Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

சின்னத்தலைவியின் ஆடியோ ரிலீஸ் தொடர்ந்துகொண்டே இருப்பதால், அதைத் தடுக்க என்ன செய்வதெனத் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் துணிவானவர். இதற்கிடையில் பெங்களூரிலிருந்து பிரமாண்ட வரவேற்புடன் சின்னத்தலைவி வந்தபோது, மரியாதை நிமித்தமாகச் சில வார்த்தைகளைப் பேசிய இரண்டு மாஜிக்கள், ‘தங்களின் பேச்சும் பதிவாகியிருக்குமோ?’ என அரண்டுகிடக்கிறார்கள். ‘நீங்கதாம்மா கட்சியை வழிநடத்தணும்’ என இருவருமே சொல்லிவைத்தாற்போல் பேசியிருந்தார்களாம். #ஒரு வார்த்தை பேசி... ஒரு வருஷம் வேர்த்திருந்தேன்..!

கிசுகிசு

பணக்கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் டெல்டா மாவட்ட தாதா, குட்கா புகழ் மாஜிக்கு ஆல் இன் ஆலாக இருந்தவராம். மிரட்டல் உருட்டல் வேலைகளைச் செய்வதற்காகவே கடந்த ஐந்தாண்டுகளாக மாஜியின் நிழலாக இருந்த தாதா, மணல் உள்ளிட்ட பல விவகாரங்களில் விளையாடியிருக்கிறாராம். தேர்தல் நேர விநியோகத்துக்காக 2 கோடி ரூபாய் கொண்டு செல்லப்படுகிற விஷயம், மாஜியின் வார்த்தைகளை வைத்துத்தான் தாதாவுக்குத் தெரிந்ததாம். அந்தப் பணத்தைத்தான் அலேக்காகத் தூக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த வழக்கில் மாஜியின் பெயரையும் சேர்க்க முடியுமா எனத் தீவிர யோசனையில் இருக்கிறது போலீஸ். தேர்தல் விதிகளை மீறி, அதிக செலவு செய்ததாகக் கடந்த வாரம் மாஜிமீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட, தொடர் அவஸ்தைகளில் திண்டாடுகிறார் மாஜி. #தொட்டுத் தொடரும் ‘துட்டு’ பாரம்பர்யம்!

முதன்மையானவரின் டெல்லி பயணத்துக்குப் பிறகு, கதர் கட்சியின் இளம் தலைவர் மனதில் நிறைய குழப்பமாம். முதன்மையானவருக்குக் காவிக் கட்சியின் முக்கியப்புள்ளிகள் கொடுத்த மரியாதை, கூட்டணிக் கணக்குகளை மாற்றிவிடுமோ என்கிற அளவுக்கு யோசிக்கிறாராம். தங்கள் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டு அனுப்பியிருக்கும் கோரிக்கைக்கு முதன்மையானவர் தெரிவிக்கும் பதிலில், நிச்சயம் அவருடைய நிலைப்பாடு தெரிந்துவிடும் எனக் காத்திருக்கிறாராம் இளம் தலைவர். #மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா?

கிசுகிசு

அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிலிருந்து தானாக விலகிய சாமி பிரமுகர், ரொம்ப நாள்களாகவே மன உளைச்சலில் குமுறிக்கொண்டிருந்தாராம். தேர்தல் வெற்றியைச் சாத்தியமாக்க அவர் வகுத்துக்கொடுத்த பல வியூகங்களை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவே இல்லையாம். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் எனச் சொல்லி, தேர்தல் நேரத்திலேயே அவரைக் கட்டம்கட்டும் பணியைத் தீவிரமாக்கிவிட்டார்களாம். பொறுத்தது போதுமென நினைத்துத்தான் கட்சியைவிட்டு விலகும் முடிவை அறிவித்தாராம் சாமி பிரமுகர். ஆளுங்கட்சியில் ஐடி விங்கை கவனிக்கும் அமைச்சரிடமிருந்து விரைவில் அழைப்பு வருமெனக் காத்திருக்கிறார். #வெற்றிநடையிலிருந்து விடியலுக்கா பாஸ்..?

கடந்த ஆட்சியில் நெடுவாசல் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டவர், இப்போது சூழலைக் கவனிக்கிற துறைக்கு அமைச்சராக இருக்கிறார். ஆனால், இப்போது நெடுவாசல் அருகேயுள்ள வடதெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வெளியாகியிருக்கும் அறிவிப்பை எதிர்த்து அமைச்சர் வாய் திறக்காமல் இருப்பது விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதேபோல, இப்போதைய அறிவிப்பை எதிர்த்து போராடிய விவசாயிகள்மீது மீண்டும் வழக்கு பாய்ச்சப்பட்டிருப்பதையும் அமைச்சர் கண்டிக்கவில்லையாம். ‘அன்று அவரே போராடினார். இன்று போராடுபவர்கள்மீது வழக்கு போட வைக்கிறார்… இதென்ன நியாயம்?’ என்கிறார்கள் வழக்குக்கு ஆளாகியிருப்பவர்கள். #பச்சை அரசியல்!

கிசுகிசு

பத்திரமான அமைச்சர், விசாரணை என்கிற பெயரில் வேறு துறைசார்ந்த அதிகாரிகளை வறுத்தெடுத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட துறையை கவனிக்கும் மில்க் மினிஸ்டருக்கு இந்தத் தகவல் போக, அவர் கொந்தளித்துவிட்டாராம். “என் மாவட்டத்தில் நடந்த குளறுபடி. அதனால்தான் விசாரித்தேன்” என்று பத்திரமானவர் சொல்ல, “என் மாவட்டத்தில் உங்க துறைரீதியான பிரச்னையை நான் விசாரிக்கவா?” என மில்க் மினிஸ்டர் கேட்க, போனிலேயே மோதல் தூள் பறந்திருக்கிறது. #இந்தக் கோட்டத் தாண்டி நீயும் வரக் கூடாது.. நானும் வர மாட்டேன்!

‘சிங்கங்கள் தொடர்ந்து சாவது சென்டிமென்ட்டாக ஆபத்து’ என யாரோ கிளப்பிவிட்ட வதந்தி, முதன்மையானவரின் இல்லம்வரை போய்விட்டதாம். பதறிப்போன இல்லத்தரசி, ‘பரிகாரத்துக்கு என்ன செய்யலாம்’ என விசாரித்தாராம். ஒருகட்டத்தில் இந்தச் செய்தி முதன்மையானவரையும் எட்ட, ‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே பரிகாரம்’ எனச் சொல்லிச் சிரித்திருக்கிறார். #பகுத்தறிவுப் பரிகாரம்!