Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

‘எனக்கு எளிமையான உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். ஆடம்பர உணவுகளை நான் விரும்ப மாட்டேன்’ எனத் தலைமை அதிகாரி அனுப்பிய ஆணையைப் பலரும் கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே ‘என் புத்தகங்களைப் பரிசளிப்பதை நான் விரும்ப மாட்டேன்’ என இவர் வெளியிட்ட அறிக்கையும் பலவிதமான பரிகாசத்துக்கு ஆளானது. ‘அவர் நேர்மையானவர்; எளிமையானவர்னு எல்லாருக்கும் தெரியும். அதை வெளியே காட்ட ஏன் இப்படிப் பண்ணணும்?’ எனக் கோட்டை வட்டாரத்திலேயே கிசுகிசுக்கிறார்கள். #விமர்சனத்தை விரும்ப மாட்டேன்னு அடுத்து ஓர் அறிக்கை வரப்போகுது போங்க!

கிசுகிசு

கரும்புக் கட்சியின் திருச்சி நிர்வாகிகளைக் கைதுசெய்ய ஆரம்பத்தில் காவல்துறை தயங்கியதாம். மொழியானவர் முழங்கிய பிறகுதான் தடாலடி நடவடிக்கை எடுத்தார்களாம். கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளைப் பாய்ச்சுகிற அளவுக்குப் போனதும்கூட அம்மணியின் அழுத்தத்துக்குப் பிறகுதானாம். மிரட்டல் சம்பவத்துக்காகக் கைது நடந்திருந்தாலும், வலைதளத்தில் முருகப் பிரமுகர் வஞ்சனை இல்லாமல் பலரையும் வகுந்தெடுத்த கோபத்துக்கான பதிலடிதானாம் இது. குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி, வெளியே வர முடியாத நிலையை உருவாக்கவும் வியூகம் நடக்கிறது. #சாட்டைக்கு எதிராவே சாட்டையைச் சுழற்றிட்டாங்களே!

அ.தி.மு.க-வின் அத்தனை நிர்வாகிகளும் சின்னத்தலைவிக்கு எதிராக இருந்தபோதும், விசுவாசம் மாறாமல் கடைசிவரை நின்றவர் கொங்கு மண்டலத்தின் முன்னாள் எம்.பி ஒருவர். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையிலும், சின்னத் தலைவியை வரவேற்க பெங்களூரு சென்றாராம். பிறகு, சென்னைக்கும் பலமுறை படையெடுத்தாராம். தன் மகளின் திருமணத்தை சின்னத்தலைவி தலைமையில் நடத்த வேண்டும் என்பதுதான் அவர் கனவாம். ஆனால், சந்திக்கவே விடாமல் குடும்பத்தினர் காட்டிய கெடுபிடி, ‘போதும் அவமானம்’ என்கிற அளவுக்கு அவரை ஆத்திரப்படுத்திவிட்டதாம். ‘இனி இந்தப் பக்கமே வர மாட்டேன்’ எனச் சபதம் செய்துவிட்டு சென்னையிலிருந்து கிளம்பிப்போனாராம். #போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போயிருந்தா, இந்நேரம் பேசிருப்பாங்களே சார்!

கிசுகிசு

சூரியக் கட்சியின் தயவில் நாடாளுமன்றம் போன மன்னர் பிரமுகர், டெல்லியில் முழுக்க முழுக்க காவிக் கட்சியின் ஆட்களோடுதான் ஐக்கியமாகிச் சுற்றுகிறாராம். சூரியக் கட்சியின் ஆட்களைச் சந்திப்பதையே தவிர்க்கிறாராம். ‘இப்படிப் பண்றதுக்கு பதிலா காவிக் கட்சியிலேயே கலந்துடலாமே...’ எனக் கேட்டவர்களிடம், ‘பதவிக்காகத்தான் பார்க்கிறேன். இல்லைன்னா இந்நேரம் பிரதமரைப் பார்த்து கட்சியில் சேர்ந்திருப்பேன்’ என வெளிப்படையாகவே சொன்னாராம். #பதவி ஒரு கட்சியிலே... பாசம் ஒரு கட்சியிலே...

“கர்நாடகா பாணியில் நம்ம மாநிலத்துக்கும் புதுக்கொடியை உருவாக்கலாமே… மாநில சுயாட்சியை உரத்து சொல்ற மாதிரி இருக்கும்ல…” என உணர்வாளர்கள் சிலர் சொல்ல, திடுக்கிட்டுப்போனாராம் முதன்மையானவர். “பத்து வருஷத்துக்குப் பிறகு போராடிப் பொறுப்புக்கு வந்திருக்கேன். எதையாவது ஏடாகூடம் பண்ணி பொங்கவெச்சுட்டுப் போயிடாதீயப்பா…” எனப் பொரிந்து தள்ளிவிட்டாராம். ‘ஒரு வருஷத்துக்கு உணர்வாளர்களைச் சந்திக்காமல் இருப்பதே உத்தமம்’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் முதன்மையானவர். #அந்த ஃபர்னிச்சர்ல மட்டும் கையை வெச்சுடாதீங்க மொமன்ட்!

கிசுகிசு
கிசுகிசு

கடந்தகாலங்களில் மணலில் கொடிகட்டிப் பறந்த இரண்டெழுத்து இனிஷியல் ராஜ புள்ளி, சூரியக் கட்சியின் டெல்டா மாவட்ட எம்.பி-யின் குடும்பத்துக்குச் சம்பந்தியானார். மணல் வியாபாரத்தை கவனிக்க நடக்கும் போட்டியில், இரண்டெழுத்து இனிஷியல் ராஜ புள்ளியும் கலந்துகொள்ள நினைக்கிறாராம். ‘முதல்வரிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்’ என எம்.பி சொன்ன வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறார் இனிஷியல் புள்ளி. ‘எத்தகைய கமிஷனையும் கொடுக்கத் தயார்’ எனச் சொல்லியிருக்கும் வார்த்தைகள் தனக்கு நிச்சயம் சாதகத்தைக் கொடுக்கும் என நம்பியிருக்கிறாராம். #ஒரு ‘மண்டலத்துல’ மொத்த ‘மண்டலத்தையும்’ அள்ளிருவாங்க!

கொரோனா பரவல் சரியாகும் வரை வெளிநாட்டில் போய்த் தங்கலாமா என நினைக்கிறார் சூப்பர் நடிகர். குடும்பத்தினரும் இதே கருத்தை வலியுறுத்த, தனி விமானம் ரெடி பண்ணச் சொல்லிவிட்டாராம். மத்திய அரசின் தரப்பிலும் கிரீன் சிக்னல் கிடைத்துவிட, திடீரென பயணத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறார் நடிகர். ‘இரண்டு மாதங்களுக்கு வெளிப் பயணங்கள் வேண்டாம்’ என்கிறதாம் ஜாதகம். #ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் பிளான மாத்துறான்!