அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

இலைக் கட்சியின் அவையடக்கமான பதவிக்கு யாரை நியமிப்பது என பலத்த போட்டி நடக்கிறது. ``கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியோ வாரியப் பதவியோ வாங்காமல் அமைதிகாத்தவன் நான்தான். அப்படியிருக்க, எம்.ஜி.ஆர் காலத்து அனுபவம்கொண்ட எனக்கு அந்தப் பொறுப்பை வழங்கினால் என்ன?” எனக் கேட்கிறாராம் செம்மையான சீனியர் புள்ளி. ஆனால், அந்தப் பதவிக்கு அடிபடுகிற ஆட்களின் பட்டியலில்கூட அவர் பெயர் இல்லையாம். அதனால், எந்த நேரத்திலும் செம்மையான சீனியர் புள்ளி, கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகச் சீறக்கூடும் என்கிறார்கள். #அவருக்கும் பசிக்கும்ல!

இட ஒதுக்கீடு விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாக அமைய, தோட்டத்துத் தலைவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என உளவுத்துறை தீவிரமாகக் கண்காணிக்கிறதாம். ‘சட்டரீதியான முன்னெடுப்பை மேற்கொள்வேன்’ எனத் தோட்டத்துத் தலைவர் அறிவித்தாலும், சாதிரீதியான போராட்டங்கள் முளைத்துவிடக் கூடாது என முதன்மையானவர் உத்தரவிட்டிருக்கிறாராம். அதனால், தோட்டத்துத் தலைவரின் அத்தனைவிதமான நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனவாம். #உஷாரய்யா உஷாரு!

“இஷ்டத்துக்குப் பேசாதீர்கள்… நான் சொன்னால் மட்டும் பேசுங்கள்” என ‘மைக் விரும்பி’ மாஜிக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். “இவ்வளவு காலமும் நீங்க சொல்லித்தானே பேசினேன்…” என ‘மைக் விரும்பி’ மாஜி விளக்கம் சொல்ல, “எதையும் சமர்த்தா சமாளிப்பீங்கன்னுதான் உங்களைப் பேசச் சொன்னேன். நீங்களும் சில நேரத்துல வார்த்தையை விட்டுடுறீங்க… அதுதான் இப்போ பெரிய சிக்கலாகி நிக்குது” என நொந்துகொண்டாராம் துணிவானவர். #வாயாலதான் வாய்க்கா தகராறு!

ரௌடிகளை வேட்டையாடுகிற உத்தரவை தீவிரமாகச் செயல்படுத்திய மத்திய மண்டலத்தின் உயரிய அதிகாரி, திடீரென சைலன்ட்டாகிவிட்டாராம். தீபாவளி நேரத்தில் சில கூலிப்படையினர் கைதாக, ‘ரௌடிகள் மீதான வேட்டை ஏன் கைவிடப்பட்டது’ என சென்னையிலிருந்து கேள்வியாம். ‘அரசியல் தலையீடுகளே அமைதியானதற்குக் காரணம்’ எனத் தெரியவர, முதன்மையானவர் கவனம் வரை விஷயம் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதாம். #அமைதிக்குப் பின் அரசியல்!

கிசுகிசு

கதர்க் கட்சியின் தமிழகத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கடுமையாக மெனக்கெட்டார் பிரகாசப் பெண்மணி. டெல்லியின் உச்சப் புள்ளியின் அனுகிரகமும் கிடைத்து, கிட்டத்தட்ட அறிவிப்பே வெளியாகிற நேரம்... தமிழகத்திலிருந்து டெல்லியின் உச்சப் புள்ளிக்கு போன் போனதாம். `அவசரம் வேண்டாம், நிதானமாக யோசித்துச் செய்யுங்கள்…’ என அன்பும் அக்கறையுமாக அறிவுரை சொல்லப்பட்டதாம். அதனால்தான் அறிவிப்பு அப்படியே நிலுவையில் நிற்கிறதாம். தனக்கு எதிராக ‘ரகசிய’மாக போனைச் சுழற்றியவர் யார் என்பதைத்தான் பிரகாசமான பெண்மணி தீவிரமாக விசாரித்துக்கொண்டிருக்கிறாராம். #யார்யா அவரு... எனக்கே அவரைப் பார்க்கணும்போல இருக்கே!

இலைக் கட்சியின் பிளவுப் பிரச்னைகள் பெரிதாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களை நடத்திவிட நினைக்கிறது ஆளும்தரப்பு. அதனால், இப்போதே உரிய பதவிகளுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடக்கிறது. வாரிசு, யாரைக் கைகாட்டுகிறாரோ அவருக்குத்தான் சென்னையின் மேயர் பதவிக்கான சீட்டாம். ‘மிஸ்டர் க்ளீன் இமேஜ் கொண்ட ஒருவரை வாரிசு தேடுகிறார்’ என்கிறார்கள். அநேகமாகப் புதுமுகமாக இருந்தாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை என்கிறார்கள். #மிஸ்டர் க்ளீனா..? ஹா ஹா!

முதன்மையானவர் என்றும் பாராமல், அவருக்கு எதிராக அண்ணன் தலைவர் சமீபகாலமாக ஆவேசம் காட்டிவருகிறார். ஒன்றிரண்டு வீடியோ பதிவுகளைக் காவல்துறை அதிகாரிகள், முதன்மையானவர் கவனம் வரை கொண்டுபோக, அதன் பிறகே அண்ணன் தலைவர் மீது வழக்குகள் பாய்ந்தனவாம். “இதற்குப் பிறகும் நாவடக்கம் இல்லாவிட்டால் கைது நடவடிக்கைதான்” என அண்ணன் தலைவருக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலமாகச் செய்திகள் கசியவிடப்பட்டிருக்கின்றனவாம். #அண்ணனுக்கு மைக்ல கண்டம்!