Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

முன்னாள் லேடி மினிஸ்டர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு, பக்கத்து மாவட்டத்திலிருக்கும் முன்னாள் பெல் மினிஸ்டர்தான் காரணமாம். ‘பண மோசடி என அந்த முன்னாள் லேடி மினிஸ்டரின் உதவியாளரே புகார் கொடுத்திருக்கிறாரே?’ எனக் கேட்டால், ‘புகார் கொடுக்கும்படி அவரைத் தூண்டியதே அந்த முன்னாள் பெல் மினிஸ்டர்தான்’ என்கிறார்கள் ஆதங்கமாக. #இது எப்படி இருக்கு?!

கிசுகிசு

இனிஷியல் தலைவரின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம். கடந்த மாதம் அடித்த பத்திரிகையில் இனிஷியல் தலைவரின் பெயருக்குப் பின்னால் எம்.எல்.ஏ என பிரின்ட் செய்யப்பட்டுவிட்டதாம். அந்த காஸ்ட்லியான பத்திரிகைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு, அடுத்த பிரின்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். “எப்படியும் ஜெயிச்சிடுவோம்னு நம்பி எம்.எல்.ஏ-ன்னு போடச் சொல்லிட்டேன். சரி சரி... விஷயத்தை வெளியே விடாதீங்க’ என அச்சகத்தாரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். #பத்திரிகை சர்ச்சை பத்திரிகை வரைக்கும் வந்துடுச்சே பாஸ்…

அண்ணன் - தம்பி சந்திப்பு நடக்கும் என ஆவலோடு காத்திருந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது. ஆனால், ‘இருவரும் சந்தித்தால் நம்ம கதி என்னவாகுமோ?’ என பயந்திருந்த கீர்த்தியான அமைச்சர் மட்டும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாராம். தேர்தல் நேரத்தில் அண்ணனுக்கு எதிராக அமைச்சர் நடத்திய அட்டாக் அப்படிப்பட்டதாம்! #மனசு ரெண்டுபட்டால்… மந்திரிக்குக் கொண்டாட்டம்!

கிசுகிசு

ஏழு பேர் விடுதலையை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட ‘கதர்’ தலைவர், அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதில், முக்கிய நிர்வாகிகளோடு முதல்வரைச் சந்திக்கிற திட்டமும் இருக்கிறதாம். ஆனால், ஆளும்தரப்பு தங்களை அமைதிப்படுத்தாமல், ரசிக்கிற மூடில் இருப்பதுதான் ஏழு பேர் விடுதலைக்காகப் போராடுபவர்களைத் திகைக்கவைத்திருக்கிறது. #பூசுன மாதிரியும் இருக்கணும்…

அவைப் பொறுப்பிலிருக்கும் சூது தெரிந்த தலைவரைத் தங்கள் பக்கம் ஈர்க்க, பணிவுப் புள்ளியும் துணிவுப் புள்ளியும் மாறி மாறி ஸ்வீட் பார்சல்களை அனுப்புகின்றனர். இதற்கிடையில், தன் பக்கமாகக் காற்றடிக்கும் இந்த நேரத்தில் ‘அம்மையார் தரப்பிடமிருந்தும் ஏதும் வசூலிக்க முடியுமா?’ என யோசிக்கிறாராம் சூது தெரிந்த தலைவர். #கட்சி தோற்றாலும் கல்லா நிறையுது…

நடுநிலைத் தலைவரின் கட்சியில் நடக்கும் குளறுபடிகளைக் கூர்மையாக கவனிக்கிறாராம் சூப்பர் நடிகர். ‘ஜெயிச்சா கொண்டாடுவாங்க. தோற்றால் தூற்றுவாங்க’ என நடுநிலைத் தலைவரிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தாராம் சூப்பர் நடிகர். சொன்னபடியே நடப்பதை நண்பர்களிடம் சுட்டிக்காட்டி, “இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் ஒதுங்கினேன்’’ என்கிறாராம் தெளிவாக. #வருவேன் வருவேன்னு வாயால வடை சுட்டது மட்டும் எதுக்காம்?!

கிசுகிசு

தலைமைப் பொறுப்புக்கான அறிவிப்பு வருவதற்கு முன்னரே, மீசை அதிகாரியை காக்கா பிடிக்கக் கடுமையான போட்டியாம். ‘கைநீட்டும்’ அதிகாரிகளின் பட்டியலை ரெடி செய்துவைத்திருக்கும் மீசை அதிகாரி, யார் அழைப்பையும் ஏற்பது கிடையாதாம். நேரில் சந்திக்க நினைப்பவர்களிடமும் மீசைக்காரர் நெருப்பாக தகிப்பதால், ‘இவரை எப்படித்தான் அணுகுவது?’ எனத் தெரியாமல் திண்டாடுகிறார்கள் ஆபீசர்ஸ் பலரும். #சாரோட கிளம்பி சைக்கிளிங் போங்க…

மாநகர மந்திரியின் சிறப்பே, ‘எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் போன் எடுப்பவர்’ என்பதுதான். ஆனால், சமீபகாலமாகப் பெரும்பாலும் மந்திரியின் பி.ஏ-தான் போனை எடுக்கிறார். “இதுநாள் வரை இருந்த நல்ல பேரைக் கெடுத்துக்குறீங்களே?” என ஒரு பத்திரிகையாளர் வருத்தப்பட, “மீட்டிங், ஆய்வு எனக் களப்பணிகள் தீவிரமானதால்தான் போன் எடுக்க முடியலை. நல்ல பேர் வாங்குறதைவிட நாலு பேர் உயிரைக் காப்பாத்துறதுதான் முக்கியம்” எனப் ‘பொளேர்’ பதில் சொன்னாராம் மாநகர மந்திரி. # ‘மாசு’ இல்லாத மனசுதான் சார் கோயில்!