Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க இந்த அளவுக்குப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முக்கியக் காரணம் என்ன?’ என அங்கு தேர்தல் பணிக்காகத் தமிழகத்திலிருந்து போய்வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் விசாரிக்கச் சொன்னாராம் தமிழகத்தின் முதன்மையானவர். ‘ஆட்சிக்கு எதிராகப் பலவிதமான சர்ச்சைகள் இருந்தும், சட்டம்- ஒழுங்கை மிகச் சரியாகக் கவனித்ததுதான் யோகியின் வெற்றிக்குக் காரணம்’ எனக் குறிப்பிட்டார்களாம் அந்த அதிகாரிகள். விரைவில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும்விதமாகப் பல அதிரடிகள் அரங்கேற வாய்ப்பிருக்கிறதாம். #உ.பி-யிடம் கற்கும் உ.பி!

கிசுகிசு

டெல்டா மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதியின் ‘குமார’ எம்.எல்.ஏ., நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்கள் தேர்வில் சாதிரீதியாகச் செயல்பட்டதாகத் தலைமைக்குப் புகார் அனுப்பப்பட்டிருக்கிறதாம். எம்.எல்.ஏ-வின் சாதியப் பாசத்தால், ஆளுங்கட்சி சார்பில் சுற்றுச்சூழல் அணியைச் சேர்ந்தவரின் மனைவியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். சீட் கிடைக்காத ஆதங்கத்தில் சுயேச்சையாக மாறி நின்ற வேட்பாளர், அவரை எதிர்த்து வென்றுகாட்டினாராம். இந்த ஆதாரத்தையும் தலைமைக்குச் சேர்த்து அனுப்பியிருக்கிறார்களாம். விரைவில் என்கொயரி இருக்கும் என்கிறார்கள். #சாதியால் சூழலுக்கு எப்பவுமே கேடுதான்!

கிசுகிசு

தஞ்சை மாவட்டத்தின் பக்கம் சுற்றுப்பயணத்துக்கு வந்த சின்ன தலைவியை, இலைக் கட்சியின் ட்ரீட்மென்ட் புள்ளி சந்திக்கப்போவதாகப் பரபரப்பு கிளம்பியது. மீடியாக்கள் அதைப் பெரிதாக்கி எழுதிய நிலையில், சின்ன தலைவியிடமிருந்தே அவருக்கு போன் வந்ததாம். ‘கட்சியை வலுப்படுத்த எது அவசியமான நிலைப்பாடோ… அதைச் செய்யுங்கள். நீங்கள் என்னைச் சந்திக்கவேண்டியதில்லை’ எனத் தெளிவாகச் சொன்னாராம். “அந்தம்மா இவ்வளவு பக்குவமா, நிதானமா நடந்துக்கிறாங்க. தனக்குப் பெரிய செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ளக்கூட அவங்க விரும்பலை. கட்சி வலுவாகணும்னுதான் நினைக்கிறாங்க” என நெருங்கிய நிர்வாகிகளிடம் சிலாகிக்கிறாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. #‘வானத்தைப்போல’ படத்தைவிட நெகிழ்ச்சியான சீனா இருக்கே!

கல்வி சம்பந்தமான மசோதாவை மட்டுமல்ல, வேறு துறைகள் சார்ந்த ஐந்து சட்ட மசோதாக்களையும் பவன்புள்ளி பெண்டிங்கில் போட்டுவைத்திருக்கிறார். ‘சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அடுத்தடுத்து இப்படிக் காத்திருப்பில் போட்டுவைப்பது சட்டரீதியான சிக்கலைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது’ என பவன்புள்ளியிடம் சிலர் எடுத்துரைத்தார்களாம். நாடாளுமன்றத்தில் பவன்புள்ளியை மாற்றக் கோரி ஆளுங்கட்சி குரல் எழுப்பிய நிலையில், இந்தச் சட்ட ஆலோசனை பவன்காரருக்குச் சொல்லப்பட்டதாம். ஆனாலும், ‘நான் எதையும் தீர ஆராய்ந்து தெளிவான பிறகுதான் ஒப்புதல் வழங்குவேன்’ எனக் கறாராகச் சொன்னாராம் பவன்காரர். #ஆராயுற மூட்ல இருக்கிறவர்கிட்ட ஏன் பாஸ் ஆலோசனை சொல்றீங்க!?

போக்குவரத்துத்துறையில் வாகனங்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறை பெரிதாக நிலவுகிறதாம். ஆனால், ‘பெண்களுக்கு இலவசம்’ என்கிற திட்டத்தால் துறையின் வருவாய் அதல பாதாளத்தில் வீழ்ந்துகிடப்பதால், இப்போது வேலைக்கு ஆட்கள் எடுக்கிற எண்ணமே துறையின் அமைச்சருக்கு இல்லையாம். அதனால், பல மாவட்டங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை திடீரெனக் குறைவாகியிருக்கிறதாம். கவலைக்கிடமான நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து எடுத்துச்சொல்ல, அதைத் தனி கோப்பாகத் தயாரித்துத் தரச்சொன்னாராம். முதல்வரின் கவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும் கோப்பு, என்ன பலனைக் கொடுக்கும் எனக் காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். #வண்டி எப்ப சார் கிளம்பும்?

விசில் கட்சியிலிருந்து தி.மு.க பக்கம் வந்த கோல்டு புள்ளிக்கு, உடனே மாவட்டப் பொறுப்பைத் தூக்கிக்கொடுத்தார்கள். மாவட்ட நிர்வாகிகளை அனுசரிப்பதில் கோல்டு பிரமுகர் ஆரம்பத்திலிருந்தே தடுமாறிவருகிறார். அவர் என்னதான் அன்பும் அனுசரணையுமாகப் பேசினாலும், காலங்காலமாகக் கட்சியிலிருக்கும் நிர்வாகிகள் அவர் வார்த்தைக்குக் கட்டுப்படுவது கிடையாது. சமீபத்திய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கோல்டு பிரமுகரின் பேச்சை மீறி உள்ளடி வேலைகள் தீவிரமாக நடந்தன. இதில் கட்சித் தலைமைக்குக் கடுமையான கோபம். கோல்டு பிரமுகர் சுட்டிக்காட்டிய உள்ளடி நிர்வாகிகளைக் கட்சியைவிட்டே கட்டம்கட்டிய தலைமை, ‘மேற்கொண்டும் பிரச்னைகள் தொடர்ந்தால் உங்களின் மாவட்டப் பொறுப்பை மாற்றவேண்டி வரும்’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டதாம். இதற்கிடையில் ஏற்கெனவே மாவட்டத்தில் கோலோச்சிய மூக்கு பிரமுகரை அழைத்து, கட்சி நிலவரம் குறித்து விசாரிக்கிற முடிவிலும் தலைமை இருக்கிறதாம். #உள்ளடி பற்றவைத்த சரவெடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism