பிரீமியம் ஸ்டோரி

பொன்னான அமைச்சருக்கும், எல்லை தாண்டும் இனிஷியல் அமைச்சருக்கும் மோதல் முற்றுகிறதாம். தன் கட்டுப்பாட்டில் இருந்த பக்கத்து மாவட்ட நிர்வாகத்தை, உள்ளாட்சித் தேர்தலின்போது இனிஷியல் அமைச்சருக்கு ஒதுக்கியதிலேயே பொன்னான அமைச்சருக்குக் கடும் வருத்தம். தேர்தல் முடிந்த பிறகும், எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை இனிஷியல் புள்ளியின் பேச்சுக்கே மதிப்பு கொடுப்பதால், பொன்னானவருக்குக் கோபம் கொப்பளிக்கிறதாம். எந்த நேரத்திலும் மோதல் வெளிப்படையாகவே வெடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #தெறிக்கவிடலாமா?!

படரீதியான சர்ச்சை பெரிதாகி, மழைவெள்ளப் பிரச்னை தொடங்கி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் வரை அமுங்கிப்போனதில் ஆளும்தரப்புக்குச் சற்றே நிம்மதியாம். இது புரியாமல், பழக்கட்சி நிர்வாகிகள் அனுதினமும் கொந்தளித்துக்கொண்டேயிருக்க, “அரசியல் புரியாத ஆட்களா இருக்கீங்களேப்பா” என இலைக் கட்சி நிர்வாகிகள் எடுத்துச் சொன்னார்களாம். “எங்களுக்கா அரசியல் புரியலை? இட ஒதுக்கீடு பிரச்னையில் எங்களுக்கு எதிரா கொந்தளிப்பு கிளம்பாமல் இருக்கணும்னா, படப் பிரச்னையைப் பெரிதாக்கினால்தான் உண்டு” என்றார்களாம் பதிலடியாக. #அடப்பாவிகளா, ஆளாளுக்கு அரசியல் பண்றீங்களேப்பா!

விழா ஒன்றுக்காக டெல்டா மாவட்டத்தின் பக்கம் போன புயல் தலைவர், அதே விழாவில் பங்கேற்ற இலைக் கட்சியின் ட்ரீட்மென்ட் புள்ளியை நலம் விசாரித்தார். ட்ரீட்மென்ட் புள்ளி மனம்விட்டு நிறைய நேரம் அவரிடம் பேசிவிட்டுக் கிளம்பினார். சாதாரண அரசியல் பேச்சுதான் என்றாலும், அந்தச் சந்திப்புக்குப் பிறகு புயல் தலைவரின் நடவடிக்கைகள் ஆளும் அரசுக்கு எதிராகத் தடாலடியாக மாறத் தொடங்கியிருக்கின்றனவாம். ‘கண்காணித்து நோட் வையுங்கள்’ என உளவுத்துறைக்கு உத்தரவு பறந்திருக்கிறதாம். #ஒரே சந்திப்பில் மறுமலர்ச்சியா?!

நகர்ப்புறத் தேர்தலில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் கழற்றிவிட்டுவிட்டு, தனியாக நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் எனக் கட்சியின் சீனியர் நிர்வாகிகளை விசாரித்தாராம் முதன்மையானவர். ‘அனைத்துக் கட்சிகளையும் கழற்ற வேண்டாம். கதர்க் கட்சியை மட்டும் கழற்றிவிடுங்கள்’ எனப் பலரும் சொல்ல, அது குறித்த யோசனையில் இருக்கிறாராம் முதன்மையானவர். ஆளும்தரப்பு கழற்றிவிடக் காரணம் தேடிக்கொண்டிருக்கும் சூழல் தெரிந்து, கதர்க் கட்சியினரை, `கப்சிப்’ காக்கச் சொல்லியிருக்கிறாராம் தமிழகத் தலைவர். #அப்ப, இந்தவாட்டியும் அழ வெப்பாய்ங்களா?!

கிசுகிசு
கிசுகிசு

வீடு சம்பந்தப்பட்ட துறையை நிர்வகிக்கும் முத்தான சீனியர் அமைச்சருக்கும், அந்தத் துறையின் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் அனுதினமும் மோதல் தூள்பறக்கிறதாம். ‘உன்னை மாற்றுகிறேன்’ என அதிகாரிக்கு எதிராக அமைச்சர் கொந்தளிக்க, ‘மாற்றப்படப்போவது யார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்’ என பதிலுக்குப் பாய்ச்சல் காட்டுகிறாராம் அதிகாரி. யார் சபதம் ஜெயிக்கப்போகிறது என சம்பந்தப்பட்ட துறையின் அத்தனை அதிகாரிகளுக்குமிடையே பட்டிமன்றம் நடக்கிறது. #ஆக மொத்தத்துல, உருப்படியா வேலை எதுவும் நடக்குறதில்லை... அப்படித்தான?!

பிரகாச நடிகருக்கு எதிராகப் பின்னப்படும் சூழ்ச்சிகளைத் தவிடுபொடியாக்க, வெளிப்படையான பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தார்களாம். நடிகரும் கொந்தளிக்கத் தயாரான நிலையில் என்ன நினைத்தாரோ, ‘இப்போதைக்கு எதுவும் வேண்டாம். நாம் அமைதியாக இருப்போம்’ எனச் சொல்லிவிட்டாராம். ‘திட்டமிட்டு இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கச் சிலர் முயலும்போது, நாமும் அதற்கு தூபம் போட்டுவிடக் கூடாது’ என அதற்குக் காரணம் சொன்னாராம். #சில்லுனு ஒரு அமைதி!

சொந்தத் தொகுதிக்குப் போன முதன்மையானவர், காரில் திரும்பும்போது ஒரு சிறுவன் கைகாட்ட, அவசரமாக நிறுத்தச் சொன்னாராம். ஆன்லைன் புரொமோ டீம் வீடியோ எடுக்க ரெடியாக, முதன்மையானவரைப் பார்த்த சிறுவன், “தாத்தா உங்களை இந்தப் பக்கம் பார்க்கவே முடியலையே?” எனக் கேட்க, எல்லோருக்கும் ஒரு மாதிரியாகிவிட்டதாம். “கொரோனா தடுப்பு ஊசி போட்டாச்சா?” எனக் கேட்டு டாபிக்கை மாற்றி, சட்டெனக் கிளம்பிய முதன்மையானவர், “அந்த வீடியோவைப் போடாதீங்கப்பா” என்றாராம் புரொமோ டீமிடம். #எல்லா நேரத்துலயும் வீடியோ வொர்க்-அவுட் ஆகாது பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு