Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

‘முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் கடிதம் எழுதாதபடி நீங்களே குறைகளைத் தீர்த்துவையுங்கள்’ எனத் தலையாய அதிகாரி, மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதிய விவகாரம், அருமையாக வொர்க்அவுட்டாகத் தொடங்கி யிருக்கிறதாம். குறைகள் குறையத் தொடங்கிய மாவட்டங் களின் ஆட்சியர்களுக்கு, தலையாய அதிகாரி போன் போட்டுப் பாராட்டவும் செய்கிறாராம். அதேநேரம் ‘தாலிக்குத் தங்கம்’ உள்ளிட்ட பல திட்டங்களுக்கு, அரசுத் தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்படாதது குறித்து தலையாய அதிகாரிக்குப் பல மாவட்ட ஆட்சியர்கள் தெரியப்படுத்துகிறார்களாம். #ஹலோ... கேக்கல... விட்டு விட்டுக் கேக்குது... ஹலோ!

“நான் பல கோடி கடனில் இருக்கிறேன்” என இலைக் கட்சியின் துணிவானவரிடம் சமீபத்தில் சொல்லியிருக்கிறார் ரெய்டு நடவடிக்கைக்கு ஆளான பெல் மாஜி. “சும்மா காமெடி பண்ணாதீங்க…” எனத் துணிவானவர் சொல்ல, யார் யாரிடம் எத்தனை கோடி எனப் பெயர் பட்டியலையே தூக்கிப்போட்டாராம். “இவர்களில் யார்கிட்ட வேணும்னாலும் போன் பண்ணிக் கேட்டுப்பாருங்க… கடந்த அஞ்சு வருஷமா வாங்கின கடனைச் சொல்வாங்க” என்று பெல் மாஜி சொல்ல, துணிவானவருக்கு மயக்கம் வராத குறையாம். #அதை இட்லினு சொன்னா... சட்னியே நம்பாதே!

நல்லது கெட்டது என எந்த நிகழ்வுக்குச் சென்றாலும், விவேகமான வாரிசையே சின்ன தலைவி அழைத்துக்கொண்டு போவது குடும்பத்தில் மறுபடியும் குமைச்சலை உருவாக்கி யிருக்கிறதாம். ஏற்கெனவே வலதுகரமாக நின்ற மருத்துவப் புள்ளிக்கும் இதில் கடுமையான மனவருத்தமாம். அதனால் சட்டத் தொடர்பான பணிகளுக்கு மட்டும் விவேகமானவரை நியமித்துவிட்டு, மற்ற வேலைகளை உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறாராம் சின்ன தலைவி. #அப்படி என்ன வேலைகள்னுதானே கேக்க வர்றீங்க... விடுங்க!

கிசுகிசு

கதர்க் கட்சியின் தமிழகத் தலைவர் பதவிக்கு, பிரகாசமான பெண்மணியின் பெயர் கிட்டத்தட்ட டிக் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அம்மணி பெயரை அறிவித்தால் எதிர்ப்புகள் பலமாகிவிடுமோ என்பதால் மட்டுமே யோசிக்கிறார்களாம். ‘யார் எதிர்த்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என டெல்லியின் பவர் புள்ளிக்கு அம்மணி உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். இதற்கிடையில் அம்மணிக்கு எதிரான டீம், டெல்லியிலேயே டேரா போட்டு காரியத்தைக் கெடுக்க கடுமையாக முயன்று கொண்டிருக்கிறதாம். #தீபம் எரிகின்றது... ஜோதி தெரிகின்றது!

மருத்துவம் தொடர்பான முன்னாள் மாஜி, கற்பிக்கும் துறையைக் கையில்வைத்திருக்கும் சீனியர் அமைச்சரின் மகனோடு ஒன்றாகப் படித்தவராம். அவர் ரூட்டில் ஆளுங்கட்சியின் கோபப் பார்வையை அடியோடு குறைத்துவிட்டாராம் மாஜி. அதனால் ரெய்டு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் பாயாது என தைரியமாகத் திரிகிறாராம். நடவடிக்கைகள் சைலன்ட்டானால் அதற்குக் கைம்மாறாகக் கட்சியில் சேரவும் தயார் என்கிறாராம். #நெய்சோற்று ருசிபார்க்க... சேராத இடம் சேர்ந்து... வஞ்சத்தில் ஜெயித்தாயடா!

பத்திரிகைத்துறையிலும், சூழல் குறித்த அக்கறையான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இயங்கும் பெண்மணி, விரைவில் அரசியலில் இறங்கப்போகிறாராம். ஆளுங்கட்சியில் அவருக்கு நெருக்கமான ஆட்கள் பலர் இருப்பதால், அங்கே சேர்வது நல்லது எனச் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ‘நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல… போராடுவதற்காக’ எனச் சொல்லி ஆளுங்கட்சியில் ஐக்கியமாகும் ஐடியாவைத் தவிர்த்துவிட்டாராம். அநேகமாக, கதர்க்கட்சியில் அம்மணி களமிறங்க வாய்ப்பு என்கிறார்கள். #ஒரு ‘கவிதை’ கையசைக்கிறது!

‘உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தே தீர வேண்டும்’ எனக் கட்சி நிர்வாகிகளுக்கு போனிலேயே உத்தரவு போடுகிறாராம் தோட்டத்துத் தலைவர். மாவட்டவாரியாகக் கட்சி நிர்வாகிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு போன் போடும் தோட்டத்துத் தலைவர், ‘இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நம்மளோட சக்தியை நிரூபித்தால்தான் ஆளுங்கட்சிக்கு நம்ம அருமை புரியும். அதன் பிறகுதான் நமக்கும் சில நன்மைகள் நடக்கும்…’ எனச் சொல்ல, ‘ஐயாவோட கணக்கே தனி’ என்கிறார்கள் நிர்வாகிகள். #ஒத்தக் கல்லுல எத்தன ‘மாங்கா’?!