அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

மேயர் தேர்தலுக்காகக் காத்திருக்கும் 21 மாநகராட்சிகளில் இரண்டில், இலைக் கட்சி வெல்லக்கூடும் என அலாரம் அடித்திருக்கிறது உளவுத்துறை. இலைக் கட்சியின் செல்வாக்கும், ஆளுங்கட்சியின் உள்ளடி வேலைகளும் வெற்றிக்கு வேட்டுவைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், அந்தப் பகுதிகளுக்கு எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய சக்தி படைத்தவர்களை வேட்பாளராக்க நினைக்கிறது ஆளுங்கட்சி. #சக்தின்னா ‘பசை’தானே!

கிசுகிசு

உண்மைக்கதையை உலகறியச் சொன்ன பிரகாச நடிகருக்கு எதிராக, சில மாவட்ட மன்றங்களைக் கலைக்கச் சொல்லி ஆசைவார்த்தை காட்டினார்களாம் பழக்கட்சி நிர்வாகிகள். பெரிய அளவில் தொகை பேசப்பட்டபோதும் மன்ற நிர்வாகிகள் வளைந்து கொடுக்கவில்லையாம். “நம்ம கட்சியிலகூட இவ்வளவு உண்மையும் உறுதியுமான ஆட்களைப் பார்க்க முடியாதுப்பா…” என ஆச்சர்யமும் கவலையும்பட்டிருக்கிறார்கள் பழக்கட்சி சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள். #தானா சேர்ந்த கூட்டம்!

கடும் குடைச்சலைக் கொடுக்கும் அசைன்மென்ட்டோடுதான் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார் பவன்காரர். ஆனால், அவரே ஆச்சர்யப்படும் அளவுக்கு, அவர் கேட்பதற்கு முன்னரே எல்லாவிதத் தகவல்களையும் உரிய முறையில் சொல்லவும், அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்கவைக்கவும் முதன்மையானவர் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். அதனால், குடைச்சலைக் கொடுக்காமல் பாசக்கரம் நீட்டுபவராகிவிட்டாராம் பவன்காரர். வெள்ள நிவாரணப் பணிகள் உள்ளிட்ட விவரங்கள்கூட பவன்காரர் கேட்காமலேயே விரிவாக அவருக்கு அனுப்பப்பட்டுவிட்டனவாம். #பட் இந்த டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு!

கிசுகிசு

சட்டமும் சத்தமுமாகப் பேசும் இலைக் கட்சியின் மாஜி, துணிவானவருக்கு எல்லாமுமாக மாறிவிட்டாராம். தனக்கான பிரச்னைகளுக்குத் துணிவானவர் மட்டுமே குரல் கொடுப்பதாகச் சொல்லும் மாஜி, உட்கட்சி விவகாரத்தில் துணிவானவருக்கு ஆதரவாக எவரையும் எதிர்க்கிற மனநிலையில் இருக்கிறாராம். கட்சிக் களேபரங்கள் பெரிதானால், பணிவானவருக்கு பதிலடி கொடுக்க இவரையே இறக்கிவிட நினைக்கிறதாம் துணிவுத் தரப்பு. #அந்தப் பணிவானவர் பதிலடி கொடுப்பார்னு இன்னுமா ஊர் நம்புது!?

அடாத மழையிலும் சிறார்கள் பள்ளிக்கு வர வேண்டும், சனிக்கிழமை பள்ளி நடத்தப்பட வேண்டும், திறனறித் தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கூடாது எனக் கறார்காட்டுகிறாராம் கற்பிக்கும் துறையின் இளம் அமைச்சர். “மழை நேரத்தில் குழந்தைகள் விஷயத்தில் நாம் கவனமாக இருக்கணும் சார்…” என அதிகாரிகள் இழுக்க, “நான் சொன்னதைச் செய்யறதுதான் உங்க வேலை. எனக்குச் சொல்லிக் கொடுக்குறது இல்லை” என்றாராம் உறுதியாக. #அன்பில் குறை வைக்கலாமா அமைச்சரே?

கிசுகிசு

காவிக் கட்சியின் மாநிலப் பொறுப்புக்கு வந்தவுடனேயே, நிர்வாகிகள் நியமனத்தைச் செய்ய நினைத்தார் மாஜி காக்கி. ஆனால், உட்கட்சிக் குழப்பங்கள் அவரைச் செயல்படவிடாமல் கட்டிப்போட்டன. மாநில அளவிலான நிர்வாகிகள் மாற்றத்துக்கு டெல்லியும் ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் மாவட்டப் பொறுப்பிலுள்ள சிலரை மாற்றி மாஜி காக்கி அறிவிக்க, கட்டுக்கட்டாக பெட்டிஷன்களை டெல்லிக்குத் தட்டிவிட்டிருக்கிறார்கள் காவிக் கட்சியின் உள்ளடி புள்ளிகள். #அவர் என்ன நம்மை மாற்றுவது… நாம் அவரையே மாற்றுவோம்!

வெள்ள பாதிப்புகளைச் சின்ன தலைவியே வெளியே வந்து எட்டிப் பார்த்தபோதும், இனிஷியல் புள்ளி வீட்டுக்குள்ளேயே இருந்தது விசில் கட்சிக்காரர்களைக் குமுற வைத்திருக்கிறது. ``மக்கள்நலப் பிரச்னைகளுக்குக்கூட எட்டிப்பார்க்காமல் இருந்தால் எப்படி?” என இனிஷியல் புள்ளியின் உதவியாளரிடம் சிலர் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். “நிவாரணப் பணிகளில் வேகம் காட்டச் சொல்லி அண்ணனிடமிருந்து விரைவில் அறிக்கை வரும்” என்றாராம் உதவியாளர். #அறிக்கை எழுத ஏன்யா அஞ்சு நாளு?