Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட்காம்

கட்டிங் வரலை பாஸ்..!

விருதுக்குரிய நகராட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அலைபாயும் ஹீரோ பெயர்கொண்டவர், கவுன்சிலர்களை மதிக்காமலேயே பல்வேறு காரியங் களுக்கும் தனிப்பட்ட முறையில் அனுமதியளித்து வருகிறாராம். கவுன்சிலர்கள் கூட்டத்தில் விவாதமெழுப்பி நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்களுக்கான பணிகளை, தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முன் அனுமதியளித்து முடித்துவிடுகிறாராம். பணிகள் பாதி முடிந்த நிலையிலேயே, அது தொடர்பான‌ தீர்மானம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் வாசிக்கப்படுவதால், உடன்பிறப்புகள் பலருக்கும் அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த கூட்டத்தில், அவரின் இந்தச் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து மூத்த உறுப்பினர்கள் இரண்டு பேர் வெளிநடப்பு செய்த சம்பவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்தால், `எல்லாம் கட்டிங் வராத கடுப்புதான்’ எனக் கிசுகிசுக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

கரைவேட்டி டாட்காம்

கமிஷனில் கறார் காட்டும் மன்னர் வகையறா!

ஆளுங்கட்சியில், மத அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளாகிவரும் அந்த மன்னர் பிரமுகரின் நிழலாக இருந்துவருபவர் லோக்கல் மாவட்டச் செயலாளர். அந்த மா.செ-வின் மகனும் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். அவர்தான் தொகுதியில் ‘யாருக்கு டெண்டர் கொடுப்பது, எவ்வளவு பர்சன்டேஜ் வாங்குவது’ உள்ளிட்ட விஷயங்களில் முடிவுகளை எடுக்கிறாராம். அவர் `டிக்’ அடிக்கும் நபருக்குத்தான் மன்னர் பிரமுகரும் ஓ.கே சொல்கிறாராம். கட்சியைச் சேர்ந்த கான்ட்ராக்டர்கள் சிலரே, ‘இந்த டெண்டர் எடுத்து எனக்கு ஒண்ணும் பெருசா கிடைக்காதுங்க’ எனத் தலையைச் சொறிந்தால், ‘நீங்க கொடுக்குற கமிஷனைத்தான் தலைமை வரைக்கும் பங்கு பிரிச்சுக் கொடுக்க வேண்டியிருக் குங்க’ என பதில் சொல்லி வசூல்வேட்டையில் கடுமை காட்டுகிறாராம். எனவே, புகார்கள் அறிவாலயத்துக்குப் பறந்திருக்கின்றன.

அடாவடி சுயேச்சை எம்.எல்.ஏ!

யூனியன் பிரதேசத்தில் ஆளுங்கட்சி ஆதரவு சுயேச்சை ஒருவர் செய்யும் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவாம். சமீபத்தில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற ஒருவரை அணுகிய சிலர், ‘கோயில் நிதிக்காக 5 லட்சம் ரூபாய் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள். அவர் கொடுக்க மறுத்ததால், பஞ்சாயத்து சுயேச்சையிடம் சென்றிருக்கிறது. உடனே பிரெஞ்சுக் குடியுரிமை நபர் தன்னை வந்து சந்திக்க வேண்டுமென்று தனது விழுதுகள் மூலம் தூது அனுப்பி யிருக்கிறார் சுயேச்சை. ‘நான் ஏன் அவரைச் சந்திக்க வேண்டும்?’ என்று பிரெஞ்சுக் குடியுரிமை கேள்வி கேட்க... கொதித்துப்போன சுயேச்சை, ‘அது வீடே இல்லை விடுதி’ என்று கூறி பிரெஞ்சு நபரின் வீட்டை சீல் வைத்துவிட்டாராம். இன்னொரு சம்பவம்... பள்ளி வகுப்பை கட் அடித்துவிட்டு இளைஞருடன் சுற்றிய மாணவியை ஆசிரியர்கள் கண்டித்திருக்கிறார்கள். உடனே அந்தப் பள்ளிக்குச் சென்ற சுயேச்சை, “மாணவியை எப்படிக் கண்டிக்க லாம்?” என்று ஆசிரியர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார். சுயேச்சையின் இந்த அட்ராசிட்டிகளால் நொந்துபோன மக்கள் ‘அவசரப்பட்டுவிட்டோமோ?’ என்று புலம்பி வருகிறார்களாம்.

கரைவேட்டி டாட்காம்

ஒரே ஒரு தொண்டர் வர்றார் வழிவிடுங்கோ..!

எந்தக் கட்சியாக இருந்தாலும், மாவட்ட அளவில் ஒரு தலைவர் வீட்டைவிட்டு வெளியில் வந்தாலே, உடன் தனது பவரை காண்பிக்கப் படை பலத்துடன் வருவது வழக்கம். ஆனால், கதர்க் கட்சியின் நிலைமையோ பரிதாபம். சமீபத்தில் அதன் மாநிலத் தலைவர் கோவைக்குச் சென்றிருக்கிறார். அவர் வருகையை முன்னிட்டு, கோவை முழுவதும் கட்சியிலுள்ள அனைத்து கோஷ்டியினரும் போட்டி போட்டு போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். ஆனால், கோவை விமான நிலையத்தில் தலைவர் வந்திறங்கியபோது, அவரை வரவேற்க ஒரு தொண்டர்கூட இல்லையாம். தூரத்திலிருந்து ஓடிவந்த ஒரு தொண்டர் மட்டும் தலைவருக்கு சால்வை போட்டு, ‘வாழ்க’ கோஷம் எழுப்பியிருக்கிறார். அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், இடத்தைக் காலிசெய்திருக்கிறார் தலைவர். ‘இது கோஷ்டிப்பூசல் கட்சியாகிப் பல வருஷமாச்சு. தேசிய தலைவர் வந்தாலும் இங்கே இதே நிலைமைதான்’ என்கின்றனர் தொண்டர்கள்.

கோஷ்டி அரசியலால் குமுறும் எம்.பி!

மாங்கனி மாவட்ட ஆளுங்கட்சி எம்.பி “கட்சியில் யாரும் என்னை மதிப்பதில்லை” என்று அண்மையில்தான் குமுறியிருந்தார். இந்த நிலையில், மக்கள் குறைதீர் முகாம் நடத்துவதற்கு எம்.பி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காகச் செய்தித்தாள் உள்ளிட்டவற்றில் மாவட்டச் செயலாளர், மேயர் படங்களைவைத்து விளம்பரமும் கொடுத்திருந்தார். ஆனாலும் மாவட்டச் செயலாளர், மேயர், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ‘இப்படியே போனால், கதர்க் கட்சியின் கோஷ்டிகளை ஓவர்டேக் செய்துவிடுவோம்போல...’ என உடன்பிறப்புகளே கவலைப் படுகின்றனர்!