பிரீமியம் ஸ்டோரி

‘‘செந்தில் பாலாஜியை நம்புனது வேஸ்ட்!” - கரூர் மாஜிக்கள் புலம்பல்...

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்த கீதாவும், அதற்கு முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.காமராஜும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்கள். ‘‘உங்களுக்கு எங்க கட்சியில சீட் வாங்கித் தருகிறேன்’’ என்று காமராஜிடம் பேசி, தேர்தலுக்கு முன்பே அவரை தி.மு.க-வுக்கு அழைத்துவந்தார் செந்தில் பாலாஜி. தேர்தலுக்குப் பிறகு, ‘கட்சியில உங்களுக்குப் பொறுப்பு வாங்கித் தருகிறேன்’ என்று கூறி கீதாவையும் தி.மு.க-வுக்கு அழைத்துவந்தார். ஆனால், தற்போது இருவருமே தி.மு.க-வில் இருக்கும் இடம் தெரியவில்லை. இதையடுத்து, இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ-க்களும், ‘‘பேசாம அ.தி.மு.க-வுலேயே இருந்திருக்கலாம். செந்தில் பாலாஜியை நம்பி வந்து ஏமாந்ததுதான் மிச்சம்’’ என்று தங்கள் ஆதரவாளர்களிடம் புலம்பிவருகிறார்களாம்!

கரைவேட்டி டாட் காம்

யானை வழித்தட ஆக்கிரமிப்பு... நீலகிரியில் முட்டிமோதும் பட்ஜெட் புள்ளி!

தனியார் தங்கும் விடுதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் மசினகுடி யானைகள் வழித்தடத்தை மீட்க, வனவிலங்கு பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் பல வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்திவருகிறார்கள். வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆய்வும் நடைபெற்றுவருகிறது. இதில் பட்ஜெட் புள்ளியின் நண்பர் நடத்திவரும் ரிசார்ட் ஒன்று யானைகள் வழித்தடத்தில் அமைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நண்பரின் ரிசார்ட்டுக்குச் சிக்கல் ஏற்படாமலிருக்க யானைகள் வழித்தட வரைபடத்தை மாற்றிக் கொடுக்கும்படி வனத்துறையினருக்கு அழுத்தம் தருகிறாராம் பட்ஜெட் புள்ளி. இந்த விவகாரத்தில் ‘அப்பாவி’ அதிகாரி “முடியாது” என்று கறார் காட்டுவதால், இரு தரப்பும் முட்டிக்கொண்டு நிற்கின்றன!

கவனிப்போ கவனிப்பு! - குஷியில் திருச்சி தி.மு.க நிர்வாகிகள்...

திருச்சி மாவட்ட அமைச்சர்களான நேருவும், அன்பில் மகேஷும் கட்சி நிர்வாகிகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளிப் பரிசுகள் வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். நிர்வாகிகளுக்கு தலா 5,000 ரூபாயும், இனிப்பு, காரம், பட்டாசுடன் புத்தாடையும் வழங்கியிருக்கிறார் நேரு. அன்பிலோ 5,000 ரூபாய் மற்றும் இனிப்பு, காரம், பட்டாசு, புத்தாடையுடன் காஸ் அடுப்பும் வழங்கியிருக்கிறார். இன்னொரு பக்கம் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜும், கட்சி நிர்வாகிகளுக்கு 2,000 ரூபாயுடன் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து, கட்சியினரை குஷிப்படுத்தியிருக்கிறார். விரைவில் மாநகராட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சியினரை தக்கவைத்துக்கொள்ளவே இந்த கவனிப்புகள் என்கிறார்கள் மலைக்கோட்டை தி.மு.க கரைவேட்டிகள்!

செந்தில் பாலாஜியின் முதல் கூட்டம்... கோவையில் தொடங்கிய களேபரம்!

தி.மு.க-வில் கோவை மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நடத்திய முதல் கூட்டமே பஞ்சாயத்தில் முடிந்திருக்கிறது. கூட்டத்தில், தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உடன்பிறப்புகளை ஒருமையில் வெளுத்துவாங்க... செந்தில் பாலாஜி வாயடைத்துப்போனார். இதைத் தொடர்ந்து கடுப்பான நிர்வாகிகள் சிலர், அமைச்சர் முன்னிலையிலேயே ராமச்சந்திரனைக் காய்ச்சியெடுக்க... அந்த இடமே ரணகளமாகியிருக்கிறது. அமைச்சர் தரப்பினர் எவ்வளவோ தலையிட்டும், “உங்க சமாதானம் எங்களுக்குத் தேவையில்லை” என்று கொந்தளித்த நிர்வாகிகள் சிலர், கடைசியில் ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்ட பிறகே அமைதியானார்கள். பின்னணியை விசாரித்தால், “கரூர்க்காரருக்கு இங்க என்ன வேலை?” என்று கமுக்கமாகச் சிரிக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

கரைவேட்டி டாட் காம்

“அண்ணாச்சி பத்தியா பேசுற?” - தூத்துக்குடி அருவருப்பு அரசியல்...

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் ஆகியோர் தனித்தனி அணிகளாக முறுக்கிக்கொண்டு நிற்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த நிலையில் சமீபத்தில் நடந்துள்ள மோசமான சம்பவம் ஒன்று அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு செல்லப்பாண்டியன் நடத்திய அ.தி.மு.க பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பேசிய அ.தி.மு.க பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, ‘‘சாதாரண வைத்தியரா இருந்த சண்முகநாதன், கட்சியில வளர்ந்த கதை தெரியுமா!” என்று சண்முகநாதன் பற்றி நக்கல் அடித்துப் பேச... அவரின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தார்கள். இதையடுத்து, கருணாநிதி தன் மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சண்முகநாதனின் உதவியாளர் சகாயராஜ், சந்தனப்பட்டு, தனம் ஆகியோர் இடைமறித்து, “அண்ணாச்சியைப் பத்தியா பேசுற?” என்றபடி பிளாஸ்டிக் கவரிலிருந்த ‘அசிங்கத்தை’ கருணாநிதியின் முகத்தில் எறிந்துவிட்டு, கத்தியால் குத்த முயன்றிருக்கிறார்கள். கடும் பதற்றம் தொற்றிக்கொண்ட நிலையில் இது தொடர்பாக சண்முகநாதன் உட்பட நான்கு பேர்மீது தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘‘கட்சின்னா கோஷ்டிப் பூசல் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படியா செய்யறது?’’ என்று புலம்புகிறார்கள் தூத்துக்குடி அ.தி.மு.க-வினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு