Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

பார் ஏல விவகாரத்தில், இன்னமும் சர்ச்சைகள் அடங்கியபாடில்லையாம். ‘பிரச்னைகள் இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என உரியவர்கள் முறையாகச் சொன்ன பிறகும், உற்ற ரத்த உறவையே பிரச்னை செய்பவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லியிருக்கிறாராம் அணில் அமைச்சர். ‘பிரச்னைக்குக் காரணமா இருக்கிறதே அவர்தான். அவரே எப்படிப் பிரச்னைகளைத் தீர்ப்பார்?’ எனப் பொருமிக்கொண்டிருப்பவர்கள், அடுத்தகட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகிவருகிறார்கள். #பிராதே அவர்மேலதாங்க!

சின்ன தலைவியின் அண்ணன் மகனான சேனல் புள்ளி, தன் வலிமையைக் காட்ட மதுரை ஜல்லிக்கட்டில் தன் பெயரில் ஒரு காளையை இறக்கிவிட்டார். அந்தக் காளை களமிறங்கும் தகவலை ஆளுங்கட்சி வாரிசுக்குத் தெரியப்படுத்த, ‘அதை அடக்கியே தீரணும்’ எனச் சொல்லி தங்க செயின் பரிசையும் அறிவிக்கச் சொன்னாராம். அவரின் உத்தரவுப்படியே காளை பிடிபட, சேனல் புள்ளிக்கு செம கோபமாம். காளையைப் போட்டிக்கு ரெடி செய்தவர்களைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம். #பாலிட்டிக்ஸ்... வாடிவாசல் வரைக்கும் வந்தாச்சா!?

கிசுகிசு

‘பழைய சாலைகளை அப்புறப்படுத்தி, அதன் பிறகு புதிய சாலைகளைப் போட வேண்டும்’ எனத் தலையாய அதிகாரி உத்தரவிட்ட பிறகும், அது முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது குறித்த புகார்கள் பல இடங்களிலிருந்து அடுத்தடுத்துக் கிளம்ப, திடீர் ஆக்‌ஷனில் இறங்கினார் தலையாய அதிகாரி. சென்னையின் பல பகுதிகளில் நடக்கும் சாலைப்பணிகளை அவர் நேரடியாகப் பார்வையிட வர அதிகாரிகள், டெண்டர்தாரர்கள் எனப் பலரும் ஆடிப்போனார்களாம். பொங்கல் நேரம் என்றுகூடப் பார்க்காமல் கிளம்பிப்போய் தலையாய அதிகாரி புயல் கிளப்பியதால், ‘இனி சாலைப்பணிகள் சரியாக நடக்கும்’ என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். #முதல்ல அன்பு... அப்புறம் ஆக்‌ஷன்!

கிசுகிசு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடந்த குளறுபடிகள் குறித்து முதன்மையானவருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்க, ஆளுங்கட்சியின் மாவட்டப் புள்ளிகள் பலருக்கும் போன் போட்டாராம். தங்கள் பகுதியில் விநியோகிக்கப்பட்ட பொருள்களின் நிலை குறித்து அவர்களும் புலம்ப, “இந்தக் குளறுபடிகளுக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?” எனக் கேட்டாராம். “போன ஆட்சியில்கூட பொங்கல் பொருள்களை எந்தக் குறையும் இல்லாமல் கொடுத்தாங்க. இப்போ நடந்த பிரச்னைகளுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுபவமின்மைதான் காரணம்’ என்றார்களாம். இதில் கடுப்பான முதன்மையானவர், அமைச்சரை துறைரீதியான மாற்றம் செய்கிற அளவுக்குத் துணிய, ‘இப்போதைக்கு அப்படிச் செய்தால் நடந்த குளறுபடிகளை நாமே ஒத்துக்கொண்டதுபோலாகிவிடும்’ என்றார்களாம் அதிகாரிகள். #பொங்கவெக்கிறாங்க பாஸ்!

காவிக் கட்சியின் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும், என்கவுன்ட்டர் பயத்தில் தன் மனைவி மூலமாக நீதிமன்றத்தை நாடினார் தடாலடி தாதா. என்கவுன்ட்டர் செய்ய முடியாதபடி சட்டப் பாதுகாப்பையும் பெற்றார். இதில் தலைமை போலீஸ் அதிகாரிக்குத் தாங்க முடியாத ஆத்திரமாம். காதும் காதுமாகப் பேசிவைத்திருந்த விஷயத்தை, தாதாவின் கவனத்துக்குக் கசியவிட்டதே சில அதிகாரிகள்தானாம். கசியவிட்டதோடு மட்டுமல்லாமல், சட்டரீதியான முன்னெடுப்பைச் செய்தால்தான் தப்பிக்க முடியும் என ஐடியாவும் கொடுத்தார்களாம். சீக்கிரமே சம்பந்தப்பட்ட காவல் சரகத்துக்குள் களையெடுப்பு இருக்கும் என்கிறார்கள். # ‘காக்கி’ ஆடுகள்!

கிசுகிசு

ஜாமீனில் வெளியே வந்திருக்கும் மஞ்சள் மாஜி, இலைக் கட்சியின் துணிவானவர், பணிவானர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரிடமும் பேசவில்லையாம். “எலெக்‌ஷன் நேரத்துல அடுத்து தி.மு.க வந்திடுமோங்கிற அச்சத்தில் அத்தனை பேரும் அமைதி காத்தாங்க. அப்போ நான் ஒருத்தன்தான் உரத்துப் பேசினேன். அடுத்தும் அ.தி.மு.க ஆட்சிதான்கிற நம்பிக்கையைக் கொடுக்கப் பாடுபட்டேன். இன்னிக்கு அ.தி.மு.க இத்தனை சீட் பிடிக்க நானும் ஒரு காரணம். ஆனா, இன்னிக்கு நான் இவ்வளவு தூரம் போராடுறப்ப கட்சி என்னையக் கைவிட்டுடுச்சு. நான் எதுக்குப் பேசணும்?” என்கிறாராம் ஆதங்கத்தோடு. சட்டப் போராட்டத்தை முடித்துவிட்டு, சொந்தக் கட்சிக்கு எதிராகவே சரமாரியாக வெடிக்கக் காத்திருக்கிறாராம் மஞ்சள் மாஜி. #அட விடுங்க பாஸ்... தொழில்ல இதெல்லாம் சகஜம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism