Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

“இவ்வளவு சாதாரண துறையை எனக்குக் கொடுத்திட்டீங்களே…” எனக் கண்ணீர்விட்டே, ‘கணி’சமான லாபம் கொட்டும் துறையைக் கூடுதலாக வாங்கிக்கொண்ட மூத்த அமைச்சர், சமீபத்தில் தன்னிடம் வந்த கான்ட்ராக்டரிடம் 30 ஸ்வீட் பாக்ஸ் கேட்டாராம். “முடியலைய்யா... என்னோட தொழிலையே விட்டுட்டுப் போயிடுறேன்” எனச் சொல்லிக் கண்கலங்கிக் கிளம்பினாராம் கான்ட்ராக்டர். ‘பாலைக் கறக்கலாம்; இப்படி ரத்தத்தைக் கறக்கலாமா?’ எனக் குமுறுகிறார்கள் அமைச்சரால் அல்லாடும் கான்ட்ராக்டர்கள். #நியாயமா... ஞாயமாரே!

கிசுகிசு

எல்லோரையும் முந்திக்கொண்டு நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் அண்ணன் தலைவர். `வேட்பாளர் தேர்வு தொடங்கி பரப்புரைத் திட்டங்கள் வரை இவர்களைக் கேட்டுத்தான்’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டாராம். திடீர் பவருக்கு வந்திருக்கும் பொறுப்பாளர்களுக்கும், பல காலமாக பவரில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லையாம். கட்சிக்குள் விரைவில் கலகக்குரல் கிளம்பும் என்கிறார்கள். #நாம் கலகர்!

கிசுகிசு

முதல்வராகப் பொறுப்பேற்றவுடனேயே, தன்னை அரசு ஆலோசகராக நியமித்து கௌரவிப்பார் என நினைத்தாராம் சமீபத்தில் மறைந்த மூத்த உதவியாளர். அதற்கு வாய்ப்பில்லாமல் போன நிலையில், தன் உதவியாளர் பயணத்தின் ஐம்பதாம் ஆண்டை விழாவாக நடத்தி கௌரவிப்பார்கள் என நினைத்தாராம். அதுவும் நடக்கவில்லையாம். இந்த நிராசைகளுடனேயே அந்த மூத்த உதவியாளர் மறைந்த நிலையில், துக்கத்துக்கு வந்த முதன்மையானவர் கதறி அழ, ஒரு கட்டத்தில் அவரின் மனக் கிடக்கைகளைக் குடும்பத்தினர் சொன்னார்களாம். ‘இவை யாவுமே என் கவனத்துக்குச் சொல்லப்படவில்லையே’ என்றாராம் முதன்மையானவர். ‘குடும்பத்துக்கு ஏதாவது செய்யலாமா’ என இப்போது யோசனை நடக்கிறதாம். #ம்க்கும்... மறுபடியும் யோசனைதான் நடக்கிறதா?!

கிசுகிசு

திருவாரூர் மாவட்டத்தின் தடாலடியான ஆளுங்கட்சி அதிகாரப்புள்ளி, கட்டப்பஞ்சாயத்துகளை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறாராம். ரௌடிகளின் நெட்வொர்க்கை மீண்டும் கையிலெடுத்திருக்கும் தடாலடிப் புள்ளி, தான் வைத்ததுதான் சட்டம் என நிரூபிக்க நினைக்கிறாராம். ‘டெல்டா மாவட்டத்தின் அறிவிக்கப்படாத அமைச்சராகவே மாறிவிட்டார்’ என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள். #முதல்வரின் சொந்த ஊருலயே அட்ராசிட்டி பண்றீங்கன்னா பெரிய ஆள்தான் பாஸ் நீங்க!

கிசுகிசு

கதர்க் கட்சியின் தமிழகத் தலைவர் மாற்றம், ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகுதான் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டதாம் டெல்லி தலைமை. பிரகாசமான பெண்மணியைப் புதிய தலைவராக அறிவிக்கும் முடிவை டெல்லி தலைமை ஏற்கெனவே எடுத்திருந்த நிலையில், அதைத் தெளிவாகத் தள்ளிப்போட வைத்து, தன் நாற்காலியைக் காப்பாற்றிக்கொண்ட தற்போதைய தலைவரின் சாணக்கியத்தனம், கதர்க் கட்சியினரை மிரளவைக்கிறதாம். ‘கத்தியின்றி ரத்தமின்றி களமாடும் வித்தையை இவர்கிட்டதான்ப்பா கத்துக்கணும்’ என்கிறார்கள் வியப்போடு. #அவருக்கும் பசிக்கும்ல!

கிசுகிசு

முன்பெல்லாம் ஏதாவது உதவி, குறை என போனில் குறுந்தகவல் அனுப்பினாலே ஆக்‌ஷனில் இறங்கி அசத்துபவர் மாரத்தான் மந்திரி. ஆனால், இப்போதெல்லாம் முக்கால்வாசி நேரம் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ போய்விடுகிறாராம். முதன்மையானவருக்கும், இல்லத்தினருக்கும், வாரிசுக்கும் வளைந்து நெளிந்து நிமிர்வதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறதாம். அவர்களின் சிபாரிசுகளை பம்பர வேகத்தில் பண்ணிக் கொடுத்து, அவர்களின் ஆசிபெற்ற அமைச்சராக இருக்க அனுதினமும் மாரத்தானைவிட வேகமாக ஓடுகிறாராம். #ஓடினார்... ஓடினார்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினார்!

கிசுகிசு

டெல்லியின் முகமாக இருக்கும் மில்க் புள்ளி யார், எது குறித்து அவையில் பேசுவதாக இருந்தாலும் தன்னிடம் முதல் நாளே பேச்சின் முழு வடிவத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்கிறாராம். ‘இது முக்கியமான விஷயம். அதனால் நான் பேசினால்தான் தெளிவாக இருக்கும்’ எனச் சொல்லி, அவற்றில் சிலவற்றை அப்படியே அவையில் அவர் பேச்சாக மாற்றிவிடுகிறாராம். டெல்லியில் கோலோச்சியவரின் மகனான சேனல்காரரிடமே இந்த விளையாட்டை மில்க் புள்ளி நடத்திக் காட்டியதுதான் மிரட்டலோ மிரட்டல். #ஒரே பாலு... 32 ரன்னு!