பிரீமியம் ஸ்டோரி

போக்கும் வரத்துமான துறையில், நாளுக்கு நாள் நஷ்டம் அதிகமாகிக்கொண்டே போகிறதாம். “பெண்களுக்கு இலவசம் என்பதை மறுபரிசீலனைச் செய்யக் கூடாதா?” என அதிகாரிகள் தரப்பு தயங்கியபடியே கேட்க, துறையின் அமைச்சரோ ‘இப்படியெல்லாம் யோசிக்கவே கூடாது’ எனச் சொல்லிவிட்டாராம். முதன்மையானவர் சமீபத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்தபோது, இலவசப் பயணத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டினார்களாம். அதனால், ‘எவ்வளவு இழப்பு வந்தாலும் இந்த ஆட்சி முழுக்க இந்தச் சலுகை தொடர வேண்டும்’ எனச் சொல்லிவிட்டாராம் முதன்மையானவர். #வண்டியில ரிவர்ஸ் கியரே போடக் கூடாது!

வாரிசை புதிய பொறுப்புக்குக் கொண்டுவந்த புயல் தலைவர், தினமும் கட்சி நிர்வாகிகளுக்கு போன் போடுகிறாராம். “கட்சியோட எதிர்காலத்துக்கு நல்லதுன்னு சொன்னதாலதான் மகனுக்குப் பொறுப்பு கொடுக்க நான் சம்மதிச்சேன். மாற்றுக்கருத்து இருந்தா, நீங்க தாராளமா என்கிட்ட சொல்லலாம். கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை யாரும் எடுக்கக் கூடாது” எனத் தன்மையாகப் பேசுகிறாராம். “நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நாங்க கண்ணை மூடிக்கிட்டு ஆதரிப்போம் தலைவரே” எனச் சில நிர்வாகிகள் சொல்ல, நெகிழ்ந்துபோனாராம் புயல் தலைவர். #கண்ணை மூடிக்கிட்டு ஆதரிச்சு ஆதரிச்சுதான்...

கிசுகிசு

“ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவாருங்கள்” எனக் கூட்டணியில் அங்கம்வகிக்கும் உறுமல் தலைவர் முதன்மையானவரிடம் சொன்னாராம். கோரிக்கை மனுவாகவும் பிறகு கொடுக்கப்பட்டதாம். ஆனாலும், அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படாததால்தான், “ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் மட்டுமே கொண்டுவந்திருக்கிறது” என வெளிப்படையாகவே முழங்கினாராம். “கூட்டணியில் இருந்துகொண்டே இப்படி கோஷம் போடலாமா?” என ஆளுங்கட்சியிலிருந்து யாரும் கேட்டால், அப்போதும் தன் கோரிக்கையை உரத்துச் சொல்லலாம் என நினைக்கிறாராம் உறுமல் தலைவர். #வெடிப்புறப் பேசு!

இலைக் கட்சியின் இரு தரப்பு மோதல், கூட்டணியில் இன்றளவும் அங்கம்வகிக்கும் நறுமணத் தலைவரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். இத்தனைக்கும் பணிவானவர், துணிவானர் என இரு தரப்பும் அவரிடம் மிகுந்த மரியாதை பாராட்டுகிறார்களாம். இதற்கிடையில், ‘யாருக்கு செல்வாக்கு?’ என டெல்லித் தரப்பு நறுமணத் தலைவரிடம் கேட்க, “இதைக் கேட்பதற்கு பதிலாக, பிரச்னை பெரிதாவதற்குள் சுமுகமாகப் பேசி, தீர்வை ஏற்படுத்துங்கள்…” என்றாராம் அக்கறையாக. #பிரச்னைகளை ஏற்படுத்துறதுதான் பாஸ் அவங்க தீர்வே!

கிசுகிசு

சூப்பர் நடிகருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன், மருத்துவமனை நிர்வாகத்துக்கு போன் பண்ணினாராம் முதன்மையானவர். சூப்பர் நடிகரின் உடல்நிலை குறித்து அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தவர், ஒருகட்டத்தில் நேரில் சந்தித்திருக்கிறார். “ஒன்றும் கவலைப்படாதீர்கள்... ஓய்வு எடுத்தால் போதும்…” என முதன்மையானவர் சொல்ல, சூப்பர் நடிகரோ “அடுத்த படத்துக்கான கதை கேட்டுக்கிட்டு இருக்கேன் சார்…” எனச் சொல்லிச் சிரித்தாராம். #கெட்ட பய சார் இந்த காளி!

‘துறைரீதியாகச் சாதிக்கும் அதிகாரிகள்’ எனத் தலையாய அதிகாரி பட்டியலிட்டுக் கொடுத்த பலரிடமும் போனில் பேசி வாழ்த்து சொன்னாராம் முதன்மையானவர். கூடவே, “உங்களின் பணிகளுக்கு எவ்விதக் குறுக்கீடு இருந்தாலும் என்னிடம் தாராளமாகச் சொல்லலாம்” என முதன்மையானவர் சொல்லியிருக்கிறார். யார் யாருக்கெல்லாம் முதன்மையானவர் போன் பண்ணினார் எனக் கோட்டை வட்டாரத்தில் பட்டிமன்றமே நடக்கிறதாம். #சாதித்தவர்கள் அதிகமா... சறுக்கியவர்கள் அதிகமா?

கிசுகிசு

பசும்பொன் பயணத்தை முடித்துவிட்டு தஞ்சாவூரில் தங்கிய சின்ன தலைவி, டெல்டா மாவட்ட இலைக் கட்சி நிர்வாகிகளோடு போனில் பேசினாராம். முன்னாள் மாஜியான ட்ரீட்மென்ட் புள்ளி மட்டும் கடைசிவரை போனில் சிக்கவில்லையாம். அதேநேரம் தனக்கு நிழலாக விளங்கும் ஒருவரை அனுப்பி, சின்ன தலைவியை நேரில் சந்திக்கச் சொன்னாராம். அரை மணி நேரம் அந்தத் தூதுவர் சந்தித்துப் பேச, சின்ன தலைவி முகத்தில் அவ்வளவு நிம்மதியாம். #தூதுவன் வருவான்... மாரி பெய்யும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு