Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

மாநகரத்தின் பாரம்பர்யப் பெருமைகொண்ட கல்லூரியில், தன் வாரிசுக்கு சீட் வாங்க ஆசைப்பட்டிருக்கிறார் இசையில் இரட்டைச் சாதனை படைத்தவர். முறைப்படி விண்ணப்பம் போட்டாலே கிடைக்கக்கூடிய அளவுக்கு உரிய மதிப்பெண்ணும் வாங்கியிருந்தாராம் வாரிசு. அதனால் மிகுந்த நம்பிக்கையில் இருந்திருக்கிறார்கள். வெளியான மூன்று பட்டியலிலும் வாரிசுக்கு சீட் கிடைக்காததால், பெரிய இடத்து வாரிசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். வாரிசு சொல்லியும், கல்லூரித் தரப்பு வாய் திறக்கவில்லையாம். இன்னமும் சீட் பஞ்சாயத்து நீண்டுகொண்டே போகிறதாம். #முஸ்தபா... முஸ்தபா... டோண்ட் வொர்ரி முஸ்தபா!

டெல்லிக்குத் தேர்வான இருவரில், யார் ட்ரீட்மென்ட் புள்ளியின் இடத்துக்கு, யார் சீனியர் சாமி இடத்துக்கு என்பதை முதலில் ஆளுங்கட்சித் தலைமை சொல்லவில்லையாம். இதனால், அதிக நாள்கள் டெல்லியில் பதவியில் இருக்கப்போவது யார் எனத் தெரியாமல் இருவருக்குமே பெருங்குழப்பம். கட்சிக்காரர்கள் மத்தியிலும் இந்தக் குழப்பம் பட்டிமன்றமாகப் பரபரத்தது. இல்லத்து ஆட்களிடம் வாழ்த்து வாங்கச் சென்றபோதுதான் ‘அம்மணிக்குத்தான் அதிகமான நாள்கள் டெல்லியில் இருக்கும் வாய்ப்பு’ எனச் சொல்லப் பட்டதாம். அம்மணி கண்கலங்கி நன்றி சொல்ல, ‘பதவியை அறிவிச்சப்பவே இப்படித்தானே முடிவு பண்ணியிருந்தோம்’ எனக் கூலாகச் சொன்னார்களாம் குடும்பத் தரப்பில். #நன்றி சொல்ல இதுக்கு... வார்த்தையில்ல எனக்கு!

கிசுகிசு

வாய்த்துடுக்கு அமைச்சருக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே கலகக்குரல் கிளம்பியிருக்கிறது. வரி குறித்த மத்திய அரசின் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், உள்ளூர் விழாவில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், மீடியாக்களுக்குத் தீனி கொடுக்கும்விதமாகவும் பேசிய வாய்த்துடுக்கு அமைச்சர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என ஆளுங்கட்சியின் எம்.பி ஒருவரே ஆத்திரப்பட்டிருக்கிறார். இந்த மோதல் முதன்மையானவரின் கவனத்துக்குப் போக, எம்.பி ஆவேசப்பட்டதே முதன்மையானவரின் உத்தரவுப்படிதான் எனப் போட்டு உடைத்தார்களாம். ‘அப்பா பாணியில் முதன்மையானவர் ஆயுதம் எடுக்கிறார்’ என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். #நெக்ஸ்டு மீட் பண்றேன் மொமன்ட்!

பவனுக்கு வந்திருக்கும் புதியவரை காவல்துறையின் உளவுப்புள்ளி சந்தித்துப் பேசியது, சம்பிரதாயமான ஒன்றுதான். ஆனால், ‘முன்னாள் உளவு அதிகாரி, தற்போதைய உளவு அதிகாரியைச் சந்தித்துப் பேசியதற்குப் பின்னணி ஏதாவது இருக்குமா?’ எனக் கோட்டை வட்டாரத்தில் பெரிய பட்டிமன்றம். இதற்கிடையில் பவன் புதியவர் என்ன கேட்டார், தான் சொன்னது என்ன என்கிற கம்ப்ளீட் விவரங்களை முதன்மையானவரின் கவனத்துக்குக் கடிதமாகக் கொடுத்துவிட்டாராம் உளவுப்புள்ளி. #ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா?

கோயில் கோயிலாக நல்லது செய்யும் அமைச்சர் வீட்டில், குடும்பரீதியான சங்கடங்கள் ஏற்பட, முதன்மையானவரின் மனைவி பெரிய அளவில் ஆறுதலாக நின்றாராம். “நான் வேணும்னா வீட்டுக்கு வரவா? குடும்பத்தில் உள்ளவங்ககிட்ட நானே பேசுறேன்…” என அவர் சொல்ல, அமைச்சருக்குக் கண்ணீர் பெருக்கெடுத்திருக்கிறது. சங்கடங்களைச் சரியாக்க போலீஸ் அதிகாரிகள் வரை போனைச் சுழற்றியதும் அவரேதானாம். #இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...

கிசுகிசு

சினிமாவுக்குச் சான்றிதழ் கொடுக்கும் துறையில், கறாரும் கம்பீரமுமாகக் காட்டிக்கொள்ளும் அதிகாரியைச் சீக்கிரமே தூக்கி அடிக்கப்போகிறார்களாம். இத்தனைக்கும், ‘வெளியே கறார்… உள்ளே அரசியல் நெளிவு சுளிவு’ என நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ளும் நாசுக்குத் தெரிந்தவர்தான் அந்த அதிகாரி. ஆனாலும், அவர் இடத்துக்கு வேறு ஒருவரைக் கொண்டுவருவதற்கான வியூகத்தில் 90 சதவிகித வெற்றியையும் பெற்றுவிட்டார்களாம் காவிக் கட்சிக்காரர்கள். #இதுலயாவது வெற்றி பெற்றா சரிதான்!

காத்திருப்புப் பட்டியலில் பல காலமாக இருந்தவர்களில், ஒரு லட்சம் பேருக்கு ஒரே நாளில் இணைப்பு வழங்கிய விதத்தில் அணில் அமைச்சருக்கு முதன்மையானவரிடமிருந்து ஏகபோக பாராட்டாம். ‘யாரும் சாதிக்க முடியாததைச் சர்வ சாதாரணமா சாதிச்சுட்டீங்க’ என்றாராம் சிலிர்ப்பாக. “சீனியாரிட்டியைப் பின்பற்றாமல், சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்திருக்கிற இந்தப் பணியைப் பற்றி முதன்மையானவரிடம் விளக்கிச் சொல்ல ஒரு அதிகாரியும் இல்லையா?” எனக் குமுறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தில். #எம்.எல்.ஏ-வாலயே சாதிக்க முடியலையாம்... என்னைச் சாதிக்கச் சொல்றாங்க... ஒரே குஷ்டமப்பா!