பிரீமியம் ஸ்டோரி

இலைக்கட்சியில் துணையாக இருக்கும் இருவரில், சாமி பெயர்கொண்டவர் துணிவானவர் பக்கம் தடாலடியாகச் சாய்ந்துவிட்டார். இன்னொருவரான டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளி ஏற்கெனவே துணிவானவர் பக்கம்தான் இருந்தார். ஆனால், இப்போது யார் பக்கமும் சாயாதவராக நடுநிலை காக்கிறார். பணிவானவர் தரப்பில் வந்த அழைப் புக்கும் பார்ட்டி பதில் சொல்லவில்லையாம். என்ன குழப்பமோ என்கிறார்கள் அமைதிக்கான அர்த்தம் விளங்காதவர்கள். #என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

தேசியத் திரைப்பட விருதுகளை, தேசத்தின் முதன்மையானவர் வழங்காமல், துணையானவர் வழங்கியது பலராலும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. “வேறு எந்தக் காரணமும் கிடையாது. தேசத்தின் முதன்மையானவர் சற்று ஓய்வெடுக்கவேண்டிய நிலை. அவர் உடல்நிலையில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நிகழ்வுக்கு அவரால் வர முடியவில்லை” என முக்கியப் புள்ளிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். #பத்திரமா பார்த்துக்குங்க!

கிசுகிசு

கடந்த தேர்தலில் பரப்புரை செய்தபோது, ரௌடிகளின் பட்டியலை வாசித்துக்காட்டினார் முதன்மையானவர். ‘3,000 ரௌடிகளைப் பிடித்துவிட்டோம்’ எனக் கெத்துகாட்டும் காவல்துறையின் தலைமை அதிகாரி, முதன்மையானவர் சொன்ன பட்டியலிலுள்ள ரௌடிகளைப் பிடிக்க ஏன் இன்னமும் உத்தரவிடவில்லை என்பதுதான் பலருடைய கேள்வி. முதன்மையானவர் குறிப்பிட்டுச் சொன்ன ரௌடிகள் பலரும் இப்போது ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக மாறியிருப்பதுதான் காவல்துறையின் தயக்கத்துக்குக் காரணமாம். #இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க..?

பவன்காரர், அரசு நிர்வாக விவகாரங்களில் ஆய்வு என்கிற பெயரில் தலையிட விரும்புவதற்கு, அரசின் தலைமை அதிகாரியே கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதுதான் கோட்டை வட்டாரத்தையே அதிரடித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் பவன் புள்ளியின் தலையீட்டை எதிர்த்து கடும் கண்டனத்தை வெளியிட்டவர் முதன்மையானவர். அதனால், அவர் ரொம்பவே தயங்க, ‘பவன்காரருடன் மோதல் வேண்டாம்; அதுதான் ஆட்சியைச் சரியாக நடத்த ஒரே வழி’ எனச் சொல்லி ஆமாம் சாமியாக மாற்றினார்களாம். #இந்த ‘அன்பும்’ நிதானமும் எங்கயோ இடிக்குதே!?

இலைக்கட்சியின் துணிவானவருக்கு வலது கரமாக இருந்த சேலத்துப் பிரமுகர், ரெய்டு நடவடிக்கைகளில் பல விஷயங்களைக் கக்கிவிட்டாராம். இத்தனைக்கும் அதிகாரிகள் இவரிடம் பெரிய அளவில் கெடுபிடியான விசாரணையைச் செய்யவில்லையாம். “என்னய்யா... மனுஷன் இந்த அளவுக்குக் கொழகொழ குழந்தையா இருக்காரு…” என அதிகாரிகளே கலாய்க்கும் அளவுக்குச் சொத்து குறித்தும், அதன் பின்னணி குறித்தும் கக்கிக் குவித்தாராம். #ஒன்லி பாடி லாங்குவேஜ்தான்பா... உள்ள ஒண்ணும் கிடையாதுப்பா!

தீபத்துக்குப் பெயர்போன ஊரில், தன் இல்லத் திருமண விழாவை நடத்திய இனிஷியல் தலைவர், இன்னமும் பணத்தை செட்டில் செய்யவில்லையாம். அலங்காரம் செய்தவர்கள் தொடங்கி உணவு உபசரிப்பு வரை பலருக்கும் பாக்கி நிற்கிறதாம். இனிஷியல் தலைவரை அணுக முடியாமல், உள்ளூர்க் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பாக்கி நிலவரத்தைச் சொன்னதற்கு, ‘எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்க அவரைத்தான் பார்க்கணும்’ எனச் சொல்லி ஒதுங்கிக்கொண்டார்களாம். #இதெல்லாம் பெரிய மனுஷன் செய்யுற காரியமா?

கிசுகிசு

அணில் அமைச்சர் மீது தீராத ஆத்திரத்தில் இருக்கிறாராம் காவிக்கட்சியின் மாஜி காக்கி. தனக்கு எதிராகப் பத்திரிகையாளரிடம் அணில் அமைச்சர் ஆத்திரப்பட்டது மட்டும் காரணமில்லையாம். சமூக வலைதளங்களில் தனக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் தாக்குதலின் பின்னணியில், அணில் அமைச்சரின் சதி இருப்பதாகத் தெரியவந்திருக்கிறதாம். அதில்தான் கடும் ஆத்திரமாம். #அசோக்... இந்த நாள உன் ட்விட்டர் பேஜ்ல குறிச்சு வெச்சுக்கோ!

குரலைப் பதிவுசெய்யும் ஆப் வெளியீட்டுக்காக சூப்பர் நடிகரை அழைத்திருந்தார் அவர் மகள். “அப்பாவுக்குத் தமிழ் சரிவர எழுதத் தெரியாது” என மகள் பகிரங்கமாக அறிவிக்க, ரசிகர்கள் தொடங்கி பலரும் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள். “ `அண்ணாத்த’ ரிலீஸ் நேரத்தில் ஏன் இப்படியெல்லாம் பேசணும்?” எனக் குடும்பத்துக்குள்ளேயும் ஆதங்கக் குரலாம். ஆனாலும், மகள்மீது எந்த வருத்தமும் காட்டாமல், அமைதியாகவே இருந்தாராம் சூப்பர் நடிகர். #மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், வலி வேற டிபார்ட்மென்ட் என்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு