அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

விசாரணை ஆணையத்தின் அறிக்கையைவைத்து உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இலைக் கட்சியின் துணிவானவர் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், குட்கா மாஜியின் பெயரும் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் சிக்கலாகியிருப்பதால், அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்ட முடியாமல் அமைதியாக இருக்கிறார் துணிவானவர். சின்ன தலைவியின் பெயர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பதால், பணிவானவரும் ஆணையத்தின் அறிக்கை குறித்து ரியாக்‌ஷன் காட்டாமல் இருக்கிறார். ஆளும் வாரிசுக்கு நெருக்கமான அதிகாரியின் பெயருக்காக அரசுத் தரப்பும் அமைதி காக்கிறது. இதனால், விசாரணையை நடத்திய விவரப்புள்ளி சீக்கிரமே இது குறித்து மீடியாக்களிடம் வெடிக்கிற முடிவில் இருக்கிறாராம். #அநியாய அமைதி!

கிசுகிசு

அடிக்கடி உடல்நலப் பிரச்னைகள் வருவதால், வெளிநாட்டுக்குப் போய் சிகிச்சை எடுக்க நினைக்கிறாராம் முதன்மையானவர். இதுவரை மூன்று முறை அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணப்பட்டு, கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம். அப்போதே சிகிச்சை எடுத்திருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வந்திருக்காது என்கிறார்களாம் மருத்துவர்கள். இதற்கிடையில் கவர்னர் விவகாரம் தொடங்கி, கோவைச் சம்பவம் வரையிலான நிகழ்வுகள் உச்சபட்ச டென்ஷனை ஏற்படுத்தியிருப் பதால், இந்த நேரத்தில் வெளிநாடு பயணம் சரிப்பட்டு வருமா என்கிற யோசனையும் முதன்மையானவரை யோசிக்கவைக்கிறதாம். அடுத்த மாதம் முதன்மையானவரை எப்படியும் வெளிநாடு சிகிச்சைக்குக் கிளப்ப இல்லத்தினர் தீவிரமாக இருக்கிறார்கள். #உடம்ப கவனிங்க சார்!

கிசுகிசு

பழக்கட்சித் தலைவர்போல் பண்ணையில் தங்கி அரசியல் செய்ய, அண்ணன் தலைவருக்கு ஆசை வந்துவிட்டதாம். அதனால், சென்னைக்கு அருகில் மொத்தமாக நூறு ஏக்கர் நிலம் வாங்கும் ஐடியாவில் இருக்கிறாராம். நிலத் தரகர்களைச் சந்தித்து தம்பிகள் தீவிரமாக இடம் தேடிக்கொண்டிருக் கிறார்கள். “நூறு ஏக்கர் வாங்க, பணத்துக்கு எங்கே போவது?” எனச் சில நிர்வாகிகள் கேட்க, மனைவியின் சொத்துகளை விற்று, அதில் வரும் பணத்தைத் தருவதாகச் சொன்னாராம் அண்ணன் தலைவர். #கதை கேளு... கதை கேளு... நிஜமான கதை கேளு!

கிசுகிசு

சின்ன தலைவியின் செல்வாக்கு வளையத்தில் வலம்வரும் யூத் புள்ளி, சமீபத்தில் டெல்டா மாவட்டத்துக்கு விசிட் அடித்தாராம். சொத்து குறித்த விவகாரங்களைப் பேசி முடிக்கத்தான் இந்தப் பயணமாம். உறவுகளை அழைத்துப் பேசியதில், கைகலப்பு அளவுக்கு மோதல் முற்றியதாம். தனியார் விடுதி நிர்வாகமே அரண்டுபோகிற அளவுக்கு விவகாரம் பெரிதானதாம். சின்ன தலைவிக்கா:ன பசை ஏற்பாடுகளை இப்போது யூத் புள்ளிதான் கவனிக்கத் தொடங்கியிருக்கிறாராம். சொத்துகளை வளைத்துவைத்து ஆதாயம் பார்த்த உறவு வட்டாரம், திருப்பிக் கேட்கும்போது முகத்தைக் காட்டுவதால் நடந்த மோதல்தானாம் அது. #பசை என்றாலே பஞ்சாயத்துதானே!

கிசுகிசு

கோவை விவகாரத்தில் தீவிரம் காட்டும் காவிக் கட்சியின் மாஜி காக்கி, கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஆளும் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டாராம். ஆனால், கோவை விவகாரத்தில் இலைக் கட்சி, காவிக் கட்சித் தலைவருக்கு ஆதரவாகப் பேசாமல் அநியாயத்துக்கு அமைதி காக்க, துணிவானவர் தரப்பில் இது குறித்து பேசப்பட்டதாம். “டெல்லியில எங்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்த நீங்க எந்த முயற்சியும் செய்யலையே…” என ஆதங்கப்பட்டார்களாம் துணிவானவரின் ஆட்கள். “நியாயமான எதிர்க்கட்சியா, கோவை விவகாரத்தை நீங்கதான் பெருசாக்கியிருக்கணும். ஆனா, துணைக்குக்கூட நிக்காம நீங்க விலகி நிக்கிறீங்க…” என பதிலுக்குப் பாய்ந்த காக்கி மாஜி தரப்பு, டெல்லி விஷயங்களில் உத்தரவாதம் கொடுத்து, போராட்ட ஒருங்கிணைப்பை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகி வருகிறதாம். #நீங்க அரிசி கொண்டு வாங்க... நான் உமி கொண்டு வாறேன்... ரெண்டு பேரும் ஊதி ஊதித் திங்கலாம்!