Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

இலைக் கட்சி பக்கம் இருந்துகொண்டே, கடைசிவரை சின்ன தலைவிக்கு ஆதரவாகச் செயல்பட்ட கொங்கு மண்டல மாஜி எம்.பி., திடீரென தி.மு.க-வுக்குத் தாவியிருக்கிறார். காரணம் குறித்து விசாரித்தபோது, சின்ன தலைவிக்கு மயக்கம் வராத குறையாம். தன் இல்லத் திருமணத்தை சின்ன தலைவி தலைமையில் நடத்துவதற்காகப் பல வருடங்கள் தவமாய் தவம் கிடந்தாராம் மாஜி எம்.பி. பலமுறை சின்ன தலைவியின் தி.நகர் வீட்டு வாசலிலேயே மணிக்கணக்கில் நின்றாராம். ஆனால், இவர் காத்திருக்கும் தகவலைக்கூட சின்ன தலைவியின் கவனத்துக்கு யாரும் கொண்டுசெல்லவில்லையாம். “அவர் ஏன் என்னை வந்து பார்க்கலை?” எனச் சின்ன தலைவியே மாஜி எம்.பி குறித்துக் கேட்டபோதும், அருகிருந்தவர்கள் அவர் குறித்து வாய் திறக்காமல் பூசி மறைத்துவிட்டார்களாம். “இந்த மாதிரி இன்னும் எத்தனை பேரை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கீங்க?” எனக் காலம் கடந்து காரசாரம் காட்டிக்கொண்டிருக்கிறாராம் சின்ன தலைவி. #ரொம்பத் தாமதம்!

ஆளுந்தரப்புக்கு எதிராகப் பேசிய காவிக் கட்சியின் ஆதரவுப் புள்ளிகள் இருவரை குண்டர் சட்டத்தில் தள்ளியதுபோல், மாறி மாறிப் பேசுகிற ஆன்லைன் அதிரடிப் புள்ளி மீதும் அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு குண்டர் சட்டத்தைப் பாய்ச்சத் திட்டமிட்டிருந்ததாம் ஆளும் கட்சி. நீதிமன்றம் காட்டிய பாய்ச்சலில் உஷாரான ஆளும் தரப்பு, ‘வழக்குகள் போதும்… குண்டர் சட்டம் வேண்டாம்’ எனப் பின்வாங்கிவிட்டதாம். இந்த விவகாரத்தை பவன் புள்ளி கவனத்துக்கும் காவிக் கட்சித் தலைவர் கொண்டுபோயிருப்பதால், ஆளும் தரப்பு அடக்கி வாசிக்குமாம். #பயப்படுறியா குமாரு?!

போதைப்பொருள் தடுப்பு விஷயங்களில் தீவிர கவனம் காட்டச்சொல்லி, சைக்கிளிங் அதிகாரி அனுதினமும் விரட்டிவருகிறாராம். பல இடங்களில் ஆளுங்கட்சிப் புள்ளிகளின் ஆதரவுடன் நடக்கும் போதை வியாபாரத்தை எப்படித் தடுப்பது என மாவட்டக் கண்காணிப்பாளர்கள் தயங்கியிருக்கிறார்கள். “கட்சித் தலையீடுகளாக இருந்தாலும் அரெஸ்ட் செய்யுங்கள். யாருக்கும் தயவு காட்ட வேண்டாம்” என ஆஃப் தி ரெக்கார்ட் உத்தரவு போட்டிருக்கிறாராம் சைக்கிளிங் அதிகாரி. இந்தத் தகவலை முதன்மையானவர் கவனத்துக்குக் கொண்டுபோவதா வேண்டாமா என உளவுத்துறை அதிகாரிகள் யோசிக்க, அவர்களை முந்திக்கொண்டு சைக்கிளிங் அதிகாரியே சொல்லிவிட்டாராம். #இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க?

கிசுகிசு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தில் உயரிய பொறுப்பு வகிக்கும் சீனியர் புள்ளி, சட்டென வேறு பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டது அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் தன் அனுபவத்துக்கு ஏற்ற துறையாக இல்லாவிட்டாலும், சைலன்ட்டாகப் போய் பொறுப்பேற்று பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டாராம் அந்த சீனியர் புள்ளி. ‘முதன்மையானவர் கவனத்துக்கே போய் நடந்திருக்கும் நடவடிக்கை இது’ எனக் கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம். #ரொம்பப் ‘பணீ’வா நடந்துக்குறாரே?!

மரியாதைக்குரிய மாநகரின் மேயர் சீட்டுக்குத் தன் மகன் பேரை சிபாரிசு செய்யத் தொடங்கிவிட்டாராம் மீசை மினிஸ்டர். சரியான துறை ஒதுக்கப்படாத சங்கடத்தைக்கூட வெளியே காட்டிக்கொள்ளாமல் செயல்படும் தனக்கு, இந்த விஷயத்தில் முதன்மையானவர் நிச்சயம் உதவுவார் என லோக்கல் நிர்வாகிகளிடமும் உறுதியாகச் சொல்கிறாராம். ‘இந்த விஷயத்தில் நீயும் எனக்காகப் பேசுப்பா…’ என அன்பான அமைச்சரிடமும் ஆதரவு கேட்டு வைத்திருக்கிறாராம். #தந்தை சிபாரிசு மிக்க மந்திரமில்லை!

அல்வா மாவட்டத்திலிருந்து தூக்கியடிக்கப்பட்ட காக்கி அதிகாரி, மறுபடியும் பந்தாடப்பட்டது பரபரப்பானது. அதற்குக் காரணம், கனிமவளம் குறித்த விவகாரம் ஒன்றில் தலையிட்டதுதானாம். இதற்கிடையில், இந்த மாற்றத்தைக் கண்டித்து ‘டோக்கன்’ தலைவர் அறிக்கை வெளியிட, காக்கி வட்டாரத்தில் மேலும் சலசலப்பு. விரைவில் அல்வா மாவட்டத்தின் கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து ‘டோக்கன்’ தலைவர் போராட்டம் நடத்தப்போவதாகவும், அதில் காக்கி அதிகாரி மாற்றப்பட்ட பின்னணியை பகிரங்கமாகப் பேசப்போவதாகவும் தகவல். #என்னாச்சு... குக்கர் திடீர்னு விசிலடிக்குது!

‘மதியம் 12 மணிக்கு மேல் அமைச்சரைப் பார்க்க முடியாது’ என போர்டு மாட்டாத குறையாகச் சொல்கிறார்களாம் மூத்த அமைச்சரின் உதவியாளர்கள். “முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார்”, “ஃபைல் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்றெல்லாம் காரணங்கள் சொல்லி உதவியாளர்கள் சமாளித்தாலும், அவ்வப்போது கேட்கிற குறட்டைச் சத்தம்தான் உண்மையான காரணத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறதாம். #உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதுங்க!