பிரீமியம் ஸ்டோரி

‘அடைமொழி’ அதகளம்!

தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ஏதாவது ஓர் அடைமொழியுடன் அழைக்கப்படுவது வழக்கம். சிலருக்கு அந்த அடைமொழியே பெயரைப்போல மக்களிடம் நிலைத்துவிடும். அந்த வரிசையில், புதிதாக ம.தி.மு.க-வில் பொறுப்புக்கு வரவிருக்கும் துரை வைகோவையும் அடைமொழியுடன் கட்சியினர் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் 20-ம் தேதி நடக்கவிருக்கும் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து முடிவுசெய்யப்படவிருக்கும் நிலையில், இப்போதே அவரை மாவட்டச் செயலாளர்கள் பலரும் ‘கரிசல் வேங்கை’ என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கட்சிப் பொறுப்பேற்றதும் முதன்முதலாக சங்கரன்கோவிலில் நடக்கவிருக்கும் வரவேற்புக் கூட்டத்தில், ‘கரிசல் வேங்கை’ துரை வைகோ என்ற அடைமொழி அவருக்கு அதிகாரபூர்வமாக வழங்கப்படுமாம்!

தொடர்பு எல்லைக்கு வெளியே அ.தி.மு.க மா.செ!

தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் தங்கமான மாவட்டச் செயலாளர், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு அவர் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருக்கிறாராம். ‘‘தொண்டர்கள் அல்ல... மாவட்ட நிர்வாகிகள் போன் செய்தாலே அவர் எடுப்பதில்லை. தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சியின்போது மட்டும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, காரில் ஏறி டாட்டா காட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். அதன் பிறகு அவரை வேறு எங்கும் பார்க்க முடிவதில்லை. இப்படியொரு மா.செ எங்களுக்கு எதற்கு?’’ என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள்.

எதிர்க்கட்சியா இருக்கும்போது எதிர்ப்பு... ஆளுங்கட்சியா இருக்கும்போது அமௌன்ட்டு!

டெல்டா மாவட்ட முக்கியத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான இனிஷியல் பிரமுகர்தான், கடந்த முறையும் எம்.எல்.ஏ-வாக இருந்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், அ.தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவருடைய உறவினர், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எலைட் டாஸ்மாக் மற்றும் பாருக்கான உரிமம் பெற்று திறப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். இதை எம்.எல்.ஏ எதிர்த்த நிலையில், ‘டாஸ்மாக் கடையைத் திறக்கவிட மாட்டேன்’ எனவும் அப்பகுதி மக்களிடம் உறுதி கூறினார். அவரின் ஆதரவாளர்களும் இதற்காகப் போராட்டம் நடத்திய நிலையில், டாஸ்மாக் திறக்கப்படுவது தடுக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆட்சி மாறிய நிலையில், அந்த எலைட் டாஸ்மாக் கடை வெற்றிகரமாகத் திறக்கப்பட்டுவிட்டது. `எதிர்க்கட்சியாக இருந்தபோதே அதைத் தடுத்த எம்.எல்.ஏ-வால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது தடுக்க முடியாமல் போனது எப்படி?’ எனப் பலரும் குழம்பிக்கொண்டிருக்க... `எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க சில லட்சங்களைக் கொடுத்ததுடன், மாதம் ஒரு தொகை தருவதாக எம்.எல்ஏ-விடம் அ.தி.மு.க புள்ளி டீல் பேசி காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டார். எம்.எல்.ஏ-வும் கப்சிப் ஆகிவிட்டார்’ என்று தி.மு.க தொண்டர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

‘‘சம்பாதித்த நிர்வாகிகள் துரும்பைக்கூட கிள்ளிப்போடலை!’’

அ.தி.மு.க-வின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி, புதுக்கோட்டை அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவர் வைரமுத்து உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் திருவரங்குளம் போஸ், “அ.தி.மு.க-விலிருந்து சம்பாதித்த முக்கிய நிர்வாகிகள் யாரும் தொண்டர்களுக்காகச் சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. பல வருடங்களாக நான் கட்சிக்காக உழைச்சுக்கிட்டிருக்கேன். ஏன், இங்கிருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரே என்னைப் போன்றவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. எனக்கு மற்றவர்களைப்போல காக்கா பிடிக்கத் தெரியாது. தேர்தல் பணியின்போது, கட்சிக்காக என் சொந்தக் காசைப் போட்டு வேலை செய்ததைப் பார்த்த வைரமுத்து ஒருமுறை 5,000 ரூபாய் கொடுத்துவிட்டுப் போனார்’’ என்று கூற, போஸின் பேச்சுக்குத் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதனால், அதிர்ந்துபோன விஜயபாஸ்கர், புன்சிரிப்புடன் எழுந்து ‘‘போஸ் போன்றவர்களுக்கும் பொன்விழாவையொட்டி பொற்கிழி வழங்கப்படும்’’ என்று அறிவித்து போஸின் பேச்சை முடிவுக்குக் கொண்டுவந்தார்!

செ.ம.வேலுசாமி போஸ்டர்... கடுப்பில் எஸ்.பி.வேலுமணி தரப்பு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணிக்கும் செ.ம.வேலுசாமிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வேலுமணியின் ஆதிக்கத்தால் வேலுசாமி பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கிறார். ஆனாலும், அவ்வப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் ஏதாவது போஸ்டர் ஒட்டுவார். அதில், வேறு நிர்வாகிகளின் படங்களை அவர் வைப்பதில்லை. எனவே, வேலுசாமி இன்னும் கடுப்புடன்தான் இருக்கிறார் என்று பேசப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கோவை சுற்றுவட்டாரங்களில் வேலுசாமி புதிதாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார். அதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், அப்போதும்கூட மா.செ-வான வேலுமணியின் படம் இடம்பெறவில்லை. இதனால், வேலுமணி தரப்பினர் கடுப்பில் இருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு