Published:Updated:

கிசுகிசு - விடுகதையா இந்த வாழ்க்கை...

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு - விடுகதையா இந்த வாழ்க்கை...

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

இலைக்கட்சியில் அவைத்தலைவர் பதவியை எதிர்பார்த்து சீனியர்கள் பலரும் காத்துக்கிடந்தார்கள். செம்மையானவர், கோட்டையானவர், பொன்னானவர் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அந்தப் பதவிக்குக் கொண்டுவரும் முடிவைப் பணிவானவர் முதல்நாள் இரவு சொல்ல, துணிவானவர் எவ்வித மறுப்புமின்றி உடனே ஓகே செய்தாராம். தன்னுடைய சிபாரிசுக்குச் சட்டென ஓகே கிடைத்ததில், பணிவானவருக்குத் தாங்கமுடியாத ஆச்சர்யம். உண்மையில் தன் சார்பில் பலரும் முட்டிமோதியதால், சாதிரீதியான சங்கடத்துக்கு ஆளாக வேண்டிவருமே என ரொம்பவே குழம்பிக் கிடந்தாராம் துணிவானவர். இந்நிலையில், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியிலிருந்து நீக்கிய சங்கடமும் சேர்ந்துகொள்ள, அதை நிவர்த்திசெய்யும் விதமாகப் பணிவானர் சொன்ன நபரும் சரியாகப்பட, யாரும் எதிர்பாராத ஒருவரை அவைத் தலைவராக்கச் சம்மதித்தார் துணிவானவர். அதேநேரம் அவரைத் தன்வசப்படுத்தும் வேலைகளையும் பொறுப்பை அறிவிக்கும் முன்னரே ஆரம்பித்துவிட்டாராம். பணிவானவரின் சிபாரிசில் பதவிக்கு வந்தாலும், இப்போது இருவருக்கும் பொதுவானவராகவே தன்னைக் காட்டிக்கொள்கிறாராம் புதுவரவு நிர்வாகி. #ஒரு மய்யமாவே போவோம் மொமண்ட்!

கடந்த ஆட்சியிலும் கோலோச்சிய உயரதிகாரி அவர். இந்த ஆட்சியிலும் அவர் கொடிதான் பறக்கிறது. அப்பேர்ப்பட்ட அதிகாரியின் உத்தரவையே மதிக்காமல், மல்லுக்கட்டு நடத்தியிருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். அல்வாவுக்குப் பெயர்போன மாவட்டத்தின் எஸ்.பி.யாக இருந்த அந்த அதிகாரியைக் கடந்த வாரம் சென்னைக்குத் தூக்கி அடித்தார் கோலோச்சும் அதிகாரி. ஆனால், புதிய இடத்துக்குப் போக அந்த அதிகாரிக்கு விருப்பமே இல்லை. எப்படியாவது வேறு இடத்துக்கு மாற்ற அல்லது பழைய இடத்துக்கே போக பெரிய இடங்களை அணுகியிருக்கிறார். இதற்கிடையில், புதிய பொறுப்பை ஏற்கச்சொல்லி பலரும் வற்புறுத்த, அதிகாரியோ அசைந்துகொடுக்கவில்லை. இதில், ரொம்பவே கோபமான கோலோச்சும் அதிகாரி, ஏற்கனவே அறிவித்த பொறுப்பைவிட டம்மியான பொறுப்புக்குத் தூக்கியடித்து உத்தரவிட்டார். அங்கேயாவது அதிகாரி பொறுப்பேற்பாரா இல்லை அதற்கும் மறுத்து மல்லுக்கட்டுவாரா எனப் பரபர பட்டிமன்றம் நடக்கிறது காவல்துறை வட்டாரத்தில். #அட... அடிச்சிக்காதிங்க ஏட்டையா?

சொல்லிக்கொடுக்கும் துறையின் அமைச்சரை ‘அறிவிக்கப்படாத அனைத்துத் துறை அமைச்சர்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்குச் சிபாரிசு, டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட் என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறாராம். இவர் சொல்லுக்கு மறுப்பு சொல்ல முடியாத ஆதங்கத்தில் பல அமைச்சர்கள் குமுற, இன்னும் சிலரோ வலிய அவருக்கு போன் பண்ணி, “நம்ம துறையில் ஏதும் உதவின்னா தயங்காம கேளுங்க தம்பி” என்கிறார்களாம். #‘என்ன தம்பி... போன வாரம் ஆடிக்க வர்றேன்னீங்க... வரவேல்ல’ மொமண்ட்!

கிசுகிசு - விடுகதையா இந்த வாழ்க்கை...

“ஐயா உங்களோடு பேச ரெடியா இருக்கார். நீங்க போன் பண்ணினால் போதும்” என பிரகாச நடிகர் தரப்பில் தகவல் சொல்லப்பட்டதாம். ‘ஆம்’, ‘இல்லை’ என எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதிகாக்கிறாராம் நடிகர். #கிட்னி பத்திரம் பாஸ்!

“தமிழ் சினிமா வேற லெவலுக்குப் போய்ட்டிருக்கு. ஒண்ணு கான்ட்ரவர்சி பண்ணனும், இல்லன்னா வன்முறை பண்ணனும். நீங்க என்னடான்னா இப்பப் போய் அண்ணன் தங்கச்சின்னு அரதப் பழசான கதையைச் சொல்றீங்க?” எனக் கதை கேட்டபோதே சென்டிமென்ட் இயக்குநரிடம் கருத்து சொன்னாராம் பிரகாச நிறுவனத்தின் முதலாளி. ஆனால், உச்ச நடிகர் விடாப்பிடியாக அந்த சென்டிமென்ட் கதையை டிக் செய்ய, முதலாளியால் மறுக்க முடியாத சூழல். எப்போதுமே தன் கணிப்பு தப்பாது என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர் அந்த முதலாளி. அதனால், பெரிய அளவில் நடிகருக்குப் பேசப்பட்ட சம்பளத்தை வேறுவிதமாக மாற்ற முடிவுசெய்தாராம். “சார், இந்தக் கதை பெரிய ஹிட் அடிக்கும்னு நீங்க உறுதியா இருக்கீங்க. அப்போ ஒண்ணு பண்ணுவோம். இனிஷியல் பேமெண்ட் உங்களுக்கு இப்பவே கொடுத்திடுறோம். ஆனா, மற்ற தொகையை நாம் லாபத்தில் ஷேர் பண்ணிக்குவோம். படம் பெரிய ஹிட் அடிக்கும் பட்சத்தில் நீங்கள் கேட்ட தொகையைவிட இதில் அதிக பணம் கிடைக்க வாய்ப்பு. இந்த டீல் ஓகேயா?” எனக் கேட்டாராம் அந்த முதலாளி. நடிகருக்கும் மறுக்க முடியாத சூழல். அந்த டீல் அப்படியே அக்ரிமெண்டாகக் கையெழுத்தானதாம்.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சென்டிமென்ட் படம், சமீபத்தில் ரிலீஸானது. எதிர்மறை விமர்சனங்களும், கொட்டித்தீர்த்த மழையும் படத்தின் வசூலை வெகுவாகப் பாதிக்க, நடிகருக்கோ நகத்தைக் கடிக்கிற நிலை. எதிர்பார்த்த சம்பளத்தில் பாதிக்குப் பாதிகூட கிடைக்காத நெருக்கடி. வசூல் சுமார் என்றாலும், தன் கணிப்பு சரியாகப் பலித்ததால் பட முதலாளி லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த படத்தை நோக்கி நகர்ந்துவிட்டார். அதே நடிகர்… அதே கம்பெனி… அடுத்த புராஜெக்ட் என வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. ஆனால், பண இழப்புக்கு ஆளான நடிகரோ, சம்பள விஷயம் சரியான பிறகு படம் குறித்து யோசிக்கலாம் என நினைக்கிறாராம். ‘படம் நஷ்டம்… பிறகு எப்படி ஷேர் கொடுக்க முடியும்?’ என்கிறதாம் நிறுவனம். நிலைகுலைந்து நிற்கிறார் நடிகர். #விடுகதையா இந்த வாழ்க்கை... விடை தருவார் யாரோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism