பிரீமியம் ஸ்டோரி

தியாகத்தை அடைமொழியாகவைத்து அழைத்தது, சின்ன தலைவிக்குப் பிடிக்கவில்லையாம். ‘கடைசிவரை நாம எல்லாத்தையும் தியாகம் பண்ற மாதிரியே இருக்கே…’ எனக் கவலைப்பட்டவர், புது அடைமொழி கண்டுபிடிக்கச் சொன்னாராம். சேனலில் பணியாற்றுபவர்கள் நூற்றுக்கணக்கிலான அடைமொழிகள் அனுப்பியும், சின்ன தலைவிக்கு எதுவுமே பிடிக்கவில்லையாம். அம்மா பாணியிலேயே ‘புரட்சி’யை அடைமொழியாக்கச் சொல்லி ஜாதகரீதியாகச் சொல்லப்பட, அதன் பிறகுதான் அந்த வார்த்தைகள் புதுப் புகழாரமாகப் பரவிவருகிறதாம். #பாவம் பாஸ்... அந்தப் ‘புரட்சி’!

‘சினிமா சார்ந்தவர்கள் அது குறித்த உதவிகளை மட்டுமே கேட்க வேண்டும்’, ‘அரசியல் சார்ந்தவர்கள் அரசியல் குறித்த விஷயங்களை மட்டுமே தன்னிடம் பேச வேண்டும்’ எனக் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம் முதன்மையானவரின் வாரிசு. அதையும் மீறி, துறை மீறிப் பேசுபவர்களை உடனே போனில் பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிடுகிறாராம். #அப்ப, மொத்த நம்பர்களையும் பிளாக் லிஸ்ட்லதான் போடணும்!

நாடாளுமன்றத் தேர்தல் வரை, எந்தவகையில் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பதுதான் நடுநிலைத் தலைவருக்குப் பெரிய தலைவலியாக இருக்கிறதாம். சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை மாதந்தோறும் கையில் எடுத்து, மாவட்டவாரியாகப் போராட்டங்கள் நடத்தலாம் எனச் சில நிர்வாகிகள் ஐடியா கொடுத்திருக்கிறார்கள். ‘இதற்கெல்லாம் செலவாகும். சிக்கனமான ஐடியா கொடுங்கள்’ என நடுநிலைத் தலைவர் சொல்ல, ‘அடிக்கடி அறிக்கை கொடுங்க தலைவரே... அது போதும்’ என்றார்களாம். #அறிக்கையைப் புரிஞ்சுக்க நாங்க ரொம்ப செலவு பண்ணவேண்டியிருக்கே?

முன்னாள் வாரிசுப்புள்ளி சிறையிலிருந்து வெளியே வர, பினாமி புள்ளிகள் பலருக்கும் நடுக்கம் தொடங்கிவிட்டதாம். நிறைய பசைப் பலன்களைப் பெற்றவர்கள் சிறைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்காத கோபம் முன்னாள் வாரிசுக்குக் கடுமையாக இருக்கிறதாம். அதனால் பலரும் போனை அணைத்துவிட்டு பக்கத்து மாநிலங்களுக்குப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். #அப்ப, ரிலீஸ் அன்னிக்கு ஆரத்தி எடுக்க ஆளே இல்லியா?

கிசுகிசு

துணையாக இருந்த மலர்ப் பிரமுகர் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை காத்துவந்தார். சின்ன தலைவியின் அரசியல் என்ட்ரிக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, மலர்ப் பிரமுகரைக் கட்சிக்குக் கொண்டுவந்து பதவி கொடுத்துப் பார்க்கலாமா எனக் கேட்டாராம் துணிவானவர். சீனியர் நிர்வாகிகள் பலரும் அதை ஆதரிக்க, சிலர் மட்டும் எதிர்த்தார்களாம். இதற்கிடையில், ‘எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ என மலர்ப் பிரமுகர் ட்விஸ்ட் அடித்ததுதான் ஹைலைட். #பூ சிரிக்கிறது குன்றத்தில்.. புயல் அடிக்கிறது மன்றத்தில்!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மாற்றப்பட்டியல் மறுபடி ரெடியானதாம். இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை வேறு பதவிகளுக்கு மாற்றுகிற அந்த முடிவுக்கு, முதன்மையானவர் ஓகே சொல்லவில்லையாம். ‘அடிக்கடி அதிகாரிகளைப் பந்தாட இது அம்மையார் ஆட்சி இல்லை… அதிகாரிகள்மீது குறையிருந்தால், பக்குவமாகச் சொல்லிப் புரியவையுங்கள்’ என்றாராம். மாற்றப்பட்டியல் இப்போது கிடப்பில் கிடக்கிறதாம். #முதன்மையானவரின் நடவடிக்கைகள் எல்லாமே விக்ரமன் படக் காட்சியாவே இருக்கே..!

ஆளுங்கட்சியில் உள்ள சில அமைச்சர்கள், அண்ணன் கட்சித் தலைவருக்கு நெருக்கமானவர்கள். அவ்வப்போது போனில் பேசுகிற அளவுக்கு அளவளாவி வந்தார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக அண்ணன் தலைவரே அழைத்தாலும், அமைச்சர்கள் போனை எடுப்பதே கிடையாதாம். ‘உங்க சகவாசம் தெரிந்தால் அமைச்சர் பதவிக்கே ஆபத்தாகிவிடும்’ எனச் சொல்லி அனுப்பி சைலன்ட்டாகிவிட்டார்களாம். #சிங் இன் த ரெயின்... ஐ வான்ட் மோர் இன் த ரெயின்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு