Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

அதிகாரிகள் மாற்றத்தில் முக்கியத் துறையிலிருந்த அபூர்வமான பெண் அதிகாரியை டம்மியான இடத்துக்குத் தூக்கி அடித்திருக்கிறார்கள். இதில், மாற்று முகாமிலிருக்கும் தோட்டத்துத் தலைவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். “கடந்த ஆட்சியில் அந்தம்மாவை மாற்றச் சொல்லித் தலைகீழாக நின்னு பார்த்தேன். கூட்டணியை மதிச்சுகூட என் கருத்தை எடப்பாடியார் கேட்கலை. ஆனா, கோரிக்கை வைக்காமலே ஸ்டாலின் செஞ்சு கொடுத்திட்டார்” என்கிறாராம். #என்னமோ பண்ணப்போய் யாருக்கோ லாபமாகிடுச்சுபோல!

கிசுகிசு

கொரோனா விவகாரத்தில், தொடர்ந்து சர்ச்சைக் கருத்துகளை வெளியிடும் வில்லன் நடிகர், முதல்வரை நேரில் சந்திக்க பலமுறை வாய்ப்பு கேட்டாராம். ஏனோ இன்னமும் அனுமதி கிடைக்கவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளை அணுகிய வில்லன் நடிகர், “பொக்கே கொடுக்கவோ புகழ்ந்து பேசவோ நான் முதல்வரைச் சந்திக்கலை. கொரோனா குறித்த முக்கியமான விஷயத்தைப் பேசத்தானே அனுமதி கேட்கிறேன்” எனக் குமுறினாராம். #அனுமதி கிடைக்காததே அதனாலதாங்க!

கொரோனா நெருக்கடி நேரத்தில், தலைமைச் செயலகத்தில் சில அமைச்சர்களின் அறைகள் புனரமைக்கப்பட்டு வருவது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ‘இந்த நெருக்கடி நேரத்தில் இவ்வளவு செலவுகள் தேவையா?’ என்பதுதான் கேள்வி. இது ஒருபுறமிருக்க, சில அமைச்சர்களின் அறைகளில் பூஜை புனஸ்காரங்களும் நடக்கிறதாம். புகைமூட்டம் போட்ட மாதிரி சாம்பிராணி வாசனை பக்கத்து அறைகளுக்கும் பரவுகிறாம். #மந்திரிகளா… மாந்திரீகர்களா?

கிசுகிசு

துக்கம் விசாரிக்கும் வகையில், பணிவானவரை நேரில் சந்தித்த இரண்டு பெல் பிரமுகர்களும் துணிவானவருக்கு எதிராகத் தங்கள் மனவேதனைகளை மணிக்கணக்கில் கொட்டினார்களாம். “துவாரபாலகர்கள் போல் நின்றவர்களே நம்ம பக்கம் வந்துட்டாங்களே” என ஆதரவாளர்கள் சிலாகிக்க, “ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போயிருந்தா சிவாஜிகணேசனையே ஓவர்டேக் பண்ணியிருப்பாங்க…” என்றாராம் பணிவானவர். #உலக நடிப்புடா சாமி…

டெல்லியில் காலியான மூன்று இடங்களைப் பிடிக்க பலரும் போட்டிபோட, இரண்டு பேரை முடிவுசெய்துவிட்டாராம் ஸ்டாலின். பணிவானவரை எதிர்த்துத் தோற்றுப்போன கோல்டு பிரமுகர், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவர் என இருவர் பெயரை டிக் செய்திருக்கும் ஸ்டாலின், மூன்றாவது ஆளுக்கான தேர்வில் மும்முரமாக இருக்கிறாராம். வெற்றி வியூகங்களை வகுத்துக்கொடுத்த பிசினஸ் புள்ளி, பத்திரிகையாளர், பெண்கவிஞர், வழக்கறிஞர் எனப் பலருடைய பெயர்களும் பரபரப்பாக அடிபடுகின்றன. #சீட்டைக் குலுக்கிப் போடுங்க சீக்கிரம்!

கிசுகிசு

பெண் பிரமுகரை சபாநாயகராக அமர்த்திவிட்டு, அவர் வகிக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவியைத் தங்கைக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தார் முதன்மையான அண்ணன். இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்து பெண் பிரமுகர் தோற்க, அவர் பதவியைக் கைமாற்ற முடியாத இக்கட்டான நிலை. அதனால், தங்கைக்கான பதவி அறிவிப்பு தள்ளிப்போகிறது. வேறு பதவியை வழங்கலாமா என யோசிக்கிறார் அண்ணன். #பாசமலர்கள்!

அரசியலில் வெற்றியின்றித் தத்தளித்த காலத்திலும், நன்றி மாறாமல் தன்னிடம் போக்கும் வரத்துமாக இருந்த நம்பிக்கையும் தயவுமான அதிகாரியை, தன் துறையின் முக்கியப் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறார் ராஜ அமைச்சர். “அதிகாரி விசுவாசத்தை நிரூபித்தார். அமைச்சர் அன்பை நிரூபிக்கிறார்” எனப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். #அவர் பாட... இவர் ஆட... அடடா!

மாநகர மந்திரிக்குத் திடீரென போன் செய்திருக்கிறார் கைகளை உயர்த்தி கர்ஜிக்கும் அண்ணன் தலைவர். போனை எடுப்பதா தவிர்ப்பதா எனத் திண்டாடிப்போன அமைச்சர், அப்படியே விட்டுவிட, சில நிமிடங்களில் ஒரு குறுந்தகவல் வந்ததாம். தனது கட்சிக்காரத் தம்பி ஒருவருக்கு உரிய சிகிச்சை வழங்கக்கோரி அதில் சொல்லப்பட்டிருக்க, அதன் பிறகே ஆசுவாசமானாராம் அமைச்சர். #அந்த பயம் இருக்கணும்… இப்படிக்கு அதிபர்!