Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கர்ஜிக்கும் கரும்புக் கட்சித் தலைவர், திடீரென முதல்வரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏழு பேர் விடுதலை குறித்து கர்ஜிக்கும் தலைவர் ஆதங்கப்பட, அதிலுள்ள சிக்கல்களைப் பட்டியலிட்ட முதல்வர், ‘விடுதலையில் நான் உறுதியாக இருக்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும் தனிப்பட்ட சந்திப்பில் பேசப்படுகிற விஷயங்களை வெளியே சொல்லக் கூடாது என்பது அரசியல் மரபு. ஆனால், ‘ஏழு பேர் விடுதலையில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்’ என மீடியாக்களிடம் கர்ஜிக்கும் தலைவர் போட்டு உடைக்க, முதல்வருக்கு உச்சபட்ச சங்கடமாம். #நல்லவேளை… முதல்வர் வீட்டில் முதலைக் கறி விருந்துன்னு சொல்லாமல் விட்டாரே!

கிசுகிசு

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்ட வளர்ப்பு வாரிசு, இப்போது 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வழியில்லாமல் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் இருக்கிறார். வளர்ப்பு வாரிசின் மனைவி பல இடங்களிலும் பணத்துக்கு அல்லாடுகிறாராம். ‘சீக்கிரமே மீட்கிறேன்’ என ஆறுதல் சொன்ன சின்ன தலைவியை இப்போது அணுகவே முடியவில்லையாம். உடன்பிறந்த இனிஷியல் தலைவரும் ஆக்டிங் பிரமுகரும் கையில் பணமில்லை எனச் சொல்லி ஒதுங்கிக்கொண்டார்களாம். ‘கொரோனா நேரத்திலும் கோடிக்கணக்கில் கல்யாணச் செலவு பண்றாங்க. ஆனா, கூடப் பொறந்தவனை ஜெயில்லருந்து மீட்க நினைக்கலையே…’ எனக் குமுறுகிறார்கள் வளர்ப்பு வாரிசின் வகையறாக்கள். #அண்ணன் என்னடா… தம்பி என்னடா…

பக்கத்து மாநிலம் விருது கொடுத்து வில்லங்கம் கிளப்பிய விவகாரத்தில், தனக்கு ஆதரவாகப் பெரிய அளவில் தமிழ்க் குரல்கள் கிளம்பாததால் மனவருத்தத்தில் இருக்கிறாராம் டைமண்ட் கவிஞர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே தனக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதாகவும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் சதி குறித்தும் நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டவர், ‘எனக்கு ஆதரவாகக்கூடப் பேச வேண்டாம். இந்தச் சதியை அம்பலப்படுத்தக்கூட ஆள் இல்லையே…’ எனக் கவலைப்பட்டாராம். #ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்...

குடும்பத்தில் செல்வாக்குடன் இருக்கும் பிரிவினைத் தலைவரின் பெயர்கொண்ட பிரமுகர், தேர்தலில் தனக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என நினைத்தாராம். ஆனால், வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஆனாலும், கொஞ்சமும் மன வருத்தப்படாமல் வாரிசின் வெற்றிக்காக முழு மூச்சில் வேலை பார்த்தாராம். கணிசமான வாக்கு வித்தியாசம் அமைய வியூகரீதியாக அவர் செய்த உதவியும் காரணமாம். அதற்கான பரிசுதான் சமீபத்திய அரசு அங்கீகாரப் பதவியாம். #செஞ்சது உதவி… வந்தது பதவி!

“எனக்கு பி.பி., சுகர் இருக்கு…” என்றெல்லாம் சொல்லி பரிதாபம் தேடி, எலெக்‌ஷனில் வென்றவர் ‘குட்கா’ புகழ் மாஜி. பெண் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் இவரும் சிக்கியிருப்பதுதான் இப்போதைய பரபரப்பு. இத்தனைக்கும் பசை கவனிப்பைச் சரியாகச் செய்து சர்ச்சைகள் வெளிவராமல் பார்த்துக்கொள்வதில் இவர் கெட்டிக்காரர். அதையும் தாண்டி மாஜிக்கு எதிராகக் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார் பெண் பிரமுகர் ஒருவர். சமாதானப் பேச்சுவார்த்தையும் பணப்பட்டுவாடாவும் நடத்தி, சைலன்டாக்க முயல்கிறார் மாஜி. #சுகர் இருந்தாலும் சும்மா இருக்க மாட்டார்போலயே?!

கிசுகிசு

பரபரப்பு இல்லாத காலகட்டத்திலேயே, ஏதாவது ஒரு பிரச்னைக்குக் கூப்பாடு போட்டுத் தன் இருப்பைக் காட்டிக்கொள்பவர் தலைவரும் தொண்டருமாக இருக்கும் முருகப் பிரமுகர். ஆளுங்கட்சிக் கூட்டணியில் நின்று வென்ற நிலையிலும், ஆள் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாகி இருப்பது ஏன் என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. ஏழு பேர் விடுதலைக்காக முதன்மையானவரை நேரில் சந்தித்து வலியுறுத்தப்போகிறார் எனச் செய்தி வந்ததே தவிர, ஆள் வந்தபாடில்லை. ‘ஆளுக்கு என்னாச்சு?’ எனப் பட்டிமன்றம் நடத்தாத குறையாகப் பேசுகிறார்கள் பரிவாரங்கள். #வாழ்வுரிமைக்கு பாதிப்பில்லையே…

அதிகாரிகள் மாற்றத்தில் நடக்கும் பல குளறுபடிகளுக்கு, சர்ச்சையில் சிக்கிய கட்டுமான நிறுவனங்களின் கரன்சி பரிவர்த்தனைதான் காரணமாம். நீதிமன்றமே கண்டித்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை பவரான இடத்துக்குக் கொண்டுவர, கட்டுமான நிறுவனங்கள் எடுத்த முயற்சிதான் காரணமாம். ஏற்கெனவே கட்டுமானத்துறையில் பணியாற்றியபோது சம்பந்தப்பட்ட அதிகாரி காட்டிய அனுசரனை அப்படிப்பட்டதாம். #லக்கான அதிகாரி..!

தேர்தலில் நடையாக நடந்தும் காவிக் கட்சியின் ஸ்டார் பெண்மணியால் வெல்ல முடியவில்லை. அதனால், அப்படியே அம்மணி அமைதியாகிவிட்டார். பள்ளி விவகாரம் தொடங்கி பல சர்ச்சைகள் றெக்கை கட்டினாலும் அவை குறித்து எந்தக் கருத்தையும் அம்மணி சொல்லவில்லை. ‘இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதுதான் அரசியல் பணியா?’ எனக் கட்சிக்காரர்கள் குரல் உயர்த்த, ‘கொரோனா பரவல் நேரத்தில் வீட்டில் இருப்பதே நாட்டுக்குச் செய்யும் நற்பணிதான்’ எனச் சொல்லி வாயை அடைத்தாராம் அம்மணி. #கொண்டையில் என்ன பூ… குறும்பு!