பிரீமியம் ஸ்டோரி

சின்ன தலைவிக்கும், இனிஷியல் தலைவருக்கும் இடையே பெரும் போர் நடப்பதாக மீடியாக்கள் பரபரக்கின்றன. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இருவர், அணி மாறத் தயாராகிக் கிளப்பிவிடுகிற வதந்திதானாம் இது. இருவருக்கும் முட்டல் மோதல் எனப் பெரிதானால், கூட்டமாக ஆளுங்கட்சிப் பக்கம் போகலாம் என ஐடியாவாம். அதனாலேயே திட்டமிட்டு மீடியாக்களுக்குத் தீனி கொடுக்கப்படுகிறதாம். #என்னா வில்லத்தனம்டா சாமி!

கோட்டையின் தலையாய அதிகாரி, அலுவலகத்துக்கு எல்லோரும் வருவதற்கு முன்பே காலை 9 மணிக்கு ஆஜராகிவிடுகிறாராம். எல்லோரும் கிளம்பிப்போன பின்னர் இரவு 9 மணிக்குத்தான் கிளம்புகிறாராம். ‘எந்த ஃபைலையும் இன்னொரு நாளைக்குத் தேங்கவைக்கக் கூடாது’ என்கிற அவரின் பழக்கம்தான் இப்படி நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவைக்கிறதாம். #அத்தனை அதிகாரிகளுக்கும் கத்துக்கொடுங்க சார்!

முன்பு தந்தைக்குப் பேருதவியாக உடனிருந்த இளைஞர், துவாரபாலகர்களாக வலம்வந்த முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் என யாரையும் முதன்மையானவர் சந்திப்பதே கிடையாதாம். ‘ஏன் இந்த அளவுக்குக் கசப்பு காட்டுகிறார்?’ எனக் கட்சியின் சீனியர்களே இது குறித்து விவாதிக்கிறார்கள். ஆனாலும், காரணத்தைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லையாம். #என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

கிசுகிசு

‘எத்தனை நாள்களுக்குத்தான் அமைதிகாப்பது’ என நொந்து நூலாகிறாராம் மதுரைக்கார மூத்தவர். ‘மகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்?’ எனக் குடும்பத்தினரிடம் குரலை உயர்த்தினாராம். பஞ்சாயத்துப் பேசியவர்களே முதன்மையானவரை நெருங்க முடியாத அளவுக்கு விலக்கிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், மூத்தவரின் ஆதங்கத்தை யார் அவர் கவனத்துக்குக் கொண்டுபோவது எனப் புரியாமல் குடும்பத்தினர் அமைதி காக்கிறார்கள். #‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ பாட்டை டெடிகேட் பண்றோம்!

பிரகாச நடிகரின் படம் பிரளயமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில், உரிமைக்கான கட்சித் தலைவர் கருத்து சொல்லாமல் அமைதிகாப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. பழக்கட்சியினர் நாளுக்கு நாள் கொந்தளிக்கும் நிலையில், ஆளுங்கட்சியின் நிலைப்பாடு தெரிந்து அதற்குத் தக்கபடியே ரியாக்ட் செய்ய நினைக்கிறாராம் உரிமைக்கான கட்சித் தலைவர். ஆளுங்கட்சி, இரு தரப்பு மோதலையும் வேடிக்கை பார்க்கும் நிலையில், தலைவரின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறதாம். #உரிமையில்லாமப் போச்சே!

தன் மீதான பண மோசடிப் புகாரைப் பெரிதுபடுத்த வேண்டாம் என காவல்துறையின் அதிகார மட்டத்தை அணுகி ரொம்பவே முயற்சி எடுத்தாராம் மாஜி உளவுப்புலியான அன்புக் கடவுளின் பெயர்கொண்ட அதிகாரி. ‘சரி, பார்த்துக்கொள்கிறோம்’ எனப் பலரும் தைரியம் கொடுத்த நிலையில், திடீரென மோசடிப் புகார் பதிவுசெய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட, மாஜி அதிகாரிக்கு மயக்கம் வராத குறையாம். கொடிகட்டிப் பறந்த காலத்தில் தேடிக்கொண்ட பகைதான் இப்போது பழிவாங்குகிறதாம். #நீ பற்றவைத்த நெருப்பொன்று...

கிசுகிசு

பெரிய இடத்து மருமகனின் மொத்த நெட்வொர்க் குறித்த விவரங்களையும், தன் கவனத்துக்குக் கொண்டுவரச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறாராம் பவன்காரர். அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நவரச நடிகரின் பெயர்கொண்ட புள்ளிதான் மருமகனின் நிழலாக இருந்து பல விஷயங்களைச் செய்கிறவர் என்கிற முதற்கட்ட தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம். கூடுதல் விவரங்களும் சேகரிக்கப்பட்டுவருகின்றனவாம். #ஓ... இப்பதான் முதல்கட்டத்துக்கே வந்திருக்காங்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு