அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நீங்க மட்டும் யோக்கியமா?

டீக்கடை
பிரீமியம் ஸ்டோரி
News
டீக்கடை

நமக்கு நாமே பெட்ரோல் குண்டு வீசி ஃபேமஸ் ஆகுறதை விட்டுட்டே கதரு. புஹாஹா...

டீக்கடையில் உட்கார்ந்து ‘காரசார’ அரசியல் பேசும் `டீக்கடை யுத்தம்’ பகுதியில், கடந்த முறை `கழக உடன்பிறப்புகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும்’ இடையே நடந்த அனல் பறக்கும் வேடிக்கை விவாதத்தை, கற்பனை டீயாகக் குடித்துச் சிரித்தோம். இந்த முறை, `கதருக்கும் காவிக்கும்’ இடையே நடக்கும் விவாதத்தை அதே சூட்டோடு பார்த்துப் பருகுவோமா?

காவி: யோவ் கதரு, என்னய்யா இங்க உக்காந்துருக்க... ‘பாரத் ஜோடோ’ யாத்திரைக்குக் கிளம்பலை?!

டீக்கடைத் தம்பி: அதெல்லாம் பொட்டி கட்டிட்டுக் கிளம்பிப் போனாருதான். ஆனா, பாதிவழியில நடந்த கோஷ்டிச் சண்டையில பெருசு கன்ஃபியூஸாகி, போன வழியிலேயே திரும்பி வந்துருச்சு... புஹாஹாஹா...

காவி: அவங்கொண்ணன் மாதிரியே சிரிக்கிறான் பாரு! யோவ் கதரு... காலம்போன காலத்துல இந்த கால்நடைப் பயணம்லாம் உனக்குத் தேவையா... பேசாம நான் சொன்ன நேரத்துக்கு எங்க கட்சிக்கு ஒரு மிஸ்டு கால் விட்டிருந்தேன்னா, இந்நேரம் கார்ல கொடியோட பறந்திருக்கலாம். நீ புத்திசாலி... புரிஞ்சிப்பேன்னு நினைக்குறேன்.

டீக்கடை
டீக்கடை

கதர்: அதான்யா சொல்றேன்... புத்திசாலிக்கு உங்க கட்சியில என்ன வேலை... காந்தியைப் பார்த்து கதருக்கு மாறுன பாரம்பர்யக் குடும்பம்யா எங்களுது. என்னைப்போய் அவரைக் கொன்ன ஆளுங்களோட சேரச் சொல்றியா நீ?

காவி: யோவ், சும்மா ஆதாரம் இல்லாம வாய்க்கு வந்தபடி பேசாத. அவர் செத்ததுக்கும், எங்க அமைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கூடிய சீக்கிரமே எங்க இயக்க முன்னோடிகளோட மறைக்கப்பட்ட வரலாறைப் படமா ரிலீஸ் பண்றோம். அப்போ தெரியும் உலகத்துக்கு அவர் யாருனு...

டீக்கடைத் தம்பி: படத்தோட பேரு என்னங்க ஜி, `புல்புல் செல்வனா’ இல்ல `புல்புல்லில் செல்பவனா’... புஹாஹாஹா...

காவி: நீ சும்மா இருக்க மாட்டேல்ல... இரு, தடைசெய்யப்பட்ட இயக்கத்தோட தொடர்புல இருக்கேன்னு சொல்லி, உன் கடைக்கும் என்.ஐ.ஏ ரெய்டு விடச் சொல்றேன்.

டீக்கடைத் தம்பி: அதான் ஏற்கெனவே சிவகங்கையில எங்க தம்பி மேல கைவெச்சுட்டீங்களே. இருக்கு... அதுக்கும் ஒருநாள் எங்கண்ணன் பிரதமர் ஆகி...

காவி: அமெரிக்க அதிபரை விட்டுட்ட தம்பி.

டீக்கடைத் தம்பி: என்ன கிண்டலா?!

கதர்: அமெரிக்க ஜனாதிபதின்னதும்தான் ஞாபகம் வருது. என்னப்பா, டாலருக்குப் போட்டியா ரூபா மதிப்புல செஞ்சுரி அடுச்சுடுவீங்கபோலயே...

காவி : அது எங்க ஜி-யோட ராஜ தந்திரம். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நடக்குற கேப்ல, டாலர் மதிப்பை ஏத்திவிட்டு, சீனாவை மண்ணைக் கவ்வவெக்கத்தான் இதெல்லாம்... உலக அரசியல் உங்களுக்கெல்லாம் புரியாது.

டீக்கடைத் தம்பி: பேசிக்கிட்டே `சுட்ட வடை’க்கு காசு குடுக்காமப் போயிடாதீங்க ஜி.

கதர்: பார்டர்ல ஒழுங்கா முள்ளுவேலி கட்ட முடியலை... சீனாக்காரன் நம்ம எல்லைக்குள்ள வந்து ஒரு கிராமத்தையே கட்டிட்டுப் போயிருக்கான்... இந்த லட்சணத்துல சீனாவை மண்ணைக் கவ்வவெக்கப் போறீங்களாக்கும்.

டீக்கடைத் தம்பி: ஜி-க்கு சீனா மேலதான் லைட்டா பயம். இதுவே பாகிஸ்தானா இருந்துருக்கணும்... ஸ்ட்ரெயிட்டா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்தான்!

காவி: யோவ் நிறுத்துங்கய்யா... அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்குறவிதமாத்தான் ஷாங்காய் மாநாட்டுல சீன அதிபருக்குக் கையே குடுக்காம பாரதத்தோட கெத்தைக் காட்டிட்டு வந்தாரு எங்க ஜி. டிக் டாக், பப்ஜினு எத்தனை சீனா ஆப்பைத் தடை பண்ணியிருக்காரு தெரியுமா?

கதர்: ஆப்பைத் தடை பண்றது இருக்கட்டும். இந்திய தேசியக்கொடியையே `மேட் இன் சீனா’வுல வாங்கிட்டு வந்தீங்களாமே!

காவி: இது எல்லாத்துக்கும் நேருதான் காரணம்... காங்கிரஸ்தான் காரணம்.

டீக்கடைத் தம்பி: எதே...

கதர்: முட்டுச்சந்துல மாட்டுற மாதிரி தெரிஞ்சுட்டா போதும், நேருவை நோண்ட ஆரம்பிச்சுடுவாங்க. ஏன்யா, நீங்க ஆட்சிக்கு வந்து ஒன்பது வருஷம் ஆகிடுச்சு. இன்னுமா நேருவைப் புடிச்சுத் தொங்கிட்டு இருங்கீங்க... அவர் உருவாக்குன பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனை தெரியுமா... 33. அவருக்கப்புறம் இந்திரா காந்தி 66. ராஜீவ் காந்தி 16. நீங்க என்ன பண்ணுனீங்க..?

டீக்கடைத் தம்பி: வந்த விலைக்கு வித்துட்டு இருக்காரு.

கதர்: ஒலகத்துலயே சொந்த ஏர்வேஸ் இல்லாத நாடுங்கிற அவப்பெயரை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்திட்டீங்களேய்யா.

காவி: வித்ததைப் பத்தியே பேசுறியே. எங்க நிதி மேடம், காய்கறி மார்கெட்ல எவ்ளோ சிம்பிளா மக்களோட மக்களா காய்கறி வாங்க வந்தாங்க. அதைப் பத்திப் பேசுய்யா!

கதர்: காய்கறி வாங்கினதெல்லாம் இருக்கட்டும். அதை சமைக்கிற காஸ் விலை என்னன்னு ஞாபகம் இருக்கா... அரிசி, பால், எண்ணெய்னு எல்லா அத்தியாவசியப் பொருள்களோட விலைவாசியும் உச்சத்துல இருக்கு. தொட்டதுக்கெல்லாம் ஜி.எஸ்.டி போட்டு மக்களைக் கடன்காரனா ஆக்கிட்டீங்க. ரெண்டு வருஷத்துல மட்டும் மிடில் கிளாஸ்ல இருந்த 5.6 கோடிப் பேரை ஏழையா ஆக்கிட்டீங்கன்னு உலக வங்கியே காறித் துப்பியிருக்கு.

டீக்கடைத் தம்பி: பணக்காரனா ஆகணும்னா உங்க பேரு ‘ஏ’-ல ஆரம்பிச்சு ‘ஐ’-ல முடியணும்னு நான் சொல்லலை... வெளில பேசிக்கிறாங்க.

கதர்: அப்படிச் சொல்லு.

டீக்கடைத் தம்பி: ம்க்கும்.. எல்லாம் நீங்க ஆரம்பிச்சுவெச்சதுதான் கதரு. இப்ப வினை எங்க தலையில விழுந்திருக்கு.

காவி: நிறுத்துங்கய்யா, உலக வங்கி ஆயிரம் சொல்லும். எங்க ஜி சொன்ன வாக்குறுதி ஒவ்வொண்ணா நிறைவேத்தி, மக்கள் மத்தியில, தான் வாக்குத் தவறாதவர்னு நிரூபிச்சிருக்கார். குஜராத்துல பட்டேலுக்கு 3,000 கோடியில சிலை. ஹைதராபாத்துல 216 அடில ராமனுஜருக்கு தங்கச் சிலை. உ.பி-யில கிருஷ்ணருக்குக் கோயில். அயோத்தியில 1,800 கோடியில ராமர் கோயில். இதெல்லாம் யாருக்காக, இந்திய மக்களுக்காக.

டீக்கடைத் தம்பி: அப்போ அந்த சுவிஸ் பேங்க் கறுப்புப் பணம்... ஆளுக்கு 15 லட்சம்...

காவி: அதெல்லாம் ஜூம்லா பையா...

டீக்கடைத் தம்பி: அப்படின்னா!

கதர்: தெரிஞ்சே பொய் சொல்லிட்டாராம். அதைத்தான் இந்தியில சொல்றான்.

டீக்கடைத் தம்பி: தமிழ்நாட்ல ‘இந்தி’யா... எது பேசுனாலும் தமிழ்ல பேசுங்கய்யா. உங்க ஜி-யே இப்பல்லாம் திருக்குறள் புக்கோடதான் தூங்குறாரு.

கதர்: தம்பி இந்தியைப் பத்தி மட்டும் தப்பா பேசாதே. அது தெரியாமத்தான் நான் எங்க கட்சியில பெரிய ஆளா ஆக முடியலை.

டீக்கடைத் தம்பி: நீங்க ரெண்டு பேரும் தமிழ்நாட்டுல ஏன் செல்ஃப் எடுக்க மாட்டேங்கறீங்கன்னு இப்பவாச்சும் புரியுதா?

காவி: எங்களைச் சாதாரணமா நினைக்காத தம்பி. 2024-ல ஃபுல் பவர்ல சென்டர்ல வர்றோம். அதுக்கப்புறம்...

கதர்: என்ன பண்ணுவீங்க, மாநிலக் கட்சியோட கூட்டணி வெப்பீங்க. அப்புறம் அந்தக் கட்சியை உடைச்சு, சின்னத்தை முடக்கி, ஆட்சியைப் பிடிப்பீங்க. அதுக்கப்புறம் `நாட்டுல ஒரே கட்சி, ஒரே ஆட்சி’னு கூப்பாடு போடுவீங்க.

டீக்கடைத் தம்பி: நமக்கு நாமே பெட்ரோல் குண்டு வீசி ஃபேமஸ் ஆகுறதை விட்டுட்டே கதரு. புஹாஹா...

காவி: தம்பி டீக்கடை... என்ன நக்கல் பண்றியா... உன் டீக்கடைக்கு புல்டோசர் அனுப்பணுமா..?

டீக்கடை அமைதியாகிறது!