அரசியல்
Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

‘‘என்னை மீறி எதுவும் நடக்காது!’’

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வான விஜயகுமார் மீது சொந்தக் கட்சியினரான அ.தி.மு.க-வினர் ஏகக்கடுப்பில் இருக்கிறார்கள். ‘தன்னைச் சுற்றியிருக்கும் நான்கு பேருக்கு மட்டுமே விஜயகுமார் டெண்டர்களை வழங்கிவருகிறார். அதனால், வரும் தேர்தலில் யாரும் அவருக்காக வேலை பார்க்கக் கூடாது’ என்று நிர்வாகிகள் சிலர் முடிவெடுத்துள் ளார்களாம். அதைத் தெரிந்துகொண்ட விஜயகுமார், ‘‘நான் தோக்கறதுனு தெரிஞ்சுடுச்சுன்னா, கூட்டணிக் கட்சிக்கு தொகுதியைத் தள்ளிவிட்டுடுவேன். என்னை மீறி இந்தத் தொகுதியில யார் ஜெயிக்குறாங்கனு பார்த்துடலாம்” என்று தன் ஆதரவாளர்களிடம் கூறிவருகிறாராம். எம்.எல்.ஏ-வின் அதிரடிப் பேச்சையறிந்து கொதித்துப்போயிருக்கிறது இலைக்கட்சி வட்டாரம்.

கரை வேட்டி டாட் காம்

அருமனை கிறிஸ்துமஸ் விழா - எடப்பாடிக்குத் தடைபோடும் நிர்வாகிகள்!

டிசம்பர் 22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்ளவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘அம்மா 2010-ல நடந்த கிறிஸ்துமஸ் விழாவுல கலந்துக்கிட்டப்ப எல்லாரும் ஒண்ணா இருந்தாங்க. இப்ப அந்த டீம்ல இருந்து பலர் பிரிஞ்சு போய் தனித்தனியா விழா கொண்டாடுறாங்க. முதல்வர் கலந்துக்கிறதா சொன்ன விழா, ஸ்டீபன் என்பவர் தலைமையில நடக்குது. ஸ்டீபன் கடந்த 2017வாக்குல நடந்த ஆர்ப்பாட்டத்துல முதல்வரைக் கண்டமேனிக்குத் திட்டிப் பேசின வீடியோ இப்பவும் சமூக வலைதளங்கள்ல சுத்திக்கிட்டிருக்கு. முதல்ல கன்னியாகுமரி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மூலம் முதல்வரை கிறிஸ்துமஸ் விழாவுக்கு அழைக்கணும்னு ஸ்டீபன் மூவ் பண்ணியிருக்கார். ஸ்டீபனைப் பத்தித் தெரிஞ்சதால யாரும் அவருகூடப் போகலை. அதனால, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இன்பதுரை மூலமா முதல்வரைச் சந்திச்சு, தேதி வாங்கியிருக்கார். கன்னியாகுமரி மாவட்டத்துல எத்தனையோ கிறிஸ்துமஸ் விழாக்கள் நடக்குது. அதுல எதுலயாச்சும் முதல்வர் கலந்துக்கட்டும். ஆனா, அருமனை ஸ்டீபன் நடத்தும் விழாவுல கலந்துக்கக் கூடாது’’ என்று குமுறுகிறார்கள் குமரி மாவட்ட அ.தி.மு.க-வினர்.

எடப்பாடி ஆசி... நாகையில் மீண்ட ஜெயபால்?

மீன்வளத்துறை அமைச்சராக நாகை ஜெயபால் இருந்தபோது, ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான ஓ.எஸ்.மணியன் ஓரங்கட்டப்பட்டார். பின்னாளில், ஜெயபால் ஓரங்கட்டப்பட... ஓ.எஸ்.மணியன் மீண்டும் பவருக்கு வந்தார். இந்தநிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி நடைபெற்ற ஜெயபால் மகன் திருமணத்துக்கு ஓ.எஸ்.மணியன் தலைமையில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் கலந்துகொள்வதாக திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ‘நிவர்’ புயல் காரணமாக இருவருமே கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், அமைச்சர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டாலும், உள்ளூரில் இருந்த ஓ.எஸ்.மணியன் தலையே காட்டவில்லை. திருமணம் முடிந்த பிறகு சென்னைக்கு மணமக்களை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் ஆசி வாங்கி வந்த ஜெயபால், சமீபத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட நாகை மாவட்டத்துக்கு வந்த முதல்வரை, அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று சந்தித்து மரியாதை செய்தார். இன்னொரு பக்கம் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் இருவரும் ஜெயபால் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதனால், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் நாகைத் தொகுதியில் அண்ணன் போட்டியிடுவார்’ என்று ஜெயபாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.