அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

“நான் யாரோட ஆளும் இல்லை. ஒன்லி உதயநிதிதான் என் தலைவர்” எனப் பேசி, பல சீனியர்களையும் தாண்டி சீட் வாங்கி, ஜெயித்தும் காட்டினார் கோட்டை தொகுதியின் டாக்டர் எம்.எல்.ஏ. மந்திரி பதவிக்கும் மெனக்கெட்டார். ஆனால், கிடைக்கவில்லை. இதனாலேயே இவருக்கும் இவர் மாவட்டத்திலுள்ள இரு மந்திரிகளுக்கும் ஆகவில்லையாம். “மந்திரிகள் ரெண்டு பேருமே ரெண்டு திசையில் திரியுறாங்க. யார் அணியிலும் சிக்காமல் உதயநிதி பேரைச் சொல்லி எம்.எல்.ஏ தனி அணியா திரியுறார்” என விளக்கம் சொல்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள். #மாடு ரெண்டு... பாதை ரெண்டு... வண்டி எங்கே போகும்?சற்றே நிம்மதிப் பெருமூச்சில் வெளியே வந்திருக்கும் அறிவானவருக்கு, அனுதினமும் கையெழுத்து, விசாரணை என நெருக்கடிகள் அதிகமாக்கப்பட்டிருக்கிறதாம். “கொரோனா காலத்தில் இப்படி அலைக்கழிக்கலாமா?” என அறிவானவர் கேட்க, “மேலிடத்து உத்தரவு!” என்கிறார்களாம். “மேலிடத்தின் அன்பால்தானே வெளியே வந்தேன்... அவர்கள் எப்படிக் கெடுபிடி காட்டச் சொல்வார்கள்?” என அறிவானவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல ஆளில்லை. #அந்தக் கேள்விக்கு மட்டுமா பதில் இல்லை?!

மூன்று சேலைகள் வாங்க முக்கிய அதிகாரி போட்ட ஆர்டர், கோட்டை வட்டாரத்தையே கிசுகிசு கூடாரமாக்கியிருக்கிறது. ரகசியமாகச் சேலை வாங்கச் சொன்ன தகவல், உதவியாளர் மூலம் கசிந்ததை அறிந்து கலங்குகிறாராம் அந்த அதிகாரி. “காசு அவரோட கைக்காசுதான்… ஆனா, சேலை யாருக்கு?” எனப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் பணியாளர்கள் பலரும். #சாயம் எப்போ வெளுக்கப்போகுதோ!?

கிசுகிசு

இந்த வருடம் நீட் உண்டா இல்லையா என்கிற குழப்பம் மாணவர்களைத் திண்டாட வைத்திருக்கிறது. பிரகாச நடிகரின் உதவியால் படிக்கும் மாணவர்கள் சிலர், இந்தக் குமுறலை அப்படியே அவர் காதுக்குக் கொண்டுபோனதன் பின்னணியில்தான் கொதிப்பான அறிக்கை வெளியானதாம். இது புரியாமல், கண் காது வைத்து அந்த அறிக்கைக்குப் பலரும் அரசியல் பின்னணி கற்பிக்க, “ஆமா, நான் அரசியல்தான் பண்றேன். கல்விக்கான அரசியலை யாரும் பண்ணலைன்னா நான்தான் பண்ணுவேன்” எனக் கொந்தளித்தாராம் பிரகாச நடிகர். #ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால், ஆயுதம் எதுவும் தேவையில்லை!

“ஜெயித்தால் அமைச்சர். உங்க பணத்தை பக்காவா செட்டில் பண்ணிடுவேன்” எனச் சொல்லித்தான் பலரிடமும் தேர்தல் நிதியை வசூலித்தாராம் அணில் அமைச்சர். சொன்ன மாதிரியே அமைச்சராகவும் ஆகிவிட்டார். ஆனால், நிதி கொடுத்தவர்களின் போனை எடுப்பதே இல்லையாம். “பணம் கொழிக்கும் துறையைக் கையிலவெச்சுக்கிட்டு ஏன் எங்களை அல்லாட விடுறீங்க?” என நேரில் பார்த்துக் கேட்டால், “நான் வகிக்கிற துறையே கடன்லதான்யா இருக்கு” எனச் சொல்லி அல்வா கொடுக்கிறாராம். #‘கட்’ பண்றதும் ‘ஷாக்’ குடுக்குறதும் அரசியல்ல சகஜம்தானே!

கிசுகிசு

“நடிகையின் புகாரைவைத்து மாஜி மந்திரியைக் கைதுசெய்திருக்கிறார்களே... நானும் நடிகைதானே… என் புகாரைவைத்து ஏன் இன்னும் ‘அண்ணன்’ தலைவரை அரெஸ்ட் செய்யவில்லை?” எனக் குமுறுகிறார் லட்சுமிகரமான நாயகி. இதை முதன்மையானவரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டுபோக, “நம்ம தலைவர் முதல்வரா இருந்தப்ப, இதே ஆள் கடுமையா விமர்சனம் பண்ணினார். அப்போ அவர் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களைக் காட்டி கைதுபண்ணலாம்னு சொன்னது உளவுத்துறை. ஆனா, தலைவர் வேணாம்னு சொல்லிட்டார்” எனப் பழைய நிகழ்வை நினைவுகூர்ந்த முதன்மையானவர், “விமர்சனத்துக்கு பதில், கைது இல்லை” என்றாராம். அதேநேரம் உரிய விசாரணையை நடத்தச் சொல்லியிருக்கிறாராம். #சினங்கொண்ட சிங்கத்த சிறையில அடைச்சீங்கன்னா... அது செல்லயே சிதைச்சிரும்... பரவால்லயா?

கிசுகிசு

‘வலிமை’ அப்டேட் கேட்டு அலப்பறை கொடுப்பவர்கள் பட்டியலில், ஆளுங்கட்சியின் டெல்டா மாவட்ட வாரிசு எம்.எல்.ஏ ஒருவரும் சேர்ந்தார். ‘வலிமை அப்டேட் எப்போ?’ என அவர் ட்வீட் தட்ட, ‘ஏழு பேர் விடுதலை எப்போ?’, ‘நீட் விலக்கு எப்போ?’ என ரவுண்டு கட்டிவிட்டார்கள் பலரும். இதற்கிடையில், ‘நான் அறிக்கை வெளியிட்ட பிறகும் ஏன் இப்படிப் பண்றாங்க?’ என்று ‘தல’யானவரும் தன் மேனேஜரிடம் வருத்தப்பட்டாராம். #ஒரு ட்வீட்டு… பல ரிவிட்டு!