சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

மீசை அமைச்சரின் தம்பி வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் திகைத்துப்போயிருக்கிறார்கள். போலீஸ் வளைத்திருக்கும் முக்கிய தாதாக்களை சட்டரீதியாகக் காப்பாற்ற, பெரும் தொகையை மர்ம நபர்கள் செலவழிக்கிறார்களாம். ஒரே நாளில் 30 லட்ச ரூபாயை ஒரு டீம் செலவழிக்க, ‘யார் இந்தப் பசை பார்ட்டி?’ என அதிகாரிகளே அதிர்ந்துவிட்டார்களாம். வழக்கைக் குழப்பும்விதமாக வியூகங்களை வகுக்க லீகல் டீம் ஒன்று தீவிரமாக வேலை பார்க்கிறதாம். தாதாக்களிடம் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். ‘பசை’ பின்னணி குறித்து விசாரணை இப்போது வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. #என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

கிசுகிசு

அரசுரீதியான தகவல்களை, காவிக் கட்சியின் மாஜி காக்கிக்குக் கசியவிடும் அதிகாரிகள் யார் யார் என்கிற விசாரணையைத் தீவிரமாக்கிவருகிறது உளவுத்துறை. முதல்வர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் உள்ளே விவாதிக்கப்படும் விஷயங்கள் வரை காக்கி மாஜிக்குச் சொல்லப்படுகின்றனவாம். சமீபத்தில் முதல்வருடன் ஐந்து அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்ட கூட்டத்தில், காவிக் கட்சியின் மாஜி காக்கிக்கு எதிராக போலீஸ் நடவடிக்கையைப் பாய்ச்சலாமா என விவாதிக்கப்பட்டதாம். அதையும் காக்கி மாஜி கவனத்துக்குக் கொண்டுபோய்விட்டார்களாம் சிலர். அதன் பிறகே உளவுத்துறை மூலமாக உள்ளடி அதிகாரிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டாராம் முதல்வர். #என்ன சார்... உங்க சோப் என்ன ஸ்லோவா?

தனக்கு எதிராக ஆளும் தரப்பு தடாலடியாக இறங்கியிருக்கும் சூழலிலும், பவன்புள்ளி அது குறித்துக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லையாம். டெல்லி தனக்குப் பக்கபலமாக இருப்பதை மிக உறுதியாக நம்புகிறாராம் பவன்புள்ளி. இதற்கிடையில், ஆளும் தரப்பிலிருந்து அரசியல், நெருக்கடி என ஏதேதோ தன்னிலை விளக்கம் கொடுத்து சிலர் பவன்புள்ளியிடம் பேசத் தொடங்கியிருக்கிறார்களாம். முதன்மையானவர் கவனத்துக்குத் தெரியாமலேயே இந்த விளக்கங்கள் பவனுக்குப் போகின்றனவாம். மூத்த அமைச்சர் ஒருவர், பவனுக்கு நெருக்கமான முன்னாள் அதிகாரி ஒருவரை அனுப்பி, தன் தரப்பில் விளக்கத்தைச் சொல்லச் சொன்னாராம். அத்தனைக்கும் புன்னகை மட்டுமே பதிலாக வருகிறதாம் பவன்புள்ளியிடம். #வீரம்னா என்ன தெரியுமா... பயப்படாத மாதிரி நடிக்கிறது!

கிசுகிசு

துப்பறிவாள நடிகர் திடீரென பிரதமரைப் பாராட்டி ட்வீட் தட்ட, காவிக் கட்சி வட்டாரம் பரபரப்பாகிவிட்டது. சீக்கிரமே டெல்லிக்குப் போய் காவிக் கட்சியில் இணையும் திட்டத்தில் துப்பறிவாள நடிகர் இருப்பதாகச் சொல்பவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கத் திட்டமிடுவதாகவும் சொல்கிறார்கள். சினிமா நண்பர்கள் தரப்போ வேறு மாதிரி சொல்கிறது. 100 ‘சி’யைத் தாண்டுகிற அளவுக்குத் துப்பறிவாள நடிகருக்குக் கடன் மிகுதியாகிவிட்டதாம். சிலர் கடனைக் கேட்டு அடாவடி, மிரட்டல் என்றெல்லாம் இறங்க, தனக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறாராம் துப்பறிவாள நடிகர். காவிக் கட்சியோடு நெருக்கம் காட்ட இதுதான் உண்மையான காரணமாம். #அவருக்கும் பசிக்கும்ல?!

இலைக் கட்சியில் இவ்வளவு சேதாரங்கள் நடந்திருக்கும் நிலையிலும், தன்னுடைய அரசியல் செல்வாக்கு உயரவில்லையே எனத் தீராத ஆதங்கத்தில் இருக்கிறார் இனிஷியல் புள்ளி. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அணி மாறிவிட்ட நிலையில், தொண்டர்கள் மட்டுமே மீதமிருக்கிறார்கள். அதனால், இலைக் கட்சியின் நிர்வாகிகள் சிலரையாவது தன் பக்கம் திருப்ப நினைக்கிறார் இனிஷியல் புள்ளி. அதற்காகச் சில ஆட்களையும் இறக்கிவிட்டார். ‘சின்ன தலைவியை நம்பியாவது போவோம்… இவரை நம்பி வர மாட்டோம்’ என இரண்டு மாஜிக்கள் சொல்ல, இனிஷியல் புள்ளிக்குக் கோபம் எகிறிவிட்டதாம். இருவருக்கும் போன் போட்டு பொங்கித் தீர்த்தாராம். #ரொம்ப அசிங்கமாப்போச்சு குமாரு!