பிரீமியம் ஸ்டோரி

குமரன் குசும்பு!

தி.மு.க பேச்சாளராக இருந்த குடியாத்தம் குமரனுக்கு வாய் அதிகம் என்பார்கள். ஓராண்டுக்கு முன்பு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனைப் பற்றி இவர் ஆபாசமாகப் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வைரலாக... தி.மு.க தலைமை இவரைக் கட்சியிலிருந்து நீக்கியது. அப்போதும் அசராத குமரன் பிற கட்சித் தலைவர்களையும் வறுத்தெடுத்து, அதை யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இப்படித்தான் சில நாள்களுக்கு முன்பு அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோரைப் பற்றி எக்குத்தப்பாக பேசி யூடியூப்பில் வெளியிட, காவல்துறை குமரனைச் சிறையில் அடைத்தது. ஜாமீனில் வந்தவர் சூட்டோடு சூடாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தியைத் திட்டிப் பதிவுகளை வெளியிட... இப்போது பஞ்சாயத்து காவல் நிலையம் சென்றுள்ளது. குமரனுக்கு வேண்டப்பட்ட வக்கீல்கள் சிலர், “ஏம்ப்பா வாயைவெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீயா?” என்று கேட்டுள்ளனர். அதற்கு, “நான் பேசுனா ஷோ ஹிட் அடிச்சுப் பணம் கொட்டுது... கட்சியிலிருந்தும் நீக்கிட்டாங்க. பொழப்புக்கு நான் என்ன கழுதையா மேய்க்க முடியும்!” என்று வம்படியாகக் கேட்டாராம். இதுதான் குமரன் குசும்புபோல!

கறி விருந்து களேபரம்!

திருத்தணி தொகுதியின் அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ நரசிம்மனுக்கு சீட் மறுக்கப்பட்ட விவகாரம் இன்னும் தீயாகப் பற்றி எரிகிறது. ஏற்கெனவே திருத்தணி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் அரியைத் தோற்கடிக்க, நரசிம்மன் உள்ளடி வேலைகளைப் பார்த்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில், நரசிம்மன் கறிவிருந்து கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் படத்தை வாட்ஸ்அப் குரூப்களில் பரப்பிவரும் அரியின் ஆதரவாளர்கள், “சீட் கிடைக்காத வயித்தெரிச்சல்ல எதிர்க்கட்சிக்காரங்களுக்குக் கறிவிருந்து கொடுத்து அண்ணனைத் தோற்கடிக்கத் திட்டம் போட்டார்” என்று குற்றம்சாட்ட... நரசிம்மன் ஆதரவாளர்களோ, “அம்பேத்கர் பிறந்தநாளுக்காக அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கொடுத்த விருந்து அது... அரியின் ஆதரவாளர்களும் வந்து வயிறுமுட்ட சாப்டுட்டு, இப்படி அவதூறு பரப்புறது சரியா?” என்று மல்லுக்கட்டிவருகின்றனர்!

கரைவேட்டி டாட் காம்

வியாபாரியின் மர வேட்டை!

கொடநாடு பங்களா வேலைக்காக வந்த மர வியாபாரி ஒருவர் சசிகலாவின் குட்புக்கில் இடம்பெற்று, கொங்கு அமைச்சரின் தயவால் சமீபத்தில் மலை மாவட்டத்தில் தேர்தலிலும் போட்டியிட்டார். என்னதான் வெள்ளையும் சொள்ளையுமாகக் கட்சிக் கரைவேட்டி சகிதம் உலாவந்தாலும், அவருக்குத் தன் தொழில் பாசத்தை மறக்க முடியவில்லையாம். தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு காட்டுக்குள் புகுந்தவர், லாரி லாரியாக மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பிவருகிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரவு பகலாக இவர் மொட்டையடித்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள் இவர் போட்டியிட்ட தொகுதியின் வாக்காளர்கள். இது குறித்து இவரின் நண்பர்கள் இவரிடம் கேட்டபோது, “கோடி கோடியாகக் கொட்டி சீட் வாங்கியிருக்கேன்... ஒருவேளை தோத்துட்டா பணத்தைத் திருப்பித் தரவா போறாங்க!” என்று ஒரே போடாகப் போட்டாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு