அரசியல்
அலசல்
Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

‘‘அக்காவா... அறிவாலயமா... டெல் மீ?’’

மேற்குப் பக்கமுள்ள முக்கிய மாநகராட்சியில் மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் என அனைவருமே ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள்தான். தற்போது, மாநகராட்சி கவுன்சிலராகவும், கல்விக்குழுத் தலைவராகவும் உள்ள மகளிரணி நிர்வாகி, ஏற்கெனவே மேயர் பதவியைப் பிடிப்பதற்காகக் கடும் முயற்சி செய்தவர். அது கிடைக்காமல் போனதால், கிடைத்த குழுத் தலைவர் பதவியையே மேயர் பதவிக்கு இணையாகப் பார்க்கும் மனநிலைக்கு மாறிவிட்டாராம் அம்மணி. மேயர் முதல் அதிகாரிகள் வரை அனைவரிடமும் அவர் காட்டிவரும் அதிகார பந்தாவைக் கண்டு, சக பிரதிநிதிகளே கடுப்பாகி, “ஏங்க... நீங்க மேயர் கிடையாது, குழுத் தலைவர்தான். கொஞ்சம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க...” என்று ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அலட்டல் செய்துவரும் அம்மணி, வடிவேலு ‘லேடன்கிட்ட பேசுறியா?’ என்று கேட்பதுபோல, “அக்காகிட்ட பேசுறீங்களா... இல்லை அறிவாலயத்துல பேசுறீங்களா... டெல் மீ?” என்று கேட்டு மிரட்டுகிறாராம்!

கரை வேட்டி டாட் காம்

ஐடி விங் கலாட்டா... கொதிப்பில் ‘குளுகுளு’ மாவட்டம்!

குளுகுளு மாவட்ட ஆளுங்கட்சி ஐடி விங்கில், இளம் நிர்வாகி ஒருவரைச் சம்பளம் கொடுத்து கட்சியில் வைத்திருக்கிறார்களாம். பெயருக்குப் பின்னால் பகிரங்கமாகச் சாதிப் பட்டத்தைப்‌ போட்டுக்கொண்டு திரியும் அந்த நிர்வாகிதான் மா.செ-வின் கொ.ப.செ-வாம். உள்ளூர் அமைச்சரை இருட்டடிப்பு செய்து,

மா.செ-வுக்கு ஓவர் விளம்பரம் கொடுத்திருக்கிறார். கடுப்பான அமைச்சர் தரப்பு, குளுகுளு மாவட்ட ஐடி விங் கலாட்டாவைச் சின்ன தளபதியின் காதுக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். ‘பொய் பிரசாரம் செய்யும் உள்ளூர் அ.தி.மு.க-வுக்குப் பதிலடி கொடுப்பதை விட்டுவிட்டு, கட்சிக்குள் பிளவை உண்டாக்கும் அந்த நிர்வாகியை என்ன செய்யலாம்..?’ என்று சிந்தித்துவருகிறாராம் சின்ன தளபதி!

“எம்.பி பதவியால் என் நிம்மதியே போச்சு..!” - புலம்பித் தீர்க்கும் எம்.பி!

முட்டைத் தொகுதி மக்களவை உறுப்பினரான இனிஷியல் புள்ளி, வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ஆளுங்கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ‘மாவட்ட ஆட்சியரில் ஆரம்பித்து, கடைக்கோடி அரசு ஊழியர் வரை யாருமே என்னை மதிப்பதில்லை’ என்று தொடர்ச்சியாகவே புலம்பிவந்தார். அதே மாவட்டத்தின் நியமன எம்.பி-தான் இதன் பின்னணியில் இருக்கிறார் என்று ஆளுங்கட்சித் தலைமைக்கும் புகார் கொண்டுசென்றார். வழக்கம்போல், எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட கட்சித் தலைமை, நியமன எம்.பி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு... அண்மையில் ராசியான பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இனிஷியல் புள்ளி, ‘இந்த எம்.பி பதவியால் என் மன நிம்மதியே போச்சு... நல்லவர்கள் அரசியலில் நீடிப்பது ரொம்ப கஷ்டம்’ என்று அழாத குறையாகப் புலம்பித் தீர்த்திருக்கிறார்!

கரை வேட்டி டாட் காம்

நட்சத்திரத்தோடு மோதும் சுகர்... ரத்தத்தின் ரத்தங்கள் ரகிட ரகிட!

ஓ.பி.எஸ் ஆதரவாளராக வலம்வருவதால், இனிப்பான அந்த முன்னாள் அமைச்சரின் மாவட்டப் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, காலியான பதவியைப் பிடிப்பதற்காக நட்சத்திரப் பெயர்கொண்ட புள்ளி ஒருவரும், ‘சுகர்’ புள்ளி ஒருவரும் தீவிரமாகக் களமாடிவருகின்றனர். புதிதாகக் கட்சி அலுவலகம் திறந்து நிர்வாகிகளைக் கூட்டி, கூட்டம் போட்டு அதகளம் செய்திருக்கிறார் நட்சத்திரப் புள்ளி. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை எடப்பாடியாரிடம் அழைத்துச் சென்று மாஸ் காட்டிவருகிறார் சுகர் புள்ளி. இருவரில் யாருக்குப் பதவி கிடைத்தாலும், எதிர் அரசியல் செய்ய அரை ஜோடி தலைவர்கள் ரெடியாக இருக்கின்றனர் என்று காதைக் கடிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

கட்டிங் கேட்கும் அமைச்சரின் பி.ஏ-க்கள்... கதறும் கட்சித் தொண்டர்கள்!

உப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளராகவும் இருப்பதால் அவரைத் தேடி கட்சிக்காரர்கள் படையெடுப்பது வழக்கம். ஆனால், அமைச்சரின் பர்சனல் பி.ஏ-க்கள் இருவரும் அவ்வளவு எளிதில் அமைச்சரைச் சந்திக்கவிடுவதில்லையாம். ‘என்ன விவகாரம்..?’ என வாசலிலேயே நிற்கவைத்து விசாரித்து, விவகாரங்களுக்கேற்ப ‘கட்டிங்’ பெற்ற பிறகே அப்பாயின்ட்மென்ட் கொடுக்கிறார்களாம். அமைச்சர் மூலம் காரியம் கைகூடினால் அதற்குத் தனி கட்டிங்காம். ‘அண்ணன்கிட்ட நம்ம பிரச்னையைச் சொல்லி தீர்வு கேட்கலாம்னு வந்தா, இங்கே அண்ணனைச் சந்திக்கிறதே பெரிய பிரச்னையா இருக்கே... கன்னா பின்னான்னு கட்டிங் கேட்குறாங்களே...’ எனச் சொந்தக் கட்சியினரே தலையிலடித்துக்கொள்கிறார்கள்!