குச் சாலையில் செல்வதற்குக் கூட உரிமை கிடையாதா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, தேர்தல் விதிமுறை மீறல், சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நாங்குநேரி... உற்சாகத்தில் கதராடைகள்! - விக்கிரவாண்டி... துள்ளிக்குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

அதேபோல், நாங்குநேரி தொகுதியில் விதிகளை மீறி தங்கியிருந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதும் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.