Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

புதுச்சேரி சட்டப்பேரவை அமைச்சர்கள் தங்களது அலுவலகத்துக்கு உதவியாளர்கள், ஓட்டுநர், செயலர் என்று 11 பேரை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

‘‘இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ?’’ - கோவை அ.தி.மு.க குமுறல்...

கரைவேட்டி டாட்காம்

கோவை அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இல்லையென்றாலும், அந்த அழகிய பெண் நிர்வாகியைப் பார்த்தாலே மாவட்டச் செயலாளர்கள் முதல் எம்.எல்.ஏ-க்கள் வரை பதறுகிறார்கள். தனக்கென்று ஐடி விங், கோஷம் போடவும், கட்சிக் கூட்டங்களில் மேடையில் அவருக்கு சீட் பிடிக்கவும் என்று எல்லாற்றுக்கும் பத்து பேர்கொண்ட குழுவையே வைத்திருக்கிறாராம். “வெள்ளை நிறப் புடவை, அதன் பார்டரில் அ.தி.மு.க கொடியுடன் பழைய ஜெயலலிதா கெட்டப்பில் வலம்வருபவர் கட்சி நிகழ்ச்சிக்கு வந்தால், கீழேயிருந்து சேர் எடுத்து மேடையில் போடச் சொல்லி அவராகவே அமர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சிகள் கட்சி அலுவலகத்திலும், பொது இடங்களிலும் நடக்க, அம்மணி மட்டும் தன் வீட்டைச் சுற்றி ஏதாவது செய்து லைம்லைட்டில் இருக்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் அம்மணியைப் பற்றி, ‘‘அண்ணே உங்களைவிட பிரஸ்காரங்களை அந்தம்மாதான் அதிகம் மீட் பண்றாங்க” என்று முன்னாள் அமைச்சர் வரை புகார் சென்றுவிட்டதாம். ஆனாலும், அமைதியேதான் பதிலாக வந்திருக்கிறது. அந்தப் பெண் நிர்வாகியைப் பற்றிப் பேசினாலே, ‘‘நாங்க எதுவும் பண்ண முடியாது’’ என்று சீனியர்கள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இதையடுத்து, ‘இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ..?’ என்று குமுறுகிறார்கள் கோவை அ.தி.மு.க-வினர்!

கரைவேட்டி டாட்காம்

விநாயக அமைச்சர் மாயமாவது ஏன்?

விநாயகக் கடவுளின் பெயர்கொண்ட கடலோர மாவட்ட அமைச்சர் ஒருவர், சென்னையில் இருக்கும் நாள்களில் பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினரை வீட்டைச் சுற்றி நிறுத்திவிட்டு, ரகசியமாக மாயமாகிவிடுகிறார். டி-ஷர்ட், டிராக் ஷூட்டுக்கு மாறுபவர், பின்வாசல் வழியாக ஆட்டோவில் ஏறி மேற்கு நோக்கிப் பறந்து, சில மணி நேரங்கள் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்புகிறாராம். ‘அமைச்சர் எங்கு செல்கிறார், ஏன் மாயமாகிறார்?’ என்பது தெரியாததால், “அவரது பாதுகாப்புக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?” என்று புலம்புகிறார்கள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள்.

கரைவேட்டி டாட்காம்

‘‘பயப்படுறாங்களா... சீன் போடுறாங்களா?’’ - திருத்துறைப்பூண்டி தில்லு முல்லு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த தி.மு.க உடன்பிறப்புகளின் புலம்பல் இது... ‘‘அ.தி.மு.க-வுலயும், அ.ம.மு.க-வுலயும் முக்கியப் பிரமுகர்களா இருந்த ரெண்டு பேர், சில மாசத்துக்கு முன்னாடி எங்க கட்சியில சேர்ந்தாங்க. ‘ஆளுங்கட்சிப் பிரமுகர்’ங்கிற பேருல இவங்க செய்யற அழிச்சாட்டியம் தாங்க முடியலை. சட்டவிரோதச் செயல்கள்ல ஈடுபடுறவங்களுக்கு ஆதரவா போலீஸ் ஸ்டேஷன்ல ஜம்பமா உக்காந்து கட்டப் பஞ்சாயத்துப் பேசுறாங்க. இதைப் பொறுக்க முடியாத கட்சி சீனியர்கள் சிலர், ‘அந்த ரெண்டு பேருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேணாம்’னு போலீஸ்காரங்ககிட்ட சொல்லிட்டாங்க. ஆனா, போலீஸ்காரங்களோ, ‘மாவட்ட பொறுப்புல இருக்குற ஒருத்தரோட இந்த ரெண்டு பேரும் நேரடித் தொடர்புல இருக்காங்க’னு சொல்லிட்டு அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறாங்க. அவங்க ரெண்டு பேரையும் பார்த்து போலீஸ்காரங்க உண்மையாவே பயப்படுறாங்களா இல்லை பயப்படுற மாதிரி சீன் போட்டுக்கிட்டு, மாமூல் வாங்குறாங்களானு தெரியலை’’ என்று நொந்துகொள்கிறார்கள்.

கரைவேட்டி டாட்காம்

‘‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!’’ - புதுச்சேரி அமைச்சரின் லா லா லா...

புதுச்சேரி சட்டப்பேரவை அமைச்சர்கள் தங்களது அலுவலகத்துக்கு உதவியாளர்கள், ஓட்டுநர், செயலர் என்று 11 பேரை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். அமைச்சரின் பதவிக்காலம் முடியும்வரை அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படும். அமைச்சரின் பதவிக்காலம் முடிந்தவுடன், அவர்களும் விடுவிக்கப்படுவார்கள். இந்தப் பணிகளுக்கு தனது தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், கட்சியினரை அமைச்சர்கள் நியமித்துக்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது முருகனின் பெயரைக்கொண்ட அந்த அமைச்சர், மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் தன் மனைவி, மைத்துனர், பங்காளிகள், ஒன்றுவிட்ட மாமா, சித்தப்பா என உறவினர்களை அமர்த்திக்கொண்டு, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...’ என்று லா லா லா பாடாத குறையாகத் திளைக்கிறார். ‘இதென்ன புது டெக்னிக்கா இருக்கே...’ என்று சக அமைச்சர்களே கமென்ட் அடித்துக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், வேலைவாய்ப்பு பறிபோனதில் அமைச்சரின் ஆதரவாளர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

கரைவேட்டி டாட்காம்

‘‘காக்கி சட்டைக்கு கறுப்பு சட்டை துணை போகலாமா?’’ - ஆம்பூர் அலப்பறை...

‘ஐயாம் சிட்டிசன் ஆஃப் இந்தியா’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் முதல் எம்.எல்.ஏ வரை ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு வம்பிழுத்துவருகிறார் ஆம்பூரைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சரிதாவின் கணவர் வழக்கறிஞர் முத்துக்குமரன். பொது நிகழ்ச்சிகளில், கவுன்சிலரான தன் மனைவிக்குச் சாதாரண நாற்காலி போடப்படுவதாகப் பொங்கியவர், ஒருநாள் இரவு ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனுக்குப் போன் செய்து, ஏடாகூடமாகத் திட்டியிருக்கிறார். இதனால், கடுப்பான எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் முத்துக்குமரனின் வீட்டை ரவுண்ட் கட்டினார்கள். இது தொடர்பாக எம்.எல்.ஏ மீது அவர் கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய மறுத்ததால், ஆம்பூர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். ‘மறுபடியும் காவல் நிலையத்துக்கே போய் புகார் கொடுங்க’ என்ற நீதிபதியிடம், ‘கனம் நீதிபதி அம்மா அவர்களே... காக்கி சட்டைக்கு, கறுப்பு சட்டை துணை போகலாமா?’ என்று முத்துக்குமரன் கேள்வி கேட்டார். முத்துக்குமரனின் வாய்த்துடுக்கு வடமாவட்டம் முழுக்க பப்ளிசிட்டி ஆனதால், தற்போது தி.மு.க-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்!