Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

ஈரோட்டில் சரிகிறதா செங்‘கோட்டை’?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆல் இன் ஆலாக இருந்தவர், அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கிக்கொடுக்கவில்லை என்று செங்கோட்டையன் மீது சிந்து மனவருத்தத்தில் இருந்தார். இந்தநிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-விலிருந்து விலகிய சிந்து, கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.கந்தசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, ஒரு யூனியன் சேர்மன், மூன்று யூனியன் கவுன்சிலர்கள், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர், மாவட்ட வர்த்தக அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணிச் செயலாளர்கள் என ஈரோடு மாவட்ட அ.தி.மு.க-வின் மொத்த நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துவிட்டார். “பயலுக நேத்து ராத்திரி வரைக்கும் நம்மோடதானே இருந்தாங்க... இப்போ வேரோட சாய்ச்சிப்புட்டாங்களே!” என்று அழாத குறையாகப் புலம்புகிறதாம் செங்கோட்டையன் தரப்பு!

கரைவேட்டி டாட் காம்

“திருப்பத்தூரா, திருப்பூரா?” - கன்ஃபியூஸ் ஆன சி.வி.சண்முகம்!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அடிக்கடி ‘டங்க் ஸ்லிப்’ ஆவதாக சொந்தக் கட்சி நிர்வாகிகளே முணுமுணுக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘எடப்பாடி பழனிசாமி’ என்று சொல்வதற்கு பதிலாக ‘எடப்பாடி பன்னீர்செல்வம்’ உச்சரித்தார். மறுபடியும் எடப்பாடியின் பெயரை உச்சரிக்கும்போது, ‘எடப்பாடி பழனிசெல்வம்’ என்று உளறிக் கொட்டினார். இதேபோல ஜூன் 28-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசியவர், ‘திருவள்ளுவர் பல்கலைக்கழகம்’ என்பதற்கு பதிலாக ‘திருவள்ளூர் மாவட்டம்’ என்றார். தொடர்ந்து ‘திருப்பத்தூர் மாவட்டம்’ என்று சொல்வதற்கு பதிலாக ‘திருப்பூர்’ என்றார். இதையடுத்து அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள், “கண்ணதாசா... ஜேசுதாசானு தலைவரே ரொம்ப கன்ஃபியூஸ் ஆகிட்டாரு!” என்று கமென்ட் அடித்தபடியே நகர்ந்தார்கள்.

கும்பகோணம் தி.மு.க குஸ்தி!

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் காயத்ரி. இவரின் கணவர் அசோக்குமார், கும்பகோணம் தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இதே ஊராட்சி ஒன்றியத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் கணேசன். சமீபத்தில் மேற்கண்ட இருதரப்பினர் இடையே நடந்த தள்ளுமுள்ளுதான் கும்பகோணத்தின் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய காயத்ரி, “புதிய மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குள்ளேயே முடித்துக்கொள்கிறார்கள். என் கவனத்துக்கு அது வர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு கணேசன், “கொரோனா தடுப்புக் கூட்டத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டிருக்கிறார். அங்கிருந்த காயத்ரியின் கணவர் அசோக்குமார், “உன்னைக் கூட்டத்துக்குக் கூப்பிடவே இல்லையே... ஏன் நீ வந்திருக்க?” என்று கணேசனைப் பார்த்துக் கேட்க, பதிலுக்கு கணேசனோ, “மக்கள் பிரதிநிதிகள் இருக்குற இடத்துல கட்சி ஆளுக்கு என்ன வேலை? வெளியே போ” என்று எகிற... இருதரப்பினரும் மாறி மாறி ஒருமையில் திட்டித் தீர்த்தார்கள். ஒருகட்டத்தில் நிலைமை கைகலப்பு ஆகும் அளவுக்கு மோசமாக, ஒன்றிய அலுவலர்கள் அவர்களைச் சமாளிப்பதற்குள் படாதபாடுபட்டிருக்கிறார்கள். “எல்லாம் கமிஷன் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு... கடைசிவரை கொரோனா தடுப்பு பற்றி ஆலோசிக்கவே இல்லை!” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் கும்பகோணம் மக்கள்!

கரைவேட்டி டாட் காம்

நீலகிரி ‘போட்டோ போஸ்’ கலாட்டா!

நீலகிரி மாவட்ட தி.மு.க துணைச் செயலாளராக இருப்பவர் ரவிக்குமார். இவர், நீலகிரியில் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவிகள் செய்வதாக அடிக்கடி தினசரிகளில் செய்திகள் வெளியாகின. இதை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிடுவார். அவற்றுக்கு ரவிக்குமாரின் ஆதரவாளர்கள் `ஆஹா... ஓஹோ...’ கமென்ட்டுகள் போடுவதும் வாடிக்கை. சமீபத்தில் இவரின் எதிர்க்கோஷ்டியினர், இவர் உதவி செய்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒன்றிரண்டு குடும்பங்களுக்கு மட்டுமே உதவி செய்து, அதை போட்டோ எடுத்து, பல நூறு குடும்பங்களுக்கு உதவிசெய்வதுபோல நாளிதழ்களில் செய்திகள் வரவழைப்பது தெரியவந்ததாம். இதனால் கடுப்பான எதிர்க்கோஷ்டியினர் இவரது செய்திகள் இடம்பெற்ற நாளிதழ்களுடன் நீலகிரி தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், ‘‘உங்க பித்தலாட்டத்தைத் தலைமைக்குச் சொல்லி, உங்களைப் பதவியிலிருந்து தூக்காம விட மாட்டோம்’’ என்று எச்சரித்துவிட்டும் சென்றுள்ளார்கள். இதனால், பதற்றத்தில் இருக்கிறாராம் துணைச் செயலாளர்!

புதுச்சேரியில் ‘தந்தை’ எம்.எல்.ஏ அப்செட்!

அமைச்சர் பதவியைப் பிடிப்பதற்காக நடந்த தகராறுகளால் தாறுமாறாகப் பிரிந்துகிடக்கிறது புதுச்சேரி பா.ஜ.க. இந்தநிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பா.ஜ.க அமைச்சர் ஒருவர், குற்றம்சாட்டப்படும் நபருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து, அந்த அமைச்சரால்தான் தனக்குக் கிடைக்க வேண்டிய பதவி கை நழுவியது என்று கடுப்பிலிருக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ‘அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சிறுமியின் பெற்றோரை அணுகியதுடன், பாலியல் விவகாரத்தை டெல்லிக்கும் தட்டிவிட்டிருக்கிறார். ஆனால், டெல்லியிலிருந்து பாசிட்டிவ் பதில் வராததால், கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அந்தத் தந்தை எம்.எல்.ஏ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism